திருமுழுக்கு ஒரு மறுபிறப்பா! | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection | Baptism of the Lord


ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா - பொதுக்காலத்தின் முதலாம் ஞாயிறு - I. எசா: 55:1-11; II. எசா 12:2-3.4.5-6; III. 1யோவா: 5:1-9; IV. மாற்: 1:7-11

சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் கண்ட ஒரு செய்தி. காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் மகள், அதே காவல் துறையில் மிக உயரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை மகிழ்ச்சியைடைந்தார். தன் மகளைக் குறித்து பெருமையடைந்தார். தன் மகளைப் பெருமைப்படுத்தும் விதமாக சாலையில் அனைவரின் முன்னிலையில் காவல்துறை முறைப்படி தன் மகளுக்கு "சல்யூட்" அடித்து தன் பெருமிதத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு அந்த மகளை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியது. 

நம்முடைய அருமை பெருமைகளை யார் பாராட்டாவிட்டாலும், அவற்றைக் கொண்டாடுபவர்கள் நம் பெற்றோர்கள்.நம்முடைய சின்னச் சின்ன வெற்றிகள் கூட அவர்கள் பார்வையில் பெரிய சாதனை தான். அதிலும் குறிப்பாக நம்முடைய பெற்றோருக்கு நாம் கீழ்படிந்து அவர்கள் விருப்பத்திற்கேற்ற பிள்ளைகளாய் வாழ்ந்தோமானால் இவ்வுலகத்திலேயே நாம் தான் சிறந்தவர்கள் என மார்தட்டிக் கொள்வார்கள். இதே போன்ற ஒரு அனுபவத்தை இயேசு பெறுகிறார்.

இன்று திருஅவையோடு இணைந்து இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். தந்தைக் கடவுளின் விருப்பத்தை ஏற்று, உலகம் தோன்றுமுன்பே இருந்தவரான வார்த்தை மனுஉருவாகி, குடும்பத்திலே வளர்ந்து முப்பது ஆண்டுகளாய்த் தன்னைத் தயாரித்து தந்தையின்  திருஉளத்தை நிறைவேற்றப் புறப்படும் முன்பு திருமுழுக்குப் பெறுகிறார் இயேசு. தன் விருப்பத்தை நிறைவேற்ற மனமுவந்து தன்னைக் கையளித்த தன் மகனைப் பெருமைப்படுத்தி "என் அன்பார்ந்த மகன் இவரே" என்று சான்று பகர்கிறார் கடவுள். கடவுளின் இவ்வார்த்தையும் தூய ஆவியின் திடப்படுத்துதலும் இயேசுவின் பணி வாழ்க்கைக்கு பெரும் உந்து சக்தியாய் அமைந்தது.  கடவுளின் சான்று மனிதரின் சான்றைவிட மேலானது என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் குறிப்பிடுகிறார். இந்த அப்பா அனுபவமே இயேசுவின் மிகப்பெரிய பலமானது.  

இயேசுவின் திருமுழுக்கு கடவுள் மனித வாழ்வில் பங்கெடுக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பாவத்தில் உழன்று கிடந்த மக்களை மீட்க, பாவமே செய்யாத கடவுளின் மகன் பாவ மன்னிபிற்கான திருமுழுக்கை ஏற்றுக்கொள்கிறார். கடவுளின் நற்சான்றைப் பெறுகிறார். நாம் பெற்ற திருமுழுக்கு கடவுளின் இயல்பில் நாம் பங்கெடுப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிறவிப் பாவத்தோடு நாம் பிறந்த போதும் திருமுழுக்கினால்  அப்பாவம் நீக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளாக நாம் மாறுகிறோம். அன்று "என் அன்பார்ந்த மகன் இவரே; என் அன்பார்ந்த மகள் இவரே" என்ற வார்த்தைகளைக் கூறி கடவுள் நமக்கும் சான்றளிக்கிறார். இவ்வாறு கடவுள் நமக்குச் சான்று பகர்வதன் நோக்கம் நாம் அவருக்கு சான்று பகரவே. இயேசுவின் திருமுழுக்கு இறையாட்சிப் பணிக்கு அவரைத் தூண்டியது.தன் பணிகளால் கடவுளுக்கு சான்று பகர்ந்தார் இயேசு.

இயேசுவின் திருமுழுக்கு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றது. இயேசு திருமுழுக்கின் வழியாக தந்தை இறைவனாலும், தூய ஆவியினாலும் திடப்படுத்தப்பட்டார். 30 ஆண்டுகள் தன்னையே ஆயத்தப்படுத்திய பிறகு தன்னுடைய பணி வாழ்வை தொடங்கு விதமாக இறை மகனாகிய இயேசு கிறிஸ்து யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். இறை மகனாகிய இயேசு கிறிஸ்து மனமாற வேண்டிய பாவிகள் பெறவேண்டிய திருமுழுக்கு ஏன் பெற வேண்டும்?  என்ற கேள்வி நம்மில் எழலாம். இதற்கான காரணங்களை இன்று சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 

