யார் வழிகாட்ட தான் முடியும்


இன்றைய வாசகங்கள் (11.09.2020)பொதுக்காலத்தின் 23 ஆம் வெள்ளி - I: 1 கொரி: 9: 16-19, 22-27;II: திபா: 84: 2-3, 4-5,11;III: லூக்: 6: 39-42

"யார் வழிகாட்ட தான் முடியும் "

 "ஒவ்வொரு மனிதரும் தாங்கள் குறை உள்ளவர்களாக இருப்பதால், தங்களிடம் இருக்கிற குறைகளைப் பிறர்மேல் ஏற்றிப் பார்க்கின்றனர். இதனை இவர்கள் ஏற்றிப் பேசுதல்  என்று அழைக்கின்றனர். நம்மிடம் குறை இருப்பதால், பிறரிடம் அந்தக் குறை இருக்கலாம் என்று நாம் எளிதில் எண்ணி விடுகிறோம். பொய் பேசும் பழக்கம் உள்ள ஒருவர் பிறர் பேசுகின்ற உண்மையையும் பொய்யாகவே எடுத்துக்கொள்கிறார். தனது குறையைப் பிறர்மீது ஏற்றிப் பார்க்கிறார்" என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்ற உளவியல் அறிஞர்கள் சொல்கின்றனர். மனிதர்களாய் பிறந்த  ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த குறையை நிறையாக மாற்றுவது அவரவர் கையில்தான் இருக்கின்றது.

நம்முடைய வாழ்க்கையில் அடுத்தவரைப் பற்றி தீர்ப்பு இடும்போது மகிழ்ச்சியோடு தீர்ப்பிடுகிறோம்.  ஆனால் நம்முடைய குற்றங்களை யாராவது சுட்டிக்காட்டினால் நாம்  ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றோம். இது எதை சுட்டிக் காட்டுகிறது என்றால் இந்த உலகத்தில் யாரையும் தீர்ப்பிட நமக்கு தகுதி இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது. கடவுள் ஒருவர் மட்டுமே நம்மை தீர்ப்பிட தகுதி உள்ளவர். மற்றவர்கள் நம்மை தீர்ப்பிடவோ அல்லது நாம் பிறரை தீர்ப்பிடவோ தகுதி இல்லை. 

ஆனால் இன்றைய உலகில்  நம்மில் பெரும்பாலானோர் பிறருடைய குற்றங்களை கண்டு விமர்சனம் செய்கின்றோம். இது முற்றிலும் தவறானது என்பதை இன்றைய நற்செய்தியின் வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார். "அடுத்தவரைப் பற்றி தீர்ப்பிடும்போது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றல்ல,  நீ எப்படிப்பட்டவன் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிறாய் " என்று வேன் டயர்என்ற அறிஞர் கூறியுள்ளார்.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் தங்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு என்றும் பெருமை பாராட்டிக் கொண்டனர். அதிலும் குறிப்பாக பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் சதுசேயர்கள் மற்றவர்களின் குற்றங்களை கண்டு குறை காண்பவர்களாக இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். இப்படிப்பட்ட குறைகாணும்  மனநிலையைக் கண்ட இயேசு  அவர்களை பார்வையற்றவர்கள் என அழைக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் மறைநூலில் அவர்கள் புலமை பெற்றிருந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் புலமை பெறவில்லை. எனவேதான் இயேசு ஒரு முறை "இவர்கள் சொல்வதை செய்யுங்கள், ஆனால் செய்வதை செய்யாதீர்கள் "எனக் கூறியுள்ளார். உண்மையான முதிர்ச்சியடைந்த மனிதன் என்பவர் பிறரை குற்றம் காண்பவராக இருக்கமாட்டார். மாறாக, பிறரின் நிறைகளைக் கண்டு குறைகளைக் களைய வழிகாட்டுவார். இப்படிப்பட்ட முதிர்ச்சி நிறைந்த மனநிலையைப் பெறுவது தான் இயேசுவின் உண்மையான மனநிலை. "நான் நற்செய்தி அறிவிக்கா விடில் ஐயோ எனக்கு கேடு "என்று முதல் வாசகத்தில் கூறிய பவுலடியார் பல்வேறு துன்பங்களும் இடையூறுகளும் தனது நற்செய்திப் பணியில் வந்தபோதிலும் அதிலுள்ள குறைகளை பார்க்காமல் நிறைகளை கண்டு மிகச்சிறந்த இறைப் பணியை செய்தார்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே யாரையும் குறை சொல்லாமல் அவர்களின் நிறைகளைக் கண்டு பாராட்டுவோம்.மனிதன் குறை உள்ளவன் என்பதை ஏற்றுக்கொண்டு நிறைவுள்ள பாதைக்கு நம் வாழ்வை பயணிக்க தொடங்குவோம்.  அப்பொழுது எவ்வளவு இடையூறுகளும் துன்பங்களும் வந்தாலும் நம் வாழ்விலே இலக்கு நோக்கி பயணிக்க முடியும். கடவுள் மட்டுமே நம் குற்றங்களைத் தீர்ப்பிட தகுதி உள்ளவர். நீதித்தலைவர்கள் வழியாக கடவுள் வழிநடத்தியது குற்றங்களை காண்பதற்காக அல்ல ; மீட்கும் நிறைந்த வாழ்வுக்கு வழி காட்டவே. எனவே கடவுள் மட்டுமே நம்மை வழிகாட்ட முடியும் என்ற சிந்தனையில் குறை காணும் மனநிலையை அகற்றிவிட்டு பிறரின் நிறைகளைக் கண்டு நேர்மறை சிந்தனையோடு பயணிக்கத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள நிறைவுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்விலேயே பல நேரங்களில் பிறரின் குறைகளை காண்பவராகக் வாழ்ந்து வந்துள்ளோம் .இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம். பிறரின் நிறைகளைக் கண்டு அவர்களைப் பாராட்டி அவர்களின் குறைகளைக் களைய உழைக்கும் நல்ல இறை ஊழியர்களாக மாற வழிக்காட்டியருளும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 0 =