மானிட மகன் முன் நிற்க வல்லவர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (28.11.2020)பொதுக்காலத்தின்  34 ஆம் சனி
I: தி.வெ: 22:1-7
II: திபா: 95:1-2,3-5,6-7
III: லூக்: 21: 34-36

மானிட மகன் முன் நிற்க வல்லவர்களா நாம்?

ஒரு தனியார் வங்கியில் வேலைபார்க்கும் கணக்காளர் தன்னுடைய பணியில் மிகவும் நேர்மையுள்ளவராய் இருந்தார். அவருடன் பணிபுரியும் ஒருசிலர் பொய் கணக்குகள் எழுதி பிறர்  பணத்தை 
தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டனர். இவரையும் செய்யத் தூண்டினர். இவரோ தன் நேர்மையைக் காத்துவந்தார். மற்றவர்களைத் தட்டிக் கேட்டார். இவ்வங்கியில் ஒரு சில தவறுகள் நடக்கின்றன என்பதைப் பற்றி முகம் தெரியாத நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அரசு சோதனை நடத்தத் தீர்மானித்தது. தவறு செய்தவர்கள் மனம் கலங்கியது. சோதனையில் மாட்டிக்கொண்டனர்.தங்களுடைய தவறான செயல்களால் தங்களுக்கே வலை விரித்துக் கொண்டனர். ஆனால் நேர்மையானவரோ எவ்வித பயமும் கலக்கமுமின்றி தைரியமாக இருந்தார்.பிரச்சினையை துணிந்து எதிர்கொண்டைர்.பிறர் முன் நல்லவராய் விளங்கினார்.

இன்றைய நற்செய்தியில் "நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்று இயேசு சீடர்களிடத்தில் கூறுகிறார். இவ்வுலகக் கவலையினால் உள்ளம் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருக்கச் சொல்கிறார். இவ்வார்த்தைகளைத் தியானிக்கின்ற நாம் நமது உள்ளம் எதைக்குறித்து கவலை கொள்கிறது என சோதித்து அறிய வேண்டும்.

இவ்வுலகம் நமக்குப் பல இன்பங்களைத் தருகிறது. பணம் அதனால் விளைகின்ற ஆடம்பர வாழ்க்கை, பகட்டு,  மனதைத் திசை திருப்பும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ,மது, போதை மருந்துகள் போன்றவைகள் நமக்கு இன்பங்களைத் தந்தாலும் உண்மையான மகிழ்ச்சியைத் தருவதில்லை.  நிறைவைத் தருவதில்லை.மாறாக வாழ்வின் திசையை மாற்றுகிறது. பேராசையைத் தூண்டுகிறது. நல்லவற்றிலிருந்து நம் பாதையை மாற்றி தேவையற்றவைப் பற்றி யோசிக்கவைத்து நம் கவலைகளை அதிகரிக்கிறது. இக்கவலைகளில் மூழ்கிக்கிடக்கும் நாம் வாழ்வின் எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள இயலாமல் மீண்டும் மீண்டும் உலக மாயைகளில் சிக்கிக் கொள்கிறோம். இவை நம் ஆன்மீக வாழ்வை மழுங்கடிக்கிறது. 

திருவருகைக் காலத்தைத் தொடங்கப்போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலத்தைத் தொடங்கும் முன்பு மனம் மாற வேண்டும். இயேசுவை உள்ளத்தில் ஏற்க வேண்டும்.அதற்காக ஆயத்தப்படுத்த வேண்டும் என்று நாம் சிந்திப்பதுண்டு. ஆனால் இவ்வுல மாயை என்ற கண்ணியில் சிக்கிக்கொண்டுள்ளதால் பலமுறை இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவர் முன் வல்லவராய் நிற்கத் தகுதியை இழந்தவர்களாகவே நாம் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம்மைத் தேடி வரும் இறைவனை எதிர் கொள்ளத் தயங்குகிறோம்.இதிலிருந்து வெளிவர நாம் இறைவன் விரும்பும் நேர்மை, உண்மை, நீதி, அன்பு இவற்றைக் கொண்டவர்களாய் இறைவேண்டலுடன் எப்போதும் அவரை எதிர் கொண்டு அவர்முன் வல்லவராய் நிற்க முயற்சி செய்ய வேண்டும். உலக மாயைகளிலும், கேளிக்கைகளிலும் நாம் கொண்டுள்ள நாட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க  நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எத்துன்பம் வந்தாலும் விழிப்பாய் இருந்து இறைவேண்டல் செய்வதைத் தொடரவேண்டும்.

அவ்வாறு நாம் முயலுகின்ற போது 
நம்முயற்சிகளை இறைவன் நிறைவாக ஆசிர்வதிப்பார். முதல்வாசகத்தில் நாம் வாசிப்பதைப் போல நம் மீது அவருடைய ஒளியை வீசச்செய்வார்.நம் வாழ்வு கனிதரும்  என்பதில் ஐயமில்லை.நம் நெற்றியில் மட்டுமல்ல நம் வாழ்விலும் இறைவனின் பெயர் பொறிக்கப்படும்.

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராகும் படி நம்மையே நாம் தயார் செய்ய விழைவோமா? தேவையற்ற கவலை என்னும் சூழ்ச்சியிலிருந்து முழுமையாக விடுபட விழிப்பாய் இருந்து மன்றாடுவோமா?

இறைவேண்டல்

அன்பு இறைவா மீட்பின் கடவுளே! இயேசுவே
உலகக் கவர்ச்சிகளிலும் கலவைகளிலும் மழுங்கிக் கிடக்கும் எம் ஆன்மீக வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறோம். அவற்றிலிருந்து மீண்டு நாங்கள் ஒவ்வொரு நாளும் எம்மைத்தேடி வரும் உம்மை எதிர்கொண்டு உம் முன் வல்லவர்களாய் நிற்க எங்களையே ஆயத்தப்படுத்த வரம் தாரும். ஆமென்.

 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 5 =