Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நற்செய்தியின் தூதுவர்களா நாம்
பொதுக்காலத்தின் 24 ஆம் வாரம், வியாழன் - I. 1 கொரி 15:1-11 - II. திபா: 118:1-2,16-17, 28 - III. லூக். 7:36-50
திருஅவையில் மூன்று வகையான பணிகள் இருக்கின்றன. அவையாவன: போதிக்கும் பணி, வழிநடத்தும் பணி மற்றும் புனிதப்படுத்தும் பணி . இந்த மூன்று பணிகள் வழியாக நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையில் ஆழமாக வாழ நம்முடைய தாய்த்திருஅவையும் நம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளும் அழைப்பு விடுக்கின்றன. திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் நற்செய்தியை போதிப்பவர்களாகவும் மக்களை இறைநம்பிக்கையில் வழிநடத்துபவர்களாகவும் புனிதத்தில் வளர வழிகாட்ட கூடியவர்களாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தன்னை திருத்தூதர் என அறிமுகம் செய்கின்றார். பொதுவாக, திருத்தூதர் என்கிற அடைமொழியானது இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரோடு வாழ்ந்த சீடர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது . இயேசு, தான் செய்த இறையாட்சிப் பணியை தனக்குப் பின்னும் தொடர சீடர்களை அழைத்தார். தன்னோடு இருக்கவும், தனக்குப்பின், தன்னுடையப் பணியை தொடரவும் அவர்களுள் பன்னிருவரைச் சிறப்பாக தேர்ந்தெடுத்தார் . அவர்களைத் 'திருத்தூதர்கள்' என அழைத்தார் . இப்படிப்பட்ட பின்னணியை ஆழ்ந்து தியானிக்கும் பொழுது பவுல் தன்னை திருத்தூதராக அழைப்பது சற்று முரண்பாடாக இருக்கின்றது என கேள்வி நம்முள் எழலாம். ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் வழியாக திருத்தூதர் பவுல் திருத்தூதர் என்ற நிலைக்கு புதிய பொருளை கொடுக்கிறார். நற்செய்திப் பணி செய்ய அழைக்கப்பட்ட அனைவருமே திருத்தூதர்கள் ஆவர்.
நம்முடைய இந்திய நாட்டிற்கு நற்செய்திப் பணி செய்ய வந்த இயேசு சபையைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் சேவியர் மறைப்பரப்பு நாடுகளின் பாதுகாவலர் என திருஅவையால் அழைக்கப்படுகின்றார். நம் இந்திய நாட்டின் திருத்தூதர் எனவும் அழைக்கப்படுகின்றார். இதற்குக் காரணம் எதுவெனில் நற்செய்திப் பணிக்காக அவர் செய்த தியாகமும், காட்டிய முழுஈடுபாடும் ஆகும் . புனித பிரான்சிஸ் சேவியர் திருத்தூதர் பவுலைப் போல இயேசுவை அறியாத மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். அவர்களுக்கு இயேசுவின் பெயரால் பல வல்ல செயல்களைச் செய்து இறைநம்பிக்கையில் வலுவூட்டினார் . அவர் ஊட்டிய அந்த இறை நம்பிக்கைதான் இன்றளவும் நாம் துடிப்புள்ள கிறிஸ்தவர்களாக வாழ வழிகாட்டுகின்றது.
திருத்தூதர் பவுல் இயேசுவை நேரடியாக காணாவிட்டாலும் அவரோடு வாழாவிட்டாலும் அவரின் அனுபவத்தை நேரடியாகச் சுவைக்காவிட்டாலும் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தை தன் காட்சியிலேயே அனுபவித்தார். அவர் காட்சியிலே பெற்ற அனுபவம் இவரை மிகச்சிறந்த திருத்தூதராக மாற்றியது . இறைநம்பிக்கையில் வலுவூட்டியது. "நீ என்னைக் கண்டதால் நம்பினாய் ;காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர் "என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருத்தூதர் தோமாவுக்கு கூறியதுபோல இயேசுவைக் காணாவிட்டாலும் இயேசுவை திருத்தூதர் பவுல் முழுமையாக நம்பினார். இப்படிப்பட்ட இறைநம்பிக்கை மிகுந்தவர்களாக நாம் வாழத்தான் அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில் பாவியான பெண் ஒருவர் இறை நம்பிக்கையோடு இயேசுவின் மன்னிப்புக்காக இயேசுவின் காலடிகளைக் கண்ணீரில் நனைத்து நறுமணத் தைலம் பூசி தன் கூந்தலால் துடைத்தார். இது எதைச் சுட்டிக் காட்டுகிறது என்றால் அப்பெண் பாவியாக இருந்தாலும் நான் மனம் மாறுவேன் என்ற முயற்சியை விளக்குகிறது. அவர் சமூகத்தால் பாவி என முத்திரை குத்தப்பட்டு இருந்தாலும், இயேசு மற்றவர்களைப் போல் அந்தப் பெண்ணை ஒரு பாவியாக பார்க்காமல் அவரை அன்பு செய்தார். இயேசு காலத்தில் வாழ்ந்த ஆணாதிக்கச் சமூகத்தினர் அந்தப் பெண்ணை ஒரு பொருளாகவும் தேவைக்கு பயன்படுத்தப்பட்டவளாகவும் பார்த்தனர். ஆனால் இயேசு அப்பெண்ணை ஒரு மனிதராக பார்த்தார். எனவேதான் இயேசுவால் அவரை முழுமையாக அன்பு செய்த முடிந்தது. இதற்கு அடிப்படை அந்தப் பெண்ணினுடைய இறைநம்பிக்கை.
