சமத்துவ மனநிலையில் வளர்வோமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்
பொதுக்காலத்தின்  ஐந்தாம் வியாழன்    
I: தொநூ:   2: 18-25
II:  தி.பா: 128: 1-2, 3, 4-5
III: மாற்:  7: 24-30

இன்றைய உலகில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பிளவுகளுக்கும் அமைதியற்ற சூழலுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சமத்துவம் நிறைந்த மனநிலை இல்லாமையே. சமத்துவ மனநிலை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய ஒன்று.  கடந்த ஒரு வாரமாக முதல் வாசகத்தில் கடவுளின் படைப்பைப் பற்றி வாசித்து வருகின்றோம். கடவுள் தான் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். எல்லாப் படைப்புகளையும் படைத்துவிட்டு இறுதியில் கடவுள் மனிதனைப் படைத்தார். அதிலும் குறிப்பாக தன்னுடைய உருவிலும் சாயலிலும் மனிதனைப் படைத்தார். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது கடவுள்  மனிதரோடு சமத்துவத்தை காண முயற்சி செய்தார்.

தனக்கும் மனிதருக்கும் எந்த ஒரு வேறுபாடும் இருக்கக் கூடாது. மனிதன் என்னுடையவன் இன்னும் உரிமை கொண்டாடவே கடவுள் வேறு எந்த உருவிலும் சாயலிலும் படைக்காமல், தன்னுடைய உருவிலும் சாயலிலும் மனிதனைப் படைத்தார்.  இது மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் சமத்துவ மனநிலையோடு வாழ அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்தவ ஆலயங்களில்  மட்டும்தான் வாழுகின்றோம். ஆனால் பல நேரங்களில் அன்றாட வாழ்வில்  நாம் அதைப் பிரதிபலிப்பதில்லை. ஏனெனில் நம்முடைய சுயநலமும் நான்தான் உயர்ந்தவன் என்ற மனநிலையும்தான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றது.  கடவுள் நம்மைத் தன்னுடைய உருவிலும் சாயலிலும் படைத்தது நம்மை அவரின் பிள்ளைகளாக ஏற்றதன் அடையாளம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட சாதி,மதம், மொழி, நாடு, இனம் என்னும் பல பிளவுகளை நம்மில்  ஏற்படுத்தி சமத்துவ மனநிலை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு வாழும் மனநிலை கடவுளுக்கு எதிரான மனநிலை. கிறிஸ்தவ மதிப்பீட்டிற்கும் மனித மாண்பிற்க்கும் எதிரான மனநிலை. இவற்றைக் களைய இன்றைய நற்செய்தி வாசகம் சிறிய பெனிசிய  இனத்தைச் சேர்ந்த பெண்ணின் வழியாக ஆண்டவர் இயேசு இறையாட்சி பணியில் பார்வை தெளிவு பெற்றததை எடுத்துக் கூறுகிறது. ஆண்டவர் இயேசு இறைமகனாக இருந்தபோதிலும், அந்த புறவினத்துப் பெண்ணைச் சந்திக்கும் வரை யூத மக்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் இயேசு அந்தப் பெண்ணிடம் உரையாடியதன் வழியாக இறையாட்சிப் பணியில் சமத்துவ இலக்கை பெற்றார்.

புறவினத்துப் பெண் தன்னுடைய மகளைப் பிடித்திருந்த பேயை ஓட்டுமாறு நம்பிக்கையோடு கேட்டுக்கொண்டார். ஆனால் ஆண்டவர் இயேசு அவரைப் பார்த்து, " முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்று கூறினார்.  இதன் விவிலியப் பின்னணி  இஸ்ரயேல் மக்கள் தான் இறையாட்சி பணியில் முக்கியத்துவம் படுத்தப்படுகிறார்கள். எனவே அவர்களுக்குத் தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பின்பு தான் மற்றவர்களுக்குக் முக்கியத்தும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே.  

ஆனால் அப்பெண் "ஆம் ஐயா,  ஆனாலும் மேசையின் கீழிருக்கும்  நாய்க்குட்டிகள் சிறுபிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை திண்ணுமே "என்று பதில் கூறினார்.  இதன் விவிலியப் பின்னணி என்னவென்றால் இறையாட்சிப் பணியில்  இஸ்ரயேல் மக்களுக்கு முக்கியத்துவம்  கொடுத்தாலும் அவர்களுக்குப் போக தங்களுக்கும் அதாவது புறவினத்தவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம் என  அப்பெண்தனது இறை நம்பிக்கை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

அந்தப் பெண்ணின் ஆழமான இறைநம்பிக்கை இறையாட்சிப் பணியில் இயேசுவின் பார்வையை மாற்றியது. தன்னுடைய இறையாட்சிப் பணி அனைவருக்கும் உரித்தானது என்பதை இயேசு அந்த பெண்ணின் வழியாக உணர்ந்துகொண்டார். இயேசு இறைமகனாக இருந்தபோதிலும் அந்தப் பெண்ணின் வழியாக தந்தையாம் கடவுள் இறையாட்சியின் சமத்துவ பணியை வெளிப்படுத்தியுள்ளார் என உணர்ந்தார். எனவே அந்தப்பெண்ணின் நம்பிக்கையின் பொருட்டு அவரின் மகளுக்கு நலமளித்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிப்பணி  இஸ்ராயேல் மக்களைத் தாண்டி எல்லோருக்கும் உரித்தான பணியாக மாறியது. இத்தகைய மனநிலையைத் தான் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் இன்றைய உலகில் திருஅவை என்ற ஏடும் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய இறையாட்சி பணியை நாம் செய்திட  அழைப்பு விடுக்கின்றது. எனவே என்னுடைய அன்றாட வாழ்வில் அனைவரையும் உள்ளடக்கிய நற்செய்திப்பணி செய்திட  தேவையான சமத்துவ மனநிலையை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! பிறரை பாகுபாடு பார்க்காமல் சமத்துவ மனநிலையோடு ஏற்றுக் கொள்ளும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

Add new comment

1 + 6 =