விமர்சனங்களை எதிர் கொள்வோமா! | குழந்தைஇயேசு பாபு


பொதுக்காலத்தின்  27 ஆம் வெள்ளி (09.10.2020) - I: கலா: 3: 7-17; II: திபா: 111: 1-2, 3-4, 5-6; III: லூக்:  11: 15-26

'விமர்சனங்களைத் தவிர்ப்பதற்கு ஒரு வழி இருக்கின்றது. அதற்கு ஒருவர் ஒன்றுமே சொல்லாமலும், ஒன்றுமே செய்யாமலும், ஒன்றுமே இல்லாமலும் இருக்க வேண்டும். அப்படி ஒருவர் இருந்துவிட்டால் , அவர் விமர்சனங்களை எளிதாக தவிர்த்துவிடலாம் ' என்று தத்துவமேதை அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். நாம் வாழும் இந்த உலகத்திலே நாம் பயணிக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தில் விமர்சனங்களைச் சந்தித்து தான் ஆக வேண்டும். நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விமர்சிக்கப்படுவோம் . இது மனித வாழ்வின் எதார்த்தம். நாம் பெரும்பாலும் நேர்மறையாக விமர்சிக்கப்படும் பொழுது மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் எதிர்மறையாக விமர்சிக்கப்படும் பொழுது துயருற்று ஒருவிதமான தளர்வுக்கு உள்ளாகிறோம். இப்படிப்பட்ட மனநிலையை மாற்றி யார் நம்மை விமர்சித்தாலும் அது வெற்றிக்கான படிக்கற்கள் என நினைத்து துணிவோடு வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.  அப்போது தான் நம் வாழ்விலேயே சாதனைகள் பல புரிய முடியும்.

நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது இசைக் கருவியைக் கற்றுக்கொள்ளப் பயிற்சி எடுத்து வந்தேன். அவ்வாறாக  ஒரு நாள் பயிற்சி எடுத்த பிறகு ஆலயத்தில் திருப்பலியின் போது இசை மீட்டினேன். நான் மீட்டிய இசை பாடுவதற்கு ஏற்றவாறு இல்லை. எனவே திருப்பலி முடிந்த பிறகு ஒரு சிலர் என்னை விமர்சித்தனர். அந்த நேரத்தில் எனக்கு சற்று வருத்தமாகவும் சோர்வாகவும் இருந்தது. எனவே இனிமேல் இசை மீட்ட கூடாது என்று நான் முடிவு எடுத்தேன். மனம் சோர்வுற்ற நேரத்தில்  என் நண்பர் ஒருவர் "என்னை நேர்மறையாக உற்சாகமூட்டினார். கடந்த வாரத்தில் மீட்டிய  இசையை விட இந்த வாரம் நன்றாக மீட்டீனீர். எனவே உன்னால் முடியும். வரும் காலங்களில்  சிறப்பாகப் பயிற்சி எடு " என்று என்னை ஊக்கமூட்டினார். என் நண்பர் கொடுத்த  நேர்மறையான ஊகத்தின் வழியாக அதன் பிறகு நான் பங்கேற்ற  திருப்பலியில்  சிறப்பான முறையில் இசையை மீட்டினேன். என் நண்பரிடமிருந்து விமர்சனங்களை எவ்வாறு நேர்மையாக எதிர்கொள்ள முடியும் என்ற பண்பை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது.  அந்த நாள் விமர்சனத்தைக் கண்டு நான் தயங்கி இருந்தால் இன்று என்னால் சிறப்பான  இசையை மீட்ட முடியாது. அன்று நான் பெற்றநேர்மறை எண்ணத்தால்இன்று நானே எழுதி இசை மீட்டும் அளவுக்கு கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.  இன்று பல குழந்தைகளுக்கு இசையை கற்றுக் கொடுத்து வருகிறேன். இது என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய ஒரு வாழ்வில் படமாக அமைந்துள்ளது. விமர்சனங்களைக் கண்டு துவண்டுவிடாமல் நேர்மறையாக அணுகும் பொழுது நிச்சயமாக வெற்றி பெற முடியும்.  

நம்முடைய அன்றாட வாழ்விலும் தவறுகள் செய்யும் பொழுதோ  அல்லது செய்யாமல் இருக்கும் பொழுதோ நாம் விமர்சிக்கப்படலாம் . ஆனால் அவற்றை கண்டு மனம் துவண்டு விடாமல் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பொழுது நிச்சயமாக நாம் ஒரு சாதனையாளராக மாற முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் தனது கண்டுபிடிப்புகளைச்  செய்யும் பொழுது எண்ணற்ற  முறை தோல்வியுற்றார். பல மனிதர்களால் விமர்சிக்கப்பட்டார். இருந்தபோதிலும் விமர்சனத்தை கண்டு துவண்டுவிடாமல் பல கண்டுபிடிப்புகளை இவ்வுலகிற்கு கொடுத்தார். இப்படிப்பட்ட மனநிலையைப் பெற்றுக்கொள்ள தான் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கிறது.