இயேசு மட்டும்தான் தன் பாவங்களை மன்னிக்க வல்லவர் என்பதை அந்தப்பெண் முற்றிலும் அறிந்திருந்தார். திருத்தூதர் பவுல் ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினாலும் இயேசுவின் அழைப்பை ஏற்று மனமாற்றம் அடைந்த பிறகு அந்த மனமாற்ற வாழ்வில் இறை நம்பிக்கையோடு நிலைத்து இருந்தார். அதேபோலதான் பாவமன்னிப்பு பெற்ற பாவியான அந்தப் பெண்ணும் மனமாற்ற வாழ்விலே நிலைத்து புனிதத்தை நோக்கிய வாழ்வைத் தொடங்கினார். இப்படிப்பட்ட மனநிலையில் வாழத்தான் கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
மனமாற்ற வாழ்விற்கு மிகச்சிறந்த உதாரணம் புனித அகுஸ்தினார். அவர் தன் இளமைப் பருவத்திலே தன்னுடைய வாழ்க்கையை பாவ மோக வாழ்விலே வாழ்ந்தாலும் மனமாற்றத்தை பெற்றபிறகு அந்த மனமாற்ற வாழ்விலேயே நிலைத்து இருந்தார். அவர் இறை நம்பிக்கையில் வேரூன்றி ஆயராகவும் மறைநூல் வல்லுநராகவும் மாறி கிறிஸ்தவ மக்களை இறை நம்பிக்கையில் வலுவூட்டினார் . இத்தகைய வாழ்வுதான் உண்மையான சாட்சிய வாழ்வு. இதைத்தான் புனித பவுலும் பாவி எனக் கருதப்பட்ட அந்தப் பெண்ணும் புனித அகுஸ்தினாரும் மனமாற்ற வாழ்வில் நிலைத்திருந்து வாழ்ந்து காட்டினர்.
இவர்களின் வாழ்வு கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது. மேலும் பழைய ஏற்பாட்டில் தாவீது அரசர் மனமாற்ற வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். அவர் தன்னுடைய மனித பலவீனத்தால் பாவம் செய்தாலும் தான் செய்தது பாவம் என்பதை அறிந்த பிறகு தன்னுடைய பாவத்திற்காக மிகவும் மனம் வருந்தினார். பாவத்திற்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்டார். இறுதியில் மனமாற்றம் அடைந்தார். அதன்பிறகு தான் பெற்ற மனமாற்ற வாழ்விலே இறுதிவரை கடவுளுடைய இறை பணியாளராக நிலைத்து இருந்தார். எனவே நம்முடைய வாழ்விலும் நம்முடைய மனித பலவீனத்தின் வழியாக செய்கின்ற பாவங்களை விட்டுவிட்டு புனிதத்தை நோக்கி நாம் பயணிக்க இறைநம்பிக்கையோடு மனமாற்ற வாழ்விலே நிலைத்திருப்போம். மனமாற்ற வாழ்வில் நிலைத்திருந்து புனிதமாக வாழ்கின்ற பொழுது நாம் திருஅவையின் பணிகளானப் போதிக்கும் பணி, வழிநடத்தும் பணி மற்றும் புனிதப்படுத்தும் பணி போன்றவற்றைச் சிறப்பாக செய்ய முடியும். மனமாற்ற வாழ்வில் நிலைத்திருந்து புனிதத்தில் வளர்ந்து திருஅவையின் பணிகளை நிறைவேற்றி இறைநம்பிக்கையில் வேரூன்றி இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு நம் வாழ்நாள் முழுவதும் சான்று பகிர்ந்திட தேவையான இறையருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
மனமாற்ற வாழ்வுக்கு வழிகாட்டும் இறைவா! எங்களுடைய மனித பலவீனத்தினால் செய்த எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் புனித பவுலை போலவும் பாவியான பெண்ணை போலவும் புனித அகுஸ்தினாரைப் போலவும் மனமாற்ற வாழ்விலே நிலைத்திருந்து புனிதத்தை நோக்கி பயணமாகி இறைநம்பிக்கையில் வேரூன்றத் தேவையான அருளைத் தரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment