பரிவுள்ளம் புதுவாழ்வுக்கு வழிகாட்டுமா!| குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் ஐந்தாம் சனி - I. தொநூ:  3:9-24; II. தி.பா: 90:2.3-4.5-6.12-13; III. மாற்: 8:1-10

ஒரு ஊரில் செல்வச்செழிப்பு மிக்க குடும்பம் இருந்தது. கணவன் மனைவி இருவருக்கும் அரசு வேலை. அவர்கள் வாழ்வில் எந்தவொரு குறைபாடும் இல்லை. ஆனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் இல்லை. அவ்வளவு பணம் இருந்தும் ஒரு குறைவை உணர்ந்தனர். மருத்துவ சிகிச்சை பெற்றும் குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. இருவரும் ஒரு நாள் அமர்ந்து யோசித்தனர். அப்பொழுது அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து ஏழை குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கல்வி உதவியை செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அவ்வாறாக அவர்கள் தலைமுறையினரை உருவாக்கத் தொடங்கினர். அப்பொழுது ஒரு நபர் அவர்களைப் பார்த்து "இவ்வளவு உதவி செய்கின்ற உங்களுக்கு இதனால் என்ன பயன்?" என்று கேட்டாராம். அதற்கு அந்த குடும்பத் தலைவர் "எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் கடவுள் இவ்வளவு அதிகமான செல்வத்தை கொடுத்தது இச்சமூகத்தில் படிக்க வசதியில்லாத ஏழை குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட அந்த நபர்இவர்களின் பரிவுள்ளத்தையும் நல்ல மனதினையும் கண்டு வியப்பில் ஆழ்ந்தார்.

இந்த நிகழ்வில் வருவது போல தான் கடவுள் பரிவுள்ளத்தோடு வாழ நமக்கு பற்பல வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார். இயேசு கடவுளின் மகன். ஆனால் கடவுள் நினைத்திருந்தால் தன் மகனை நேரடியாக அனுப்பி இருக்கலாம். ஆனால் அவர் நம்மைப் போல ஒரு குழந்தையாக பிறந்து, நம்மைப் போல மனிதராக வாழ்ந்து, மிகச்சிறந்த இறையாட்சி பணியினைச் செய்து பரிவுள்ளத்தோடு எண்ணற்ற புதுமைகளைச் செய்துள்ளார். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் இன்றைய நற்செய்தி.

மாற்கு நற்செய்தியாளர் இரண்டு முறை இயேசு அப்பங்கள் பெருக்கி வல்லசெயல்கள் செய்ததை குறிப்பிட்டுள்ளார்.
இயேசு பலமுறை இதுபோன்ற வல்ல செயல்கள் செய்திருக்கலாம். ஆனால் மாற்கு  நற்செய்தியாளர் இயேசுவை இறைமகன் என்பதற்கு சான்று பகர இந்த நிகழ்வுகளை இரண்டு வகையான பின்னணியில் எழுதியுள்ளார். இந்த வல்லச்செயலானது  இயேசுவின் பரிவுள்ளத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. உணவு என்பது எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையான ஒன்று. இயேசுவின் நற்செய்தி போதனையை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் உணவைக்கூட மறந்து வியப்பில் ஆழ்ந்ததைப்  பார்க்கின்றோம். இயேசு நினைத்திருந்தால் குறைவான நேரத்தில் அவசர அவசரமாக நற்செய்தியைப் போதித்து  விட்டு  வீட்டிற்கு உணவருந்த அனுப்பியிருக்கலாம். ஆனால் இயேசு உடல் சக்தியை கொடுக்கக் கூடிய உணவு விட ஆன்மாவிற்கு சக்தியை கொடுக்கக்கூடிய இறைவார்த்தை என்னும் உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆன்ம  உணவைப் பெற்றுக் கொள்ள உடல் சார்ந்த உணவு தடையாக இருக்கக்கூடாது என்று கூட நினைத்திருக்கலாம்.அதற்குபின் மக்கள் அனைவருக்கும் வயிராற உணவும் அளிக்கிறார். உடல் சார்ந்த உணவும் ஆன்மா சார்ந்த உணவும் வழங்கப்படுவது இயேசுவின் பரிவுள்ளத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு என்பது  குறுகிய வட்டத்துக்குள் சுயநலத்தோடு வாழ்வது அல்ல; மாறாக,  பரிவுள்ளதோடு பிறருக்கு புது வாழ்வை வழங்கும் நோக்கத்தோடு வாழ்வது. இதைத் தான் நமக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டினார். தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் மிகச் சிறப்பான வகையில் கிறிஸ்தவ மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்ததற்கு காரணம்  பரிவுள்ளமே. தங்களிடம் இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து பொதுவுடமை சிந்தனையில் வளர்ந்தனர். இந்த பொதுவுடமை வாழ்வியலைப் பார்த்து ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக மாறி தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பலர் சான்று பகரும் வாழ்வை வாழ்ந்தனர்.

இன்றைய முதல் வாசகத்தில் இந்த உலகத்தைப் படைத்த கடவுளின்  உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதர்கள் கீழ்படியாமையால்  பாவம் செய்து அருளை இழந்தனர் என்பதைக் காண்கிறோம். இருந்தபோதிலும் கடவுள் அவர்களை அழிக்காது அவர்களுக்கு சில தண்டனைகளை மட்டும் கொடுத்து புது வாழ்வுக்கு வழிகாட்டினார். இதுதான் கடவுளின் பரிவுள்ளம். மனிதர்களாகிய நாம் எத்தனை முறை அவரை விட்டு பிரிந்து சென்றாலும் அவரிடம் மனம் வருந்தி திரும்பி வரும்பொழுது நம்மை ஏற்றுக்கொள்பவராகக் கடவுள் இருக்கின்றார். இதுதான் கடவுளின் பரிவுள்ளம். எனவே கடவுள் நம்மை பரிவுள்ளத்தால் அன்பு செய்து ஏற்றுக்கொண்டு புது வாழ்வையும் புது மாற்றத்தையும் கொடுப்பதுபோல அவரின் பிள்ளைகளாகிய நாமும், நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளைப் பரிவுள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு  புது வாழ்வையும் புது மாற்றத்தையும் வழங்கத் தேவையான நல்ல மனதை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
பரிவுள்ளம் கொண்ட இறைவா! உம்மை போல நாங்களும் பரிவுள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்து, இறையாட்சியின் மதிப்பீட்டிற்கு எந்நாளும் சான்று பகர அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

1 + 2 =