ஆண்டவர் இயேசு தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் மூன்றாண்டுகள் மிகச்சிறந்த இறையாட்சி பணி செய்தார். சென்ற இடமெல்லாம் நன்மைகளை செய்து வந்தார். தன்னுடைய போதனைகள் வழியாகவும் வல்ல செயல்கள் வழியாகவும் நற்செய்தியை அறிவித்து மீட்பின் வழியைக் காட்டினார். ஆனால் இயேசு எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அவரை விமர்சிப்பதற்கு ஒரு கூட்டம் பின்தொடர்ந்து வந்தது. இயேசு செய்த ஒவ்வொன்றிலும் குறை சொல்வதையும், குறைக் காண்பதையும்  வழக்கமாக கொண்டிருந்தனர்.   அவர்களில்  பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.  இன்றைய நற்செய்தியில்  இயேசு பேய்களை ஓட்டியது புது வாழ்வை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். ஆனால்  இயேசுவை அவர்கள் "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் " என குற்றம் சுமத்தினர் . 

இயேசு நன்மை செய்வதன் பொருட்டு விமர்சிக்கப்பட்டாலும் அதைப் பெரிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நன்மைகள் செய்து வந்தார். "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே "என்று பகவத்கீதையில் வருவதுபோல இயேசுவின் வாழ்வும் அவ்வாறே இருந்தது. நன்மை செய்வது வாழ்வதே தனது முக்கிய கடமையாக உற்சாகத்தோடு பணி செய்து வந்தார்.  இயேசு பலமுறை விமர்சிக்கப்பட்டார். இடையூறுகளையும் அவதூறுகளையும் சந்தித்தார். யூதத் தலைவர்களாலும்   அவர் வாழ்ந்த காலத்தை ஆட்சி செய்த ஆட்சியாளர்களாலும் மிகவும் விமர்சிக்கப்பட்டு எதிர்க்கப்பட்டார். இருந்தபோதிலும் அவர் துணிவோடு இருந்தபோதிலும் அவர் துணிவோடும் மன உறுதியோடும் அனைத்து துன்பங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு மிகச்சிறந்த இறையாட்சி பணியை செய்தார். இயேசுவின் வாழ்வு நமக்கு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தை வழங்கியுள்ளது.

 நம்முடைய அன்றாட வாழ்வில் நன்மைகள் செய்யும் பொழுது பற்பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும். நம்முடைய உழைப்பு, நிலைப்பாடு, இலக்கு பல நேரங்களில் கடுமையான வார்த்தைகளால்  விமர்சிக்கப்படும். அப்பொழுது பவுலடியார் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்து வாழ்வின் பயணத்தை தொடங்கும் பொழுது நிச்சயமாக அனைத்து சவால்களையும் விமர்சனங்களையும் துணிவோடு எதிர்கொள்ள முடியும் . "உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம்.நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. புகழுவார்  புகழலும் இகழுவார்  இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்கு தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள் " (2கொரி: 6: 7-8) என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப துணிவோடு விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் இயேசுவின் மனநிலையில் இறையாட்சி பணியினைச் செய்கின்ற பொழுது, நாம்  மிகச்சிறந்த இறைப்பணியாளர்களாக மாற முடியும் . மேலும் நம்முடைய பணி வாழ்விலே "எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்; இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் ; எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் "(1தெச: 5: 16-18) என்ற பவுல் அடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப இல்லாத சூழலிலும் மனத்துணிவோடு நம்முடைய பணியினை செய்ய தேவையான அருளை வேண்டுவோம். எத்தனை விமர்சனங்கள் நம்மை எதிர்க்கொண்டாலும் ஆண்டவர் இயேசுவைப் போல துணிச்சலோடு நம் பணியைச் செய்ய முடியும். அதற்கு தேவையான அருளையும் ஞானத்தையும் வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! எங்கள்  அன்றாட வாழ்வில் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதைக் கண்டு மனம் தளராமல் உம் திருமகன் ஆண்டவர் இயேசுவின் மனநிலையில் பணிசெய்ய தேவையான அருளையும் ஞானத்தையும் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

1 + 7 =