அன்பினில் நிறைவா!


பொதுக்காலத்தின் 24 ஆம் புதன் - I. 1 கொரி: 12:31-13: 13; II. திபா: 33: 2-3,4-5,12,22; III. லூக்: 7:31-35

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தது ஒரு அன்பின் வெளிப்பாடு. அன்பு உலகத்தை ஆளும் பொழுது அந்த உலகமானது  சொர்க்கத்தை விட மிகுந்த மகிழ்ச்சி தரும். அன்பு இந்த உலகத்தை ஆளாத போது இந்த உலகம் நரகத்தை விட கொடூரமாக இருக்கும். கடவுள் இந்த உலகத்தை படைத்ததே நாம் அன்போடு வாழ வேண்டும் என்பதற்காகவே ஆகும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும்  அன்பிற்காக ஏங்கிக் கொண்டு இருக்கிறார். அன்பு யாருக்கு முழுமையாக கிடைக்கவில்லையோ அவர் மிருகமாக மாறி விடுகிறார். அன்பு யாருக்கு முழுவதுமாக கிடைக்கின்றதோ அவர் மாமனிதராக மாறிவிடுகிறார். இந்த உலகம் அமைதியிலும் ஒற்றுமையிலும்  மகிழ்ச்சியிலும் இருக்க வேண்டுமென்றால் அது அன்பால் மட்டுமே முடியும். அன்பு கல்லான இதயத்தை கூட கனிவுள்ள இதயமாக மாற்ற ஆற்றல் கொண்டது. இத்தகைய அன்பின் மேன்மையை தான் இன்றைய முதல் வாசகம் நமக்குச் சுட்டிக்காட்டி அன்பு சமூகத்தை உருவாக்க வழிகாட்டுகின்றது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் 13 ஆம் அதிகாரத்தில் அன்பின் மேன்மையைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். மானிடர்  மொழிகளிலும்  வானதூதரின் மொழிகளிலும்  பேசினாலும் அன்புதான் மிகச் சிறந்தது என சுட்டிக்காட்டுகிறார். நமக்கு எவ்வளவு திறமைகளும் மறைநூல் அறிவும் இறைவாக்கு உரைக்கும் ஆற்றலும்   இருந்தாலும் அன்பு இல்லையென்றால் நாம் ஒன்றுமில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். 

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது அன்புள்ளவர்களாக வாழ்வதாகும்.  அன்போடு  வாழ்வதுதான் கிறிஸ்தவத்தின் அடையாளம். நாம் கிறிஸ்தவர்களாக வாழ வேண்டுமெனில் அன்பு நிறைந்த மக்களாக வாழவேண்டும். அதற்கு நாம் எப்படிப்பட்ட மனநிலையில் வாழ வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் மிக அருமையாக பவுலடியார் எடுத்துரைக்கின்றார்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகின்ற கிறிஸ்தவர்கள் பொறுமை உள்ளவர்களாக வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் குடும்பங்களில் பல பிரச்சினைகளுக்கு காரணம் பொறுமை இல்லாமையே ஆகும்.  நான் பொறுமையோடு வாழ நாம் அன்பு உள்ளவர்களாக வாழ வேண்டும்.  கிறிஸ்தவர்களாகிய நாம்  நன்மைச் செய்யக் கூடியவர்களாக வாழவேண்டும் . நன்மை செய்வதுதான் கிறிஸ்தவத்தின் இயல்பு. நாம் பின்பற்றுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலம் முழுவதும் நன்மைகளை மட்டுமே செய்தார். அவர் நன்மை செய்ய அடிப்படைக் காரணம் அன்பு. இப்படிப்பட்ட நன்மை செய்யக்கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள இன்றைய முதல் வாசகம் அழைப்பு விடுக்கின்றது.

கிறிஸ்தவர்கள் பொறாமைபடாதவர்களாக வாழவேண்டும்.   பொறாமைப்படுவது என்பது அன்பிற்கு எதிரானதாகும். எப்பொழுது ஒருவர் ஒருவரைப் பார்த்து பொறாமைப்படுகின்ராறோ அப்பொழுது அவரை அன்பு செய்ய முடியாது. அந்த இடத்தில் வளர்ச்சி இருக்காது. எனவே பொறாமைப்படும்  மனநிலையை விட்டு விட்டு அன்பு செய்யக்கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

கிறிஸ்தவர்கள் தற்புகழ்ச்சி கொள்ளாமல்  இறுமாப்பு அடையாமல் இழிவானது செய்யாமல் எரிச்சலுக்கு இடம் கொடாமல் தீங்கு நினையாமல் இருப்பவர்கள் ஆவர்.   அப்படி வாழும் பொழுது தான் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கும்  இயேசுவின் மனநிலைக்கும் சான்று பகர முடியும்.

அன்பு ஒன்றில் மட்டும்தான் கிறிஸ்தவ வாழ்வின் நிறைவு இருக்கின்றது என்பதை ஆழமாக புரிந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். நம் உள்ளம் அன்பால் நிரப்பப்படும் பொழுது நாம் தீவினையில் மகிழ்ச்சி அடையாதவர்களாகவும் உண்மையில் மகிழ்பவர்களாகவும் இறை நம்பிக்கை கொண்டவர்களாகவும் மனவுறுதி கொண்டவர்களாகவும் வாழமுடியும். அன்பால் மட்டுமே குறைகளைத் தாண்டி நிறைகளை காண முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகம் குறைகளைக் காணாமல்  நிறைகளைக் காண   அழைப்பு விடுக்கின்றது. இயேசு "இத்தலைமுறையின்  மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? "என்று மன வருத்தத்தோடு கேள்வி கேட்கும் அளவுக்கு பரிசேயர்களும் சதுசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் குற்றம் காண கூடியவர்களாக மட்டுமே இருந்தார்கள். ஏனெனில் அவர்களிடம் அன்பு இல்லை. எனவேதான் இயேசு அவர்களின் செயல்பாடுகளை கண்டு சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது என்று கூறினார். இயேசுவின் நோக்கம் குறைகளைக் காணாமல் நிறைகளை காண வைப்பதாகும். இயேசு அன்பு என்ற ஒரு கருவியை பயன்படுத்தி குறையுள்ள மக்களான பாவிகளை மன்னித்து மீட்பை வழங்கினார். தன் வாழ்வு முழுவதுமே அன்பு என்ற ஆயுதத்தால் இந்த உலகம் மீட்படைய தன்னையே கையளித்தார். எனவே இன்றைய நாளிலே அன்பு என்ற ஆயுதத்தை ஏந்தி இந்த உலகம் முழுவதும் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடு உயிரோட்டம் பெற தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
அன்பான ஆண்டவரே! நாங்கள் எங்கள் வாழ்விலேயே பிறரை  அன்பு செய்யாமல் பிறரின் குறைகளை மட்டும் கண்டு வாழ்ந்த நேரத்திற்காக மன்னிப்பு கேட்கின்றோம். எங்களோடு வாழக்கூடிய மக்களை முழுமனதோடு அன்பு செய்து அவர்கள் வாழ்விலே புது மாற்றத்தை கண்டிட தேவையான அருளைத் தாரும். பிறரின் குறைகளை காணாமல் பிறரின் நிறைகளை கண்டு அவர்களை வழிநடத்த நேர்மறை எண்ணங்களையும் அன்பு உள்ளத்தையும் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

3 + 0 =