நல்ல நண்பர்களா நாம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் முதலாம் வெள்ளி - I. எபி: 4:1-5,11; II. திபா: 78:3,4,6,7,8; III. மாற்: 2:2-12

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவவியல் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் அருட்சகோதரர்களாகிய நாங்கள் தேனி அருகிலுள்ள கும்பக்கரை என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் பொழுது பாறையில் வழுக்கி என் தலையில் காயம் ஏற்பட்டது. இரத்தம் அதிகமாக வடிந்தது. நான் மயக்க நிலையை அடைந்தேன். அப்பொழுது என்னுடைய நண்பர் என்னோடு அருகிலிருந்து தன்னுடைய வார்த்தையாலும் உடனிருப்பாலும் திடப்படுத்தினார். நான் வேதனையுற்ற போது "உனக்கு எத்தீங்கும்  நேரிடாது" எனக்கூறி என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனக்கு தையல் போடும் பொழுது என் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அப்பொழுது அந்த இரத்தத்தை பார்த்ததும் அவருக்கும் கூட ஒருவித மயக்கம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் உடனிருப்பால் என்னை திடப்படுத்தி நான் அந்தக் காயத்திலிருந்து குணம் பெறும்வரை மிகுந்த அக்கறையோடு என்னை கவனித்துக் கொண்டார். அதேபோல தத்துவவியல் படிக்கின்ற பொழுது புரியாத பாடங்களை தன்னுடைய தனிப்பட்ட நேரத்தைக் கூட செலவழித்து எனக்குப் புரிய வைப்பார். எனக்குள் எழுத்து திறமை இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி மாதாந்திர ஆன்மீக இதழ்களுக்கு கட்டுரை எழுத உற்சாகப்படுத்தினார். நான் தவறு செய்கின்ற பொழுது தவற்றை தவறு என சுட்டிக்காட்டி என்னை நல்வழிப்படுத்தினார். ஆன்மிகத்தில் மென்மேலும் வளர என்னை வழிகாட்டினார்.

எனக்கு பல வகையில் பக்கத்துணையாக இருந்து என்னுடைய குருத்துவ பயிற்சியை சிறப்பாக மேற்கொள்ள வழிகாட்டினார். இன்றளவும் என்னோடு இறையில் படித்துக் கொண்டிருக்கிறார். இங்கும் கூட பல்வேறு வகையில் என்னை ஆன்மிகத்திலும் சமூக அக்கறையிலும் அறிவிலும் திறமையிலும் சிறந்து விளங்க என்னை வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். அவர்தான் என்னுடைய நண்பர் தூத்துக்குடி மறை மாவட்டத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் சவரிராஜ். இவர் எனக்கு நண்பராக கிடைத்தது கடவுள் கொடுத்த கொடையாக நினைக்கின்றேன். ஏனென்று சொன்னால் என்னுடைய  அழைத்தல் வாழ்வில் தள்ளாடிய நேரத்தில் எனக்கு துணையாக இருந்து வழிகாட்டியவர். இப்படிப்பட்ட நல்ல நண்பர்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்ற பொழுது நிச்சயமாக நம் வாழ்வு மகிழ்வையும் நிறைவையும் பெறும்.

நம்மைப் படைத்த கடவுள் நமக்கு நண்பரைப் போல இருக்கின்றார். இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க கடவுள் தேர்ந்தெடுத்த மோசே, தன் நண்பனைப் போல கடவுளை சந்தித்தார். அதேபோல் இஸ்ராயேல்  மக்களை எகிப்திலிருந்து கானான் நாட்டிற்கு அழைத்து வருகின்ற பொழுது பகலில் மேகத்தூணாகவும் இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து வழிகாட்டினார் கடவுள். மேலும் ஒரு நண்பரைப் போல இஸ்ரயேல் மக்களின் இன்ப துன்பங்களில் உடனிருந்து அவர்களை வழிநடத்தினார்.

அதேபோல மீட்பின் கனியை தங்களுடைய பாவத்தின் பொருட்டு சுவைக்கத் தவறிய மக்களை மீட்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன் ஒரே மகனையே இவ்வுலகிற்கு பாவக் கழுவாயாக அனுப்பினார். ஆண்டவர் இயேசுவும் ஒரு நண்பருக்குரிய மனநிலையில் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நோயுற்ற, சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களை அன்பு செய்தார். அதன் வெளிப்பாடுதான் அவருடைய பல்வேறு போதனைகளும் வல்ல செயல்களும் . இயேசு ஒரு நண்பரைப் போலவே மிகச்சிறந்த இறையாட்சி பணியை செய்தார். அவர் வல்லசெயல் செய்தது தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, புது வாழ்வை மற்றவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக. அதே போல இயேசு நட்பிற்கு மதிப்பு அளிப்பவராக இருக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு வீட்டில் இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டு வந்தனர். மக்கள் அதிகமாக இருந்ததால் அவரை இயேசுவுக்கு முன்னால் கொண்டு வர முடியவில்லை. எனவே இயேசு இருந்த  வீட்டின் கூரையை உடைத்து திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு கீழே இறக்கினார்கள். இயேசு அந்த முடக்குவாதமுற்றவரின் நண்பர் நால்வரின் நம்பிக்கையைக் கண்டு "மகனே!  உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறி நலம் அளித்தார்.

முடக்குவாதமுற்ற மனிதர் தன்னுடைய அடிப்படைத் தேவைகளை கூட நிவர்த்தி செய்ய முடியாதவர். அப்படிப்பட்ட அந்த மனிதரின் துன்பத்தை அறிந்து கொண்ட அவரின் நண்பர்கள் அவருக்கு நலம் அளிக்க இயேசுவிடம் கொண்டு சென்றனர். இது அந்த நண்பர் நால்வர் இயேசுவின் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையையும் முடக்குவாதமுற்ற அந்த நண்பரின் மீதுள்ள அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. என்றும் நண்பராய் இருக்கக் கூடிய ஆண்டவர் இயேசுவும் தன் அன்பினை முடக்குவாதமுற்ற  மனிதரின் பாவங்களை மன்னிப்பது வழியாக நலம் அளிக்கின்றார். முடக்குவாதமுற்ற அந்த மனிதர் உடலளவில் மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, பாவக்கறையினால்  அவரின் ஆன்மாவும் முடக்குவாதமுற்றிருந்தது. எனவேதான் இயேசு ஒரு நண்பருக்குரிய மனநிலையில் அவரின் பாவத்தை மன்னித்து நலமளித்தார். 

இதைக்கண்ட மறைநூல் அறிஞர்கள் இயேசு பாவங்களை மன்னிப்பதைப் பார்த்து விமர்சனப்படுத்துகின்றனர். ஆனால் ஆண்டவர் இயேசு "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்பதை சுட்டிக்காட்டி மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். மன்னிப்பது நலமான வாழ்வை வழங்கும். இயேசு இறையாட்சி பணி செய்த பொழுது முடக்குவாதமுற்றவருக்கு உதவி செய்த அந்த நான்கு நண்பரைப் போல பலர் ஒத்துழைப்பும் கொடுத்தார்கள். மறைநூல் அறிஞர்களை  போன்ற எதிர்மறை கருத்துக்களை கொண்டவர்களும் இருந்தார்கள். இயேசு எதையும் கண்டு தளர்ந்து விடாமல் தனது நிலைப்பாட்டில் நிலைத்திருந்து ஒரு நண்பரைப் போல எல்லா மக்களையும் அன்பு செய்து புது வாழ்வை வழங்கினார். இப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருக்க தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
நல்ல நண்பராகிய இயேசுவே! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் துன்பப்படுகின்ற மக்களுக்கு துணையாக இருந்து ஒரு நண்பரைப் போல அவர்களின் துயர் தீர்க்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

Add new comment

7 + 1 =