உங்கள் உறவு தொடரும்!


relationship

6 செப்டம்பர் 2020 ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு - I. எசேக்கியேல் 33:7-9 II. உரோமையர் 13:8-10 III. மத்தேயு 19:15-20

கிளாடியேட்டர் திரைப்படத்தில், தன் மாணவனை அரங்கத்திற்குள் அனுப்புகின்ற அவனுடைய ஆசிரியர், 'உனக்கு விடுதலை வேண்டுமென்றால், மக்களை வெற்றி கொள்!' என்று சொல்லி அனுப்புவார். மக்களை அல்லது மனிதர்களை வெற்றிகொள்தல் என்பது அவர்கள்மேல் உரிமை பாராட்டுதல். ஆனால், நாம் சொல்வது போல இது எளிதல்ல. ஏனெனில், மனிதர்கள் (அ) மாறக்கூடியவர்கள், (ஆ) விருப்பும் வெறுப்பும் பாராட்டுபவர்கள், மற்றும் இவற்றுக்கும் மேலாக (இ) அவர்கள் மறைபொருள்கள், ஏனெனில், அவர்களது உள்ளத்தில் இருப்பது அடுத்தவருக்குத் தெரியாது. ஆனால், நம் குடும்ப மற்றும் குழும உறவுகளில் நாம் பெருந்தன்மையோடு இல்லையென்றால், உறவு பல நேரங்களில் முறிந்துவிடும். பெருந்தன்மையோடு இருக்கும் ஒருவர் அனைவர்மேலும் உரிமை பாராட்டுவார்.

இன்றைய இரண்டாம் வாசகத்திலிருந்து (காண். உரோ 13:8-10) நம் சிந்தனையைத் தொடங்குவோம். புனித பவுல் உரோமையருக்கு எழுதும் தனது கடிதத்தின் நிறைவில், கிறிஸ்தவ வாழ்வு பற்றிய அறிவுரையைத் தருகின்றார். அதில், 'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' என்றும், 'அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அன்பே திருச்சட்டத்தின் நிறைவு' என்கிறார். ஆக, பவுலைப் பொருத்தவரையில், அன்பு செய்யும் ஒருவர் அனைத்துத் திருச்சட்டங்களையும் கடைப்பிடிப்பவர் ஆகிறார். இந்த வார்த்தைகளின் பின்புலத்தில்தான், புனித அகுஸ்தினாரும், 'அன்பு செய். பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்!' என்கிறார். ஆக, நாம் அன்பு செய்யும் ஒருவருக்கு நாம் ஒருபோதும் தீங்கு நினைக்கவோ, தீங்கிழைக்கவோ செய்யாது. ஏனெனில், 'அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது ... அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்' (காண். 1 கொரி 13:5,7).

ஆக, அன்பு என்னும் சொல், வெறும் உணர்வு என்ற நிலையில் இல்லாமல், செயல்வடிவம் பெற பவுல் அழைக்கிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:15-20), நம்பிக்கையாளர்களின் குழுமத்தில் ஏற்படும் உறவு உரசல்களை எப்படி சரி செய்வது என்பதை இயேசு எடுத்துரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார். இது மூன்று நிலைகளில் நடக்கிறது: (அ) ஒற்றைக்கு ஒற்றை சந்தித்து உரையாடுவது. (ஆ) ஒன்று அல்லது இரண்டு பேரைக் கூட்டிச் சென்று உரையாடுவது. (இ) திருச்சபையிடம் சொல்வது. இந்த மூன்று படிகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற காரணிகள் மூன்று: (அ) அடுத்தவரை இழப்பது அல்ல, மாறாக, வெற்றி கொள்வதே நம்  முதன்மையான இலக்காக இருக்க வேண்டும், (ஆ) நான்தான் ஒப்புரவுக்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். (இ) தனிமனித மாண்பும் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

மேற்காணும் மூன்று காரணிகளும் அமைய வேண்டுமென்றால், 'நான் ஒரு காவலாளி' என்ற எண்ணம் எனக்கு வேண்டும். அதாவது, நான் மற்றவருக்கு பொறுப்பாளர். ஏறக்குறைய கடவுள்போலச் சிந்திக்க வேண்டும். ஒரு பறவையின் இறகு கீழே விழுந்தாலும், அதற்கு தான் பொறுப்பு என உணர்பவர் கடவுள். அதுபோல, என்னோடு உறவுநிலையில் இருக்கும் அனைவர்மேலும் உரிமை பாராட்டுவதுதான் காவலாளி நிலை. இந்த நிலைக்கு இறைவாக்கினர் எசேக்கியேலை அழைக்கிறார் கடவுள் (காண். முதல் வாசகம், எசே 33:7-9). காவலாளியாக நியமிக்கப்பட்டுள்ள எசேக்கியேல் கடவுளின் வாக்கைக் கேட்டு, மக்களை எச்சரிக்க வேண்டும். அதாவது, மக்கள் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்வது காவலாளியின் வேலை.

ஆக, அன்பு என்ற ஒற்றைச் சொல்லால் கட்டப்பட்டு, அடுத்தவரை வெற்றி கொள்வதை மட்டுமே தன் இலக்காகக் கொண்டு, மற்றவருக்கான காவலாளியாகத் தன்னையே அடையாளப்படுத்தும் ஒருவரால்தான் உறவு தொடரும். உறவு தொடரும் அந்த இடத்தில் இறைவன் இருக்கிறார்.

இறுதியாக, கடின உள்ளமும் பிடிவாத குணமும் உறவை நீட்டிக்க விடாமல் செய்யும் காரணிகள். ஆகையால்தான், 'உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்!' (காண். திபா 95) என எச்சரிக்கிறது இன்றைய பதிலுரைப் பாடல்.

கொரோனா கால லாக்டவுன் முடிந்து ஆலயங்கள் திறக்கப்படும் இந்த வாரத்தில், உறவுகள் தொடரட்டும் ... சமூக இடைவெளியோ! முகக்கவசங்கள் அணிந்து அடுத்தவரின் முகத்திற்கே கவசமானால் உறவுகள் கைவசம்!

Add new comment

4 + 1 =