Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
யார் உண்மையான நேர்மையாளர்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் -மூன்றாம் சனி; I: ஓசே: 6: 1-6; II: திபா: 51: 1-2. 16-17. 18-19; III: லூக்: 18: 9-14
புனித ஜான் போஸ்கோ சிறுவயதில் தெரியாமல் சமையல் எண்ணையைக் கொட்டிவிட்டார். அந்த நேரம் அவருடைய தாய் வெளியில் சென்றிருந்தார். எண்ணெய் கொட்டியவுடன் தனக்கு அடி விழும் பயந்து கொண்டிருந்தார். இருந்தபோதிலும் அந்த சிறு வயதிலும் தன் தவற்றை உணர்ந்து, செய்த தவறுக்குத் தண்டனை பெற வேண்டும் என்று கருதினார். எனவே வீட்டிலிருந்த ஒரு கம்பை எடுத்து வைத்திருந்தார். தன் தாய் வீட்டிற்கு வந்தவுடன் "அம்மா! சமையல் எண்ணெயைக் கொட்டி விட்டேன். என்னை அடியுங்கள்" என்று அந்த காம்பை தன் தாயிடம் கொடுத்தார். அப்போது அவரின் தாய் "மகனே! எப்போது நீ செய்த தவற்றை உணர்ந்தாயோ, அப்பொழுதே உன்னுடைய தவறு மன்னிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் தவறு செய்யாதே கவனமாயிரு" என்று அன்போடு தன் மகனைக் கட்டி அணைத்தார்.
வாழ்வு நேர்மையோடு வாழப்படும் போது மகத்துவம் அடைகிறது. இன்றைய உலகத்தில் அரசியல் ஒரு குப்பை என்று கூறப்படுவதற்கு காரணம், அங்கு நேர்மை குறைவாகவும் ஊழல் அதிகமாகவும் இருப்பதே. மெய்மை குறைவாகவும் பொய்மை அதிகமாகவும் இருக்கின்ற நிலை மாறும் பொழுதுதான் தூய்மையான அரசியல் உருவாகும். வருகின்ற மாதத்தில் நம்முடைய தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கின்றது. இந்தத் தேர்தலை நாம் தூய்மையான உள்ளத்தோடு எதிர்கொள்ளவேண்டும். அரசியல்வாதிகள் நம்மை மயக்குவதற்காக வெளியிடும் நலத் திட்டங்களான இலவசத்தை கண்டு மயங்கி விடாமல், கடவுளுக்குப் பயந்து இந்த மண்ணில் தூய்மையான அரசியல் நிலவ நம்முடைய வாக்குகளை செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தியானது நேர்மையாக வாழ கற்றுக் கொள்வது எப்படி? என்ற கேள்விக்குப் பதில் கொடுப்பதாக இருக்கின்றது.ஒரு அருமையான நிகழ்வை ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். இருவர் இறைவனிடம் வேண்டுவதற்தற்காக கோவிலுக்கு சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றொருவர் வரிதண்டுபவர். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பரிசேயர்கள் மக்கள் முன்பாக தங்களை நல்லவர்கள் போல் காண்பிக்க பல வழிகளில் முயற்சி செய்து வந்தனர். அந்த மனநிலையின் உச்சகட்டம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். தங்கள் குறைகளை மறைத்துவிட்டு, பிறரை குற்றவாளியாக உருவகப்படுத்தும் மனநிலை. இதுதான் நேர்மையற்ற வாழ்வுக்கு முதற்படி. அதாவது தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள மற்றவரை எந்த அளவு வேண்டுமானாலும் தாழ்மைப்படுத்தி தரக்குறைவாகப் பேசும் மனநிலை.
பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: "கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்". இத்தகைய அரசியல்வாதிப் பரிசேயர்கள் நம் மத்தியிலும் இருக்கின்றனர். பிறரின் தவற்றை மட்டும் சுட்டிக்காட்டி, மக்களை பலிகடாவாக மாற்றி தான் மட்டும் சொகுசாக வாழும் மனிதர்கள் இந்த சமூகத்தில் ஏராளம். நேர்மையான இறைவனின் பிள்ளைகள் என்பவர்கள், தங்களுடைய தவற்றை மட்டும் தான் கடவுளிடம் சமர்ப்பித்து மன்னிப்பு கேட்பர்.பிறருடைய தவற்றை மேற்கோள்காட்டி தங்களை நேர்மையாளர்களாகக் காண்பிக்க மாட்டார்கள். பிறரைக் குற்றவாளியாக்கும் மனநிலையை வேரோடு அழித்து, வரித்தண்டுபவர் கொண்டிருந்த தாழ்ச்சியுள்ள மனநிலையை கொண்டிருக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, `கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்.'' கடவுளின் உண்மையான மன்னிப்பைப் பெற்று நேர்மையான வாழ்வு வாழ, திறந்த மனநிலையோடு நம்முடைய பாவங்களை ஏற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இத்தகைய சிந்தனையைதான் வரிதண்டுபவரின் வாழ்வு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே நேர்மை வாழ்வு வாழ தாழ்ச்சி என்ற புண்ணியத்தை வாழ்வாக்க வேண்டும். எனவே தான் ஆண்டவர் இயேசு "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார். நம்மை ஆளும் ஆளத் துடிக்கும் அரசியல்வாதிகள் தாழ்ச்சியுள்ளவர்களளாக அவர்களுடைய குறைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றார்களா? என்று ஆழமாக சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதே போல நாமும் நம்முடைய தவற்றை ஏற்றுக்கொண்டு தாழ்ச்சியுள்ளவர்களாக மனமாற தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைக்கப்பட்டுள்ளோம். தாழ்ச்சியோடு நாம் வாழும் பொழுது, நிச்சயமாக நாம் நேர்மையோடும் தூய்மையோடும் வாழ முடியும் என்பதில் ஐயமில்லை.
நம்முடைய வாழ்வில் தவறு செய்கின்ற பொழுது அவற்றிலிருந்து பாடத்தையும் நன்மை செய்கின்ற பொழுது இன்னுமான நன்மை தனங்களையும் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். வருகின்ற தேர்தலில் தாழ்ச்சியோடும் நேர்மையோடும் உண்மையோடும் ஆட்சி செய்ய முன் வரும் நபர்களை அடையாளம் கண்டு, தம்முடைய வாக்குகளைச் செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு அரசியலை வெறுக்கவில்லை. அரசியலின் பெயரால் மக்களை ஒடுக்கியவர்களைத்தான் இயேசு கடுமையாக விமர்சித்தார். தூய்மையான அரசியல் இந்த மண்ணில் உருவாக, நாம் நம்முடைய பங்களிப்பை தாழ்ச்சியோடும் நேர்மையோடும் ஒற்றுமையோடும் செலுத்துவோம். இதுதான் உண்மையான இறையாட்சி பணி.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் பிறரை மட்டும் குற்றம் சுமத்திக் கொண்டு நாங்கள் தீமை செய்யாமல் , எங்களுடைய தவற்றையும் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு இறையாட்சி கனவிற்கு சான்று பகரத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
Add new comment