Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்புடன் கடிந்து கொள்வதா?
பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிறு - I எசே 33:7-9; II. தி.பா 95:1-2,6-7,8-9; III. உரோ 13: 8-10; IV. மத் 18:15-20
ஒரு ஊரில் மதன் பாலு என்ற நண்பர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். இருவருமே சிறுவயது முதல் ஒன்றாகப்படித்தவர்கள். இணை பிரியா தோழர்களாக வலம் வந்த இவர்களை ஊரே மெச்சியது. இவர்கள் தங்கள் பள்ளிப் படிபை முடித்து கல்லூரிக்குச் சென்ற பிறகும் இவர்களது நட்பு தொடர்ந்தது.இவ்வாறு நாட்கள் கடந்தன. கல்லூரியில் இவர்களுக்கு மேலும் சில நண்பர்கள் கிடைத்தனர். ஆனால் ஒருசிலருடைய தவறான வழிகாட்டுதலால் பாலு சில தாகாத பழக்கங்களுக்கு அடிமையாவதை மதன் அறிந்தான். தன் நண்பனை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த மதன், பாலுவிடம் அவன் தனியாக இருக்கின்ற சமயத்தில் அவன் தவறுகளை சுட்டி காட்டி தீய நண்பர்களை விட்டு விலகுமாறு கூறினான்.
தன் நண்பன் தன்னுடைய நன்மைக்காகத்தான் சொல்கிறான் என்பதை பாலு உணரவே இல்லை. மதனுக்கு தன் மேல் இருந்த அன்பு குறைந்து விட்டதாலேயே தன்னை குறை கூறுகிறான் என எண்ணினான்.இருவருக்கும் உறவு விரிசல் அதிகமானது. பாலுவின் தீய பழக்கங்கள் அதிகமானது. மதன் தட்டிக் கேட்பதை நிறுத்தவில்லை. ஒருமுறை பாலு தன் தவறின் பொருட்டு மாட்டிக்கொண்டான். அவனைத் தவறு செய்ய தூண்டிய நண்பர்கள் யாரும் அவனருகில் இல்லை. அப்போது தன் நண்பன் மதனிடம் சென்று மன்னிப்பு கேட்ட பாலு தட்டிக்கொடுப்பதில் மட்டுமல்ல தட்டிக் கேட்பதிலும் உண்மையான அன்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன் என்று கூறினான். அவன் வாழ்வின் திசை மீண்டும் சரியானது.இருவரின் நட்பும் ஆழமானது.
உங்கள் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும் போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள் என்று இயேசு
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறுவதை நாம் வாசிக்கிறோம். அவ்வாறு செய்யும் போது குற்றம் செய்தவர் தன்னிலை உணரவும் தன் தவறைத் திருத்திக்கொண்டு புது வாழ்வு வாழவும் இருவருக்கும் இடையேயான உறவு வளரவும் வாய்ப்பிருக்கிறது என்பதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பல சமயங்களில் பிறரின் தவறுகளை அவரிடம் முதலில் கூறாமல் மற்றவர்களிடம் கூறி பகிரங்கப்படுத்தி விடுகிறோம். அப்படியே தனியாக அவரிடமே எடுத்துக்கூறினாலும் நம்முடைய மொழி அன்புடையதாய் அல்லாமல் கடினமானதாகவே இருக்கிறது. இதனால் மிஞ்சுவது பகையே. ஒருவர் செய்த குற்றத்தை எடுத்துக்காட்டுவதன் நோக்கம் நம்மை நாமே நல்லவர் என்று காட்டுவதாக அமையக் கூடாது. மாறாக நாம் அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பையும் அக்கறையும் எடுத்துக்காட்டி உறவை சரிசெய்ய அழைப்பு விடுப்பதாகவே அமைய வேண்டும் என்பது தான் இயேசு இன்று நமக்கு கூறும் செய்தி.
அனைவரும் நல்வாழ்வு அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நம் விண்ணகத் தந்தை.எவ்வாறு தாய் தந்தையர் தன் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டித்துதத் திருத்துவார்களோ அவ்வாறே அவரும் பிள்ளைகளாகிய நாம் தீய வழி செல்லும் போது நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார். அது அவருடைய அன்பின் வெளிப்பாடு. அதே மனநிலை பெற்றவர்களாய் நாமும் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் மூலமாக அவர் விடுக்கும் அழைப்பு இதுதான். நம் கண்முன் ஒருவர் தீய வழியில் செல்லும் போது அவருடைய தவறை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. வாய்ப்பு கிடைத்தும் நாம் அதை செய்யா விட்டால் அத்தீமையில் நமக்கும் பங்குண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற எண்ணத்தோடு பிறர் நம் கண்முன் அழிந்து போவதைப் பார்ந்த்துக்கொண்டிருந்தால் அவர் அழிவிற்கு நம் காரணமாகிவிடுவோம் என்பதையும் நாம் உணர வேண்டும்.அதே போல் நம்முடைய தவறுகளை யாராவது சுட்டிக்காட்டி மனம்மாறி வாழ வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்போது அதை அன்போடு ஏற்றுக்கொள்ளக்கூடிய மன்ப்பக்குவம் நம்மிடமும் இருக்க வேண்டும்.
அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும் என்று புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் கூறுகிறார்.உண்மையான அன்பு நல்லவற்றை தட்டிக்கொடுக்கும். தீயவற்றை தட்டிக் கேட்கும். பிறருக்கு என்றுமே தீங்கிழைக்காது. அனைவரையும் நல்வழிப்படுத்தி இறைவனை நம்முள் உணரச்செய்யும்.
அன்பு நண்பர்களே இன்றைய வழிபாடு காட்டும் இந்த அன்பு வழிப்பாதையில் வாழ நாம் தயாராக இருக்கிறோமா? உண்மையான அன்பு நம்மை ஒழுக்கத்தின் பாதையில் நடத்துகிறது என்பதை உணர்கிறோமா? அன்புடன் பிறர் நம் தவற்றை கடிந்து கொள்ளும்போது அதை ஏற்றுக்கொள்கிறோமா? அதே அன்புடன் பிறர் செய்த குற்றங்களை பக்குவமாய் எடுத்துக்கூறி அவரை நல்ழிப்படுத்த முயல்கிறோமா? சிந்திப்போம். இறையருள் இறைஞ்சுவோம்.
இறைவேண்டல்
அன்போடு எம்மை கண்டித்துத் திருத்தும் தந்தையே! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் உமது அன்பை மனதிலே கொண்டு எம்முடன் வாழ்வோரின் தவறுகளை பக்குவமாய் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தவும்,எம்முடைய தவறுகளை பிறர் திருத்தும் போது நாங்கள் நல்வழி வாழ நீர் எங்களுக்குத் தந்த அரிய வாய்ப்பாக கருதி எங்களைத் திருத்திக் கொள்ளவும், இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்புறவில் ஆழமாக வளரவும் அருள்தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment