அனைவரையும் சமமாக நடத்துவோமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


Equality

பொதுக்காலத்தின் முதலாம் சனி - I. எபிரேயர் 4:12-16; II. திபா: 19:7,8,9,14; III. மாற்கு 2:13-17

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலே வளர்ந்து படிப்புகள் பயிற்சிகளையெல்லாம் முடித்துவிட்டு விடுதலைபெற்று சமூகத்திலே நல்லவனாய் வாழ வேண்டும் என்று ஆவலாய் வெளிவந்த அந்த நபருக்கு காத்திருந்தது பல அதிர்ச்சிகளும் அவமானங்களுமே. செல்லும் இடமெல்லாம் நிராகரிப்பு. அவரை வேலைக்கு அமர்த்த யாரும் முன்வரவில்லை. சிறுவயதிலேயே தவறு செய்து சிறைக்குச் சென்றவரை எப்படி நம்புவது என்ற தயக்கம். குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்துத் திருந்தி வந்த பிறகும் குற்றவாளி என்ற பெயர் மாறவில்லை. இவ்வளவு ஏன் சொந்த வீட்டில் கூட யாரோ ஒருவர் போல வாழ வேண்டிய சூழ்நிலை. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு குற்றவாளியாகவே இருந்துவிடலாம் என்று மீண்டும் புறப்பட்டார் அந்த நபர் தவறுகள் செய்ய.

ஆம் அன்புக்குரியவர்களே இன்று சமுதாயத்தில் குற்றவாளிகள் அதிகரிப்பதற்குக் காரணம் இதுபோன்ற நிகழ்வுகள்தான். எல்லாருமே ஒருவகையில் தவறுகள் செய்கிறோம். ஆனால் நமது தவறுகளுக்கான காரணத்தைக் கூறிவிட்டு நம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளும் நாம்,பிறரை மட்டும் பாவிகள், கெட்டவர்கள்,குற்றவாளிகள் எனத் தீர்பிட்டு அவர்களை மட்டமாக நடத்துகிறோம். ஒதுக்கிவைக்கிறோம். இத்தகைய மனநிலை இயேசு காலத்தில் வாழ்ந்த யூதர்களிடம் மிக அதிகமாகவே இருந்தது. தங்களை நல்லவர்கள் எனவும்,பிறரைப் பாவிகள் எனவும் திண்ணமாய் எண்ணினர்.

ஆனால் இயேசுவோ யாரையும் தீர்ப்பிடவில்லை. அனைவரையும் சமமாக, மனிதர்களாக மதித்தார். ஏற்றத்தாழ்வு பார்க்கவில்லை அவர். அனைத்தும் அறிந்த போதகர் பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் உணவருந்துகிறார் எனப் பலர் விமர்சித்த போதும் அவர் பின்வாங்கவில்லை. பாவத்தை வெறுத்த இயேசு பாவிகளை வெறுக்கவில்லை. தன்னுடைய அன்பும், அக்கறையும் பாவிகளுடைய வாழ்வை மாற்றும் என அவர் நம்பினார். அவர்களை இருக்கின்றவாரே ஏற்றுக்கொண்டார். இதையே அவர் "மருத்துவர் நோயற்றவருக்கல்ல நோயுற்றவருக்கே தேவை. நேர்மையாளரை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்" என்ற வார்த்தைகள் மூலம் உறுதிப்டுத்துகிறார். வரிதண்டுபவரான லேவியை தன் சீடராக அழைக்கிறார். 

நம்முடைய வலுவின்மையை புரிந்து கொள்ள இயலாதவரல்ல நம் இயேசு என்ற செய்தி இன்றைய முதல் வாசகத்தில் நமக்குத் தரப்பட்டுள்ளது. ஏனென்றால் இயேசுவும் சோதிக்கப்பட்டார். வலுவற்றவர்கள் நாம். மற்றவருடைய வலுவற்ற நிலையை இயேசுவைப் போல புரிந்து கொள்ள முயலுவோம். அது நாமும் மற்றவரும் திருந்தி வாழ வழிவகுக்கும். யாரையும் ஒதுக்காமல், பாவி, குற்றவாளி என்றெல்லாம் தீர்ப்பிடாமல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் நடத்துவோம். அதற்கான வரம் கேட்போம்.

இறைவேண்டல்

அனைவரையும் சமமாக அன்பு செய்யும் இறைவா, எங்களைப் போலவே பிறரும் வலுவற்றவர்கள். தவறக்கூடியவர்கள் என்பதை உணர்ந்து, யாரையும் ஒதுக்காமல் சமநிலையோடு நடத்தும் மனம் தாரும். ஆமென்.

Add new comment

9 + 6 =