அன்பு வழி நம்பிக்கைச் செயல்! | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (13.10.2020)பொதுக்காலத்தின்  28ஆம் செவ்வாய்-I:  கலா: 5: 1-6; II: திபா:  119: 41,43. 44,45. 47,48; III: லூக்:   11: 37-41

"அன்பு வழி நம்பிக்கைச் செயல்களே அகத்தூய்மை!"

 பார்ப்பதற்கு மிகவும் அழுக்காகவும், அருவருப்பாகவும், கந்தலான ஆடைகளோடு,தெருவில் அலைந்து கொண்டிருந்தார் ஒரு யாசகர். யாசகம் இடுபவர்கள் கூட அருகில் செல்ல இயலாத அளவிற்கு அவர் மேல் மிகுந்த துர்நாற்றம் வீசும். அவரைக் கண்டாலே அருவருப்பு கொண்டு அவரை விரட்டி விடுவார்கள் பலர். அந்நிலையில், ஒருநாள்  தேநீர் கடை ஒன்றின் அருகிலேயே வெகு நேரமாய் நின்று கொண்டு ஒரு குவளைத் தேநீருக்காய் யாசித்துக்கொண்டிருந்தார். கடைக்குத் தேநீர் குடிக்க வந்தவர்களெல்லாம் அவரைப் பார்த்து முகம் சுழித்த வண்ணம் ஒதுங்கிச் சென்றார்கள். இறுதியில் கடைக்காரர் திட்டிக்கொண்டே ஒரு குவளைத் தேநீர் கொடுத்தார். வாங்கிய அவர் அதைக் குடிக்காமல் வேகமாக எடுத்துச்சென்றார். அவர் எங்கேச் செல்கிறார் என்று எல்லோரும் ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் தன்னைப் போல உடல் நிலை சரியில்லாத மற்றொரு யாசகருக்கு அந்தத் தேநீரைக் கொடுத்தார். அப்போது தான் உணர்ந்தனர் அவருடைய மனம் அன்பால் நிறைந்து தூய்மையாய் உள்ளது என்று.

இன்றைய நற்செய்தியில் 'உட்புறத்தில் உள்ளவற்றை தர்மமாகக் கொடுங்கள்' என்கிறார் இயேசு. 'தர்மம்' என்ற வார்த்தைத் தூய்மையைக் 
குறிக்கிறது. உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழும் வாழ்வைத் திருத்தி, உள்ளும் புறமும் தூய்மை உடையவர்களாய் வாழ வேண்டும் என்பதே இன்றைய இறைவார்த்தை நமக்கு விடுக்கும் அழைப்பு.
இயேசுவை உணவருந்த அழைத்த பரிசேயர் இயேசு கைகளைக் கழுவாமல் உணவருந்துவதைக்
கண்டுக் கேள்வி எழுப்பிய போது வெளிப்புறத் தூய்மையை விட உட்புறத்தூய்மை அவசியம் என்பதை தெளிவுபடுத்துகிறார் நம் ஆண்டவர் இயேசு.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பது பழமொழி. மனது எந்த அளவிற்கு ஆரோக்கியமாக அமைகிறதோ அந்ந அளவிற்கு நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தான் உளவியலார்கள் ஒவ்வொருவரையும், அவரவரின் எண்ணங்களையும், மனநிலையையும் அவ்வப்போது சலவை செய்து எதிர்மறையானவற்றை விலக்க அறிவுறுத்துகிறார்கள். நம் அகத்தை அதாவது மனதை சலவைச் செய்வது எப்படி?

அன்றைய யூதர்கள் விருத்தசேதனத்தையும், திருச்சட்டத்தையும் பிடித்துக்கொண்டு தாங்கள் தான் உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் என்றனர். இன்று நாங்கள் திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்கள் மீட்கப்ட்டவர்கள் என்ற மனநிலை நம்மிலே பலருக்கு இருக்கலாம். திருச்ட்டம், விருத்தசேதனம் , திருமுழுக்கு இவற்றால் மட்டுமல்ல  கிறிஸ்து இயேசு வழியாக நாம் பெற்றுக்கொண்ட மீட்பை உணர்ந்து, அன்பு வழியில் நம்பிக்கைச் செயல்களை செய்வதே உண்மையான அகத்தூய்மை. அதுவே நாம் அடைந்த மீட்பை தக்க வைத்துக்கொள்ளும் முறை என புனித பவுல் முதல் வாசகத்தின் வழியாகக் கூறுகிறார்.

இறைவனையும் அடுத்திருப்போரையும் அன்பு செய்வதும், தேவையில் இருப்போருக்கு உதவுதலும் ,நமக்கு எதிராய் தீங்கு செய்பவரை பகைமை பாராட்டாது மன்னிப்பதும், எளியமனத்தவராய், இரக்கமுடையவராய், நீதிக்காக உழைப்பவராய் இருப்பதுமே  அன்பு வழி நம்பிக்கைச் செயல்பாடுகள். இவையே நம்மை உள்ளும் புறமும் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் செயல்கள். அதாவது நம் அகத்தை சலவைச் செய்யும் வழிமுறைகள்.

நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவரைப் போல நம்மையும் பரிசேயத்தனங்களையும், போலி வாழ்வையும் அகற்றித் தூய வாழ்வு வாழ அழைக்கிறார். எனவே இன்றைய இறை வார்த்தையைத் தியானிக்கும் இவ்வேளையில் நம்மை நாமே ஆய்வு செய்வோம். 
தூய்மையற்றப் போலித்தனங்கள் நம்மை  விட்டு அகலவும் நம் சிந்தனை, சொல்,செயல்கள் மனநிலை ,  அனைத்திலும் தூயவர்களாய் வாழவும், அன்புவழி நம்பிக்கைச் செயல்கள் புரியவும் அதற்கான அருளை இறையிடம் வேண்டுவோம்..

இறைவேண்டல்:

மீட்பளிக்கும் கடவுளே..!
அன்பின் அடைக்கலமே..!
நம்பிக்கையின் நாயகனே...! தூய்மையின் உறைவிடமே...! 
பல வேளைகளில், எங்கள் வாழ்வு அகமொன்றும், புறமொன்றுமாய்  அமைகிறது. சட்டங்களைப் பிடித்துக்கொண்டு வீண்பிதற்றலால் நாங்கள் மீட்படைந்தவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறோம். எங்களுடைய இந்த மனப்போக்கைச் சலவைச் செய்யும். எங்கள் அன்றாட வாழ்வில் அன்பு வழி நம்பிக்கைச் செயல்களால் அகத்தூய்மையுடையவராய் வாழவும், கிறிஸ்து வழியாய் நாங்கள் பெற்றுக்கொண்ட மீட்பை முழுமையாய் அடையவும் அருள்புரிவீராக.. ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 3 =