Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் சிலுவை நல்வாழ்வின் அடையாளம்!
இன்றைய வாசகங்கள் (14.09.2020)பொதுக்காலத்தின் 24 ஆம் .திங்கள்-I: எண் 21:4-9;II: திபா: 78: 1-2,34-35,36-37,38;III:2:6-11;IV: யோவான் 3:13-17
இயேசுவின் சிலுவை நல்வாழ்வின் அடையாளம்!
இன்று நம் தாய் திரு அவையானது திருச்சிலுவை மகிமை விழாவை கொண்டாடி மகிழ்கிறது .நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரோமைப் பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் அன்னை புனித ஹெலெனா அவர்கள், கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களைத் தேடி புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம், எருசலேமில் மேர்கொண்ட அகழ்வராய்ச்சியில், ஓரிடத்தில் மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்ட சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்ட சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார். அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், 335ம் ஆண்டு புனித கல்லறைக் கோவில் கட்டிமுடிக்கப்பட்டு செப்டம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று திருச்சிலுவையின் மகிமை விழாவென திருஅவையில் கொண்டாடப்படுகிறது.
சிலுவை நல்வாழ்வின் அடையாளம் என்பதை தியானிக்கும் முன்பு நல்வாழ்வு என்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவான கருத்து நம்மிடம் இருக்க வேண்டும். நல் வாழ்வு என்பது சுமைகள் இல்லாத துன்பங்கள் இல்லாத நோய்கள் இல்லாத பிரச்சனைகளே இல்லாத வாழ்வல்ல. இவை அனைத்தும் இருந்தபோதிலும் அதையும் தாண்டி அதை சமாளித்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதே ஆகும். துன்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியிலும் நம்மால் மகிழ்ச்சியுடன் நம்பிக்கையுடனும் வாழ முடிந்தால் அதுவே உண்மையான நல்வாழ்வு என்பதையே இயேசுவின் சிலுவை இன்று நமக்கு வலியுறுத்திக் கூறுகின்றது. இயேசுவின் சிலுவையை பார்க்கும்போது நமக்கு தோன்றுவது எல்லாம் அவர் பட்ட பாடுகளும் அவர் அடைந்த வேதனையும் மட்டும்தான் .ஆனால் அவர் அந்த பாடுகளையும் வேதனையையும் ஏற்றுக் கொள்ளாவிடில் உயிர்ப்பு என்ற மகிமை நமக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
நம்முடைய அன்றாட வாழ்வில் துன்பங்களையும் பிரச்சினைகளையும் நோய்களையும் எந்த மனநிலையோடு நாம் பார்க்கின்றோம் என்று ஆராய்ந்து பார்த்தால் பல சமயங்களில் பிரச்சினைகளையும் துன்பங்களையும் தோல்விகளையும் ஏற்றுக் கொள்ளவும் அதை சந்திக்கவும் நாம் தயாராக இல்லை என்ற உண்மை தான் நமக்கு வெளிப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் இஸ்ரயேல் மக்கள் கடவுள் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்ததை கூட மறந்து விட்டு உணவும் தண்ணீரும் எங்களுக்கு இல்லை என்று கடவுளுக்கு எதிராக முணுமுணுத்த நிகழ்வை நாம் வாசிக்கிறோம்.
இஸ்ரயேல் மக்களின் இந்த மனநிலை இன்று நம்முடைய மனநிலையையும் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது. ஏதாவது ஒரு துன்பம் வரும்போது ஒரு பிரச்சனை வரும் போது நம்முடைய நம்பிக்கையை இழந்து சோர்ந்து கடவுளுக்கு எதிராகவும் பிறருக்கு எதிராகவும் முணுமுணுக்க தொடங்கி விடுகின்றோம். இதற்கு முன்பு நம் வாழ்வில் அடைந்த நன்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றோம். இந்த மன நிலையை மாற்றவே இன்று கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகிறேன் எங்கிருந்து எனக்கு உதவி வரும் என்று திருப்பாடல் 121 நாம் ஜெபிக்கிறோம் ஆம் துன்பம் வரும் போது கடவுளை நோக்கி பார்த்து நம் மனங்களை உயர்த்தும்போது நல்வாழ்வு நமக்கு சொந்தமாகிறது.
அன்று கடவுள் மோசே வழியாக கூறியதைக் கேட்டு அதை நம்பி கம்பத்தில் உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பை பார்த்து உயிர் பிழைத்தனர். அதே கடவுள் இன்று நமக்கும் ஒரு அடையாளத்தை தந்திருக்கின்றார். தம் ஒரே மகனை சிலுவை என்ற அரியணையில் ஏற்றி நாம் அனைவரும் வாழ்வு பெறுவதற்காக உயர்த்தி வைத்திருக்கின்றார். எனவே சிலுவையை வெறும் துன்பத்தின் அடையாளமாக மட்டும் அறிந்துகொள்ளாமல் கடவுள் தம் அன்பு மக்களாகிய நம் ஒவ்வொருவரையும் நல்வாழ்வுக்கு உரிமையாளர்களாக அழைக்கும் வாழ்வின் சின்னமாக உணர்ந்து துன்பத்திலும் பிரச்சினைகளிலும் நோயிலும் சிலுவையில் தொங்கும் இயேசுவை அண்ணார்ந்து பார்த்து நல்வாழ்வு பெறுவோம்.
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் என்று யோவான் நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். கடவுளின் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்ட இயேசுவும் தான் கடவுளின் மகன் என்ற நிலையைப் பற்றிக் கொண்டு இருக்காமல் அவருடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக சிலுவையில் நமக்காக பலியானார். எனவே கிறிஸ்தவர்களாகிய நாமும் இயேசு கூறியது போல நம் வாழ்வில் வருகின்ற சிலுவைகளை சுமந்துகொண்டு அவர் பின்னே செல்வோம். அவர் நம் சிலுவைகள் அனைத்தையும் நமக்கு வெற்றி படிக்கல்லாக மாற்றி நல்வாழ்வு தருவார் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் இறையருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
நாங்கள் நிலைவாழ்வு பெறும் பொருட்டு ஒரே மகனையே எங்களுக்காக கையளித்த இறைவா துன்பங்களிலும் கவலைகளிலும் நோயிலும் பிரச்சனையிலும் சிலுவையை அண்ணார்ந்து பார்த்து சக்தி பெற்று இயேசு தரும் நிலை வாழ்வை நல்வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள எங்களுக்கு வரம் தாரும் ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment