மனித நேயமே சட்டம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


இன்றையவாசகங்கள்(19.01.2021)
பொதுக்காலத்தின் இரண்டாம் செவ்வாய் 
I: எபிரேயர்6:10-20
II: திபா: 111:1-2,4-5,9,10
III: மாற்கு:2:23-28

சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் கண்ட காணொலி என் மனதை மிகவும் தொட்டது. ஒருவர் உணவு விடுதியிலிருந்து உணவுப் பண்டங்களை வாங்கி க்கொண்டு சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நாய் அவர் கையிலிருந்த உணவுப் பொட்டலத்தைத் தட்டிப் பறித்துக்கொண்டு ஓடியது. அந்த மனிதரும் அந்த நாயைத் துரத்திக் கொண்டு ஓடினார். அப்போது திடீரென அந்த நாய் ஓரிடத்தில் நின்று நடக்க இயலாத தள்ளாடும் வயதுடைய ஒரு முதியவருக்கு அந்த உணவைக் கொடுத்தது. இதைக் கண்ட அந்த மனிதர் மனம் நெகிழ்ந்தவராய் வேகமாகக் கடைக்குச் சென்று இன்னும் மிகுதியாக உணவுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்ததாக அக்காணொளிக் காட்சி அமைந்திருந்தது.

இதைப் பார்த்த போது எனக்கு வேறு ஒரு சிந்தனை எழுந்தது. அந்த நாய்க்குப் பதிலாக பசியாக இருக்கும் ஒரு மனிதர் அந்த உணவுப் பொட்டலத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடியிருந்தால் என்ன நடந்திருக்கும்? இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஓடிச்சென்று அவரைப் பிடித்து அடித்து திருட்டுப்பட்டமல்லவா கொடுத்திருப்போம். ஏனென்றால் நமக்கு சட்டமும் ஒழுக்கமும் நான் முக்கியம்.

சட்டங்கள் மனித நேயத்தை காப்பதற்காகவே. விதிமுறைகள் நீதியை காப்பதற்கான ஒரு கலை. மனித நீதியைக் காக்காத எந்த ஒரு சட்டமும் சட்டமல்ல. ஆனால் இதை நாம் உணர்வதில்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர்களின் மனநிலை இது தான். திருச்சட்டத்தின் ஒரு புள்ளியைக் கூட கடைபிடிக்கத் தவறக்கூடாது என்பது அவர்களின் கருத்து. அதுவும் ஓய்வுநாள் மிகத் தூய்மையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். ஏனெனில் அது ஆண்டவரின் நாள். 

ஆனால் இயேசுவோ ஆண்டவரின் நாளில் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களை மதித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து பல அருஞ்செயல்களை ஆற்றினார் என நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். அதன்  அடிப்படையில் தான் ஓய்வு நாளன்று கதிர்களைக் கொய்து உண்டு தங்கள் பசியை ஆற்றிக்கொண்ட சீடர்களைக் குறைகூறிய பரிசேயர்களுக்கு, தாவீதை எடுத்துக் காட்டாகக் காட்டி தனிமனிதன் தன் தேவையைப் பூர்த்தி செய்வது அவனுடைய நீதி என்பதையும், அதை ஆதரிப்பது மனித நேயம் என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.

இக்கருத்துக்களைச் சிந்திக்கும் நாம், நம்முடைய மனித நேயத்தின் ஆழத்தை சோதித்துப் பார்ப்போம்.அதை செயல்படுத்துகிறோமா என ஆய்வு செய்வோம்.தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காக குற்றமே செய்தவராயினும்,சட்டத்தை மீறுபவராயினும் மனித நேயத்தோடு அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.அதற்கான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பே உருவான இறைவா! நாங்கள் மனித நேயம் மிக்கவர்களாய் வாழ்ந்து , தங்கள் அடிப்படைத்  தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாதவர்களுக்கு உதவும் மனம் தாரும். ஆமென்.

 

Add new comment

1 + 1 =