முதலாவதாக, பாவிகள் திருமுழுக்கு பெற வேண்டிய இடத்தில் இயேசு திருமுழுக்கு பெற்றது பாவிகளை அன்பு செய்வதை சுட்டிக்காட்டுகிறது. "நேர்மையாளர்களை அல்ல; பாவிகளையே தேடி வந்தேன்" என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர் திருமுழுக்குப் பெறுவதன் வழியாக வாழ்வாக்கப்படுகிறது. இயேசு பாவிகளுக்கு மனமாற்ற வாழ்வுக்கான அழைப்பு விடுக்கிறார். தன்னை ஒரு முன்மாதிரியாக அவர்களுக்கு சுட்டிக்காட்டி அவர்களும் தூய வாழ்வு வாழ்ந்து இறை கருவிகளாக மாற அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டாவதாக, யோர்தான் நதிக்கரையில்  திருமுழுக்குக் கொடுத்து வந்த திருமுழுக்கு யோவானுக்கு இறைமகன் இயேசு ஒரு சிறப்பு அங்கீகாரம் கொடுக்கிறார். திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணியில் எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு உண்மையாக வாழ்ந்து இயேசுவின் வருகையை செம்மைப் படுத்தினார். மேலும் பாவிகளை மனமாற்றம் பெறச்செய்து மீட்பின் கனியைச் சுவைக்க வழிகாட்டினார். தன் பணிக்காலம் முழுவதும் தான்பெற்ற அழைப்பில் உறுதியாக இருந்து உண்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் சான்று பகர்ந்து தனது இரத்தத்தை சிந்தி நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தார். எனவே தான் ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானின் உண்மைத் தன்மையை அறிந்து அவரிடம் திருமுழுக்குப் பெறுவதன்  வழியாக அவருக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தார்.

மூன்றாவதாக, யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு யோவான் தண்ணீரால் பாவிகளுக்கு திருமுழுக்குக் கொடுத்து மனமாற்ற வாழ்வுக்கு வழி காட்டினார். தண்ணீர் பாவிகளை தூய்மையுள்ளவர்களாக மாற்றியது. இயேசுவும் அந்த தண்ணீரில் பாவிகளை போல தூய்மை பெற வரவில்லை; மாறாக, தண்ணீரில் இறங்கி திருமுழுக்கு பெறுவதுதன் வழியாக தண்ணீர் தூய்மையாக மாறியது. 

நான்காவதாக,  இயேசு திருமுழுக்கு பெறுவதன் வழியாக அப்பா அனுபவத்தை பெறுகிறார். இயேசுவின் தகுதியுள்ள நிலையை கண்டு தந்தையாம் கடவுள் பூரிப்படைகிறார். தூய ஆவி வெண்புறா போல இறங்கி வந்து அப்பா அனுபவத்தைப் பெற்று இறையாட்சி பணியில் திடம் பெற இந்த திருமுழுக்குக்கானது இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தில் அடிப்படையாக இருந்தது. இயேசுவின்  திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும் தந்தையாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள இவ்விழா ஒரு சிறப்பான அழைப்பாக இருக்கின்றது. 

ஐந்தாவதாக, இயேசு திருமுழுக்கு பெறுவதன் வழியாக, இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கேற்ப வாழ்வதற்கு திருமுழுக்கு ஆணிவேராக இருக்கின்றது என்ற ஆழமான இறையியல் சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார்.  

இயேசுவின் திருமுழுக்கின் வழியாக இயேசு  தனது இலக்கில் முழு தெளிவு பெற்று தன்னுடைய இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். இயேசு அன்னை மரியா வழியாக இம்மண்ணுலகில் பிறந்தாலும் திருமுழுக்கின் வழியாக புது பிறப்பை அடைந்துள்ளார். இதுதான் இவருக்கு உண்மையான பிறந்தநாள். இதற்காகத்தான் இயேசு குழந்தையாக இந்த உலகிற்கு அனுப்பப்பட்டார். 

எனவே இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவை கொண்டாடும் நாம் இயேசுவைப் போல பாவிகளையும் சமூகத்தில் அடையாளம் காணப்படாத மக்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு புது வாழ்வு வழங்க  அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு திருமுழுக்கு யோவானின் இறைப்பணிக்கு அங்கீகாரம் கொடுத்தது போல நாம் உண்மையாக உழைக்கின்ற மக்களுக்கு அங்கீகாரம் கொடுத்து அவருடைய வாழ்வை மேம்படுத்த ஒரு கருவியாக பயன்பட முயற்சி  செய்வோம். இயேசு யோர்தான் நதிக்கரையில் தண்ணீரில் இறங்கி தண்ணீரை தூய்மைப்படுத்தியதைப்போல நாமும் இச்சமூகத்தில் உள்ள தீமைகளை அகற்றி அனைவரும் இயேசுவின் மதிப்பீடுகளை உள்வாங்கி தூயவர்களாக  வாழவும், இறைக் கருவிகளாக மாறவும் முயற்சி செய்வோம்.  இயேசு அப்பா அனுபவத்தையும் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றது போல திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெபத்தின் வழியாகவும் தவத்தின் வழியாகவும் அப்பா அனுபவத்தை மென்மேலும் பெற்று நல்ல  இறை கருவிகளாக மாற முயற்சி செய்வோம். இயேசு தன்னுடைய பணி வாழ்வின் தொடக்கத்தில் திருமுழுக்குப் பெற்று தனது பணியை வல்லமையோடு தொடங்கியது போல நாமும் நமது அன்றாட வாழ்வில் இயேசுவைப்போல வல்லமையோடு பணிசெய்து இறையாட்சி மதிப்பீடுகள் வாழ்வாக்கப்பட தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்குப் பெருவிழாவின் வழியாக நாங்களும் அவரை போல எங்கள் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும். நாங்கள் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குப் பெற்று உம்முடைய மதிப்பீடுகளுக்கு எதிராக வாழ்ந்துவரும் நேரத்திற்காக மன்னிப்பு கேட்கின்றோம். எனவே  இனி வரும் காலங்களில் நற்செய்தியை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

8 + 12 =