Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சட்டமா? மனித நேயமா?
இன்றைய வாசகங்கள்(05.09.2020)-பொதுக்காலம் 22 ஆம் சனி- I-1கொரி4:6-15; II- தி.பா-145: 17-18,19-20,21: III- லூக் 6:1-5
பிராமணர் ஒருவர் அவசரமான ஒரு வேலைக்காக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வேலையின் நினைவாகவே சென்று கொண்டிருந்த அவர் எதிரே மீன்கள் விற்றுக்கொண்டு வரும் ஒரு வயதான பெண்மணியின் மீது மோதினார். அவர் கூடையில் இருந்த மீன்களெல்லாம் சிதறி கீழே விழுந்தன. அதைக்கண்ட அந்த பிராமணர் மிகவும் வருந்தி அப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டதோடு சிதறிய மீன்களை எடுத்து கூடையில் போடவும் உதவினார். அவ்வழியே வந்த மற்றொரு பிராமணர் இதைக்கண்டு பிராமண விதிகளை மீறீ அசுத்தமானவற்றை தொடுகிறீரே என்று குற்றம் சாட்டினார். அதைக்கேட்டு கொஞ்சமும் வருந்தாத முதல் பிராமணர் , இந்த மீன்கள் சிதறி விழ தான்தான் காரணமென்றும், தன் தவறை சரி செய்யாமலும் இப்பெண்ணுக்கு உதவாமலும் சென்றால் நல்ல மனிதனாக இருக்க முடியாது என்றும் கூறிவிட்டு தன் வழி தொடர்ந்தார்.
சட்டங்களும் விதிகளும் மனித மாண்பை மனித வாழ்வை நெறிப்படுத்துவதற்காக மட்டுமே. மனிதநேயத்தை காக்காத எந்த ஒரு சட்டமும் வீணே. நாம் வாழ்கின்ற சமூகத்தில் நாம் கடைபிடிப்பதற்காக நமக்குத் தரப்பட்டுள்ள சட்டங்கள் எல்லாம் மனிதநேயத்தை மதிப்பதற்காகவே எழுதப்பட்டுள்ளன. நம்முடைய அரசியல் சட்டங்கள், திருஅவை சட்டங்கள், அனைத்துமே மனிதநேயத்தை காப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாம் காண்பது என்ன?.
சில நிமிடங்கள் தாமதமாக கடையை மூடியதற்காக, ஊரடங்கு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி மனிதநேயத்தை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தந்தையையும் மகனையும் காவல் நிலையத்தில் அடித்தே கொன்ற சமூகத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அவ்வாறெனில் மனித நேயம் எங்கே போனது?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் ஓய்வுநாளில் வயலிலே கதிர்களைக் கொய்து உண்டு ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டனர். பரிசேயர்களுடைய கண்களுக்கு சீடர்களின் தவறு தெரிந்ததே தவிர அவர்களுடைய பசி தெரியவில்லை. உணவு என்பது மனிதனுடைய அடிப்படைத்தேவை . அதைக்கூட நிறