Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நல்ல கனிகளா நாம்
இன்றைய வாசகங்கள் (12.09.2020)பொதுக்காலத்தின் 23 ஆம் சனி- I: 1 கொரி: 10: 14-22;II: திபா: 116: 12-13. 17-18;III: லூக்: 6: 43-49
"நல்ல கனிகளா நாம் "
மனிதர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கின்றது. அந்தக் கடமை என்னவென்றால் கனி தந்து வாழ்வது. கடவுள் படைத்த படைப்புகளிலேயே மிக உயர்ந்த படைப்பு மனிதப் படைப்பு. கடவுள் படைப்பில் வேறு எந்த படைப்பும் அவரின் சாயலில் படைக்கப்படவில்லை. ஆனால் மனிதர்களாய் நாம் மட்டும் தான் அவரின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ளோம். கடவுளின் சாயலில் படைக்கப்பட்டாலும் கடவுளுக்கு ஏற்ற செயல்களில் வாழாமல் பல நேரங்களில் சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றோம். இப்படிப்பட்ட மனநிலை மாறி பிறருக்கு கிறிஸ்துவில் கனி கொடுக்கக்கூடிய கருவிகளாக மாற இன்றைய நற்செய்தி வாசகமானது நமக்கு அழைப்பு விடுக்கின்றது .
ஒருமுறை ஒரு புத்தத் துறவி தன் சீடர்களுடன் பயணமானார். அவர் பயணம் செய்யும் பொழுது ஒரு ஆற்றைக் கடக்க நேர்ந்தது. ஆற்றை கடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு தேளானது தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அந்தத் தேளைக் காப்பாற்றும் நோக்குடன் புத்தத் துறவி தன் கையில் தூக்கினார். கையில் தூக்கியவுடன் அந்த தேளானது அவர் கையைக் கொட்டியது. இருந்த போதிலும் அந்த புத்தத் துறவி அந்தத் தேளைத் தண்ணீரில் போடாமல் தண்ணீருக்கு வெளியே போட்டு பிழைக்க வைத்தார். இதை கண்ட அந்த புத்த துறவியின் சீடர்கள் "தேள் உங்களைக் கொட்டியும் ஏன் அவற்றைக் கீழே போடவில்லை? "என்று கேட்டனர். அதற்கு அவர் "கொட்டுவது தேளின் இயல்பு ;உதவி செய்வது மனிதனின் இயல்பு "என்று கூறினார். இவற்றைக் கேட்ட சீடர்கள் மனித வாழ்வின் இயல்பைப் புரிந்து கொண்டனர். நம்மைப் படைத்த கடவுளும் அவருக்கு எதிராக நாம் எவற்றை செய்தாலும் நம்மை வெறுக்காது அன்போடு திடப்படுத்துபவராக இருக்கின்றார்.பல்வேறு நலன்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார். இப்படிப்பட்ட கனி தரக்கூடிய மனநிலையை பெறுவதுதான் முழுமையான மனித வாழ்வு.
கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.
ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்'' (லூக்கா 6:43) என்ற இயேசுவின் வார்த்தை நம்மை நல்ல மரமாக மாறி நல்ல கனி கொடுக்க அழைப்பு விடுக்கின்றன. ஒருவர் யார் என்று தனது பெயரை வைத்தோ தான் சார்ந்த சமூகத்தை வைத்தோ நாட்டை வைத்தோ இந்த உலகிற்கு அறிமுகம் செய்யக் கூடாது ; மாறாக, நம்முடைய நல்ல செயல்களை வைத்து அறிமுகம் செய்ய வேண்டும். நாம் நல்லது செய்யும் பொழுது நாம் நல்லவராக இந்த உலகில் அறிமுகம் செய்யப்படுவோம். தீயது செய்யும்பொழுது தீயவர்களாகத் தான் இவ்வுலகில் அறிமுகம் செய்யப்படுவோம்.எனவே நம்முடைய வாழ்வு நல்ல கனியை தரவேண்டும் என்று சொன்னால் நம்முடைய சிந்தனையும் செயலும் நல்லதாக இருக்க வேண்டும். நல்லதை மட்டும் செய்ய நினைக்கும் மனநிலை தான் இயேசுவின் மனநிலை. அப்படிப்பட்ட மனநிலையை பெற நம்முடைய வாழ்வு பாறையின் மேல் கட்டப்பட்ட வீட்டைப் போன்று இருக்க வேண்டும். ஒரு வீடு பாறைமேல் அடித்தளம் இடப்படும் பொழுது அதன் உறுதித்தன்மை நிலையாக இருக்கும். அப்பொழுது நிறைவான கனியை பிறருக்கு வழங்க முடியும். உறுதியற்ற மனநிலையில் இருக்கும் பொழுது மணல் மீது கட்டிய வீட்டிற்கு ஒப்பாக நம் வாழ்வு மாறிவிடும். எனவே உறுதியான உள்ளத்தோடு பல்வேறு எதிர்ப்புகளின் மத்தியிலும் இடையூறுகளின் மத்தியிலும் நல்லது செய்வது தான் மனித இயல்பு என்ற மனநிலையில் தொடர்ந்து பிறருக்கு நன்மை செய்யும் பொழுது நம்முடைய வாழ்வு கிறிஸ்துவில் கனி தரக்கூடிய வாழ்வாக மாறும்.
இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் தான் விளைவிக்கின்ற கனிகளை பிறருக்கு கொடுக்கின்றது. உதாரணமாக, ஒரு மரம் தான் விளைவிக்கின்ற கனியை வானத்துப் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்றோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
கொடுக்கின்றது. இப்படிப்பட்ட எதிர்பார்ப்பில்லாத மனநிலையில் கனி தரவே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைப்பு விடுக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கொரிந்தியர் மக்களுக்கு தனது கடிதத்தின் வழியாக நற்செய்தி அறிவித்துள்ளார். கிறிஸ்துவில் நல்ல கனிகளைத் தர நம்மிடையே உள்ள தேவையற்ற பழக்கவழக்கங்களை அகற்ற வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார். அதிலும் குறிப்பாக, பொருளாசை, மானிட வழிபாடு, உலக இன்பங்கள் என்னும் புதிய சிலைகள் இறைவழிபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். இவ்வாறாக நல்லவர்களாக வாழ்ந்து கிறிஸ்துவில் கனி தர அழைப்பு விடுக்கின்றார். எனவே கிறிஸ்துவில் கனி தர தடையாயுள்ள நம்முடைய சுயநலம், பேராசை, உலகம் சார்ந்த மாயை கவர்ச்சிகள் போன்றவற்றை விட்டொழித்து நம்முடைய நற்செயல்கள் வழியாகவும் எண்ணங்கள் வழியாகவும் கிறிஸ்துவில் பிறர் வாழ்வு வளம்பெற கனி தர தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
நன்மைகளின் நாயகனே எம் இறைவா! நாங்கள் உம்மில் கனி தரவும் அந்தக் கனியின் வழியாக பிறருக்கு வாழ்வு வழங்கவும் தேவையான அருளைத் தரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment