இயேசுவின் பெருமைமிக்க சகோதர சகோதரிகளா நாம்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


இன்றையவாசகங்கள் (12.01.2021)பொதுக்காலத்தின் முதலாம் செவ்வாய்  
I: எபி: 2: 5-12
II: திபா: 8: 1,4,5-6,6-8
III: மாற்: 1: 21- 28

 

ஒரு ஏழை விதவைத் தாய், தன்னுடைய ஒரே மகனை கடினமான வேலைகள் செய்து படிக்கவைத்தார்.
பட்டணம் சென்று படித்துவிட்டு வந்த தன் மகனின் நண்பர்கள் வீட்டிற்கு வருவதாக செய்தி வந்தது. பரபரப்பாக வீட்டை ஒழுங்குபடுத்தத் தொடங்கினான் மகன். தன்னுடைய குடும்ப சூழ்நிலையைக் கொஞ்சம் கூட உணராமல் வீட்டில் போதிய அளவிற்கு வசதி இல்லை, பொருட்கள் இல்லை என்று தன்னுடைய தாயைக் குறை கூறிக்கொண்டிருந்தான். ஒருவழியாக வீட்டை ஒழுங்கு செய்தான். தாயும் நல்ல உணவுகளை எல்லாம் தயாரித்து வைத்தார். நண்பர்களை எதிர்பார்த்து இருந்த சமயம் மகன் தன் தாயை அழைத்து "என் நண்பர்கள் முன் தென்படவேண்டாம் " என கண்டிப்பாய் கூறினான். "சரி பறவாயில்லை என் மகனின் மதிப்பு கெட்டுவிட வேண்டாம்" என தாய் ஒதுங்கிக் கொண்டார். நண்பர்களும் வந்தார்கள். விருந்து உபசரணைகள் எல்லாம்  நிறைவுற்றது. நண்பர்களில் ஒருவர் திடீரென அந்தத் தாயைப் பார்க்க நேர்ந்தது. அந்த நண்பர் அந்தத் தாயைச் சுட்டிக் காட்டி "யாரிவர் ?"என்று வினவ, "வீட்டு வேலைக்காரி" என்று கூறினான் மகன். தாயின் இதயம் அக்கணமே நின்று போனது.

இது ஒரு உண்மைச் சம்பவம். நம்முடைய மதிப்பு குறையக் கூடாது என்பதற்காக நம்மில் எத்தனை பேர் நம் குடும்ப உறுப்பினர்களையோ, நண்பர்களையோ, நம் உறவுகளையோ மற்றவர் முன் ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறோம் என ஆழமாகச் சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். நம்மைப் படைத்த ஆண்டவர் நம்மைத் தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ள வெட்கப்படவில்லை. நம்முடைய வாழ்வு இருள் நிறைந்ததாக இருந்த போதும், நாம் பாவம் செய்த போதும், அவருடைய உடன்படிக்கையை மீறிய போதும் நாம் அவர் பிள்ளைகள் என்பதை அவர் மறுப்பதில்லை. நம்மை வானதூதர்களை விட சற்றே சிறியவராகப் படைத்தார் கடவுள் எனவும் அவ்வளவு பெரிய கடவுள் சிறிய மானிடராகிய நம்மை நினைப்பதற்கு நாம் யார் எனவும் திருப்பாடல் 8 ல் எழுதப்பட்டிருப்பதை இன்றைய முதல் வாசகமானது நமக்கு சுட்டிக்கிறது. தந்தை கடவுளின் வழியில் இயேசுவும் நம்மை அவருடைய சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்ள வெட்கப்படவில்லை என்ற கருத்தும் இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலகத்தை ஆளும் இறைவனும், இறைமகனும் நம்மை ஏற்றுக் கொள்ள வெட்கப்படாதிருக்கும் போது, நாம் மட்டும் ஏன் மற்றவரைத் தாழ்வாக மதிப்பிட்டு ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறோம். இத்தகைய மனநிலை நம்மிடம் இருந்தால் நாம் இயேசுவின் பெருமைமிக்க சகோதர சகோதரிகளாய் இருக்க முடியாது. 

இயேசுவின் சகோதர சகோதரிகளாய் இல்லாத நிலையில் இயேசுவை நம் வாழ்வில், அனுதின நிகழ்வுகளில் நிச்சயம் கண்டறிய இயலாது. இன்றைய நற்செய்தியில் அசுத்த ஆவிகூட இயேசு யார் என்பதை நன்றாக உணர்ந்ததாக வாசிக்கிறோம். தூய ஆவியை பெற்றிருக்கிற நம்மால் இயேசுவைக் கண்டறிய முடிகிறதா என சிந்தித்துப் பார்ப்போம். நம்மில் பிறரை தாழ்வாகக் கருதி, அவர்களை எற்றுக்கொள்ளாத மனநிலை உள்ளவரை அவர்களில் வாழும் இயேசுவையும் நமக்குள் உறையும் இயேசுவையும் கண்டறிய இயலாது. எனவே இச்சிந்தனைகளை மனதில் இறுத்தி, இயேசுவின் பெருமைமிக்க உடன்பிறப்புகளாக மாறும் வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

எம்மை ஏற்றுக்கொள்ளத் தயங்காத இறைவா, உம்மைப் போலவும்,இயேசுவைப் போலவும் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு, எமக்குள் வாழும் உம்மைக் கண்டறியும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

10 + 10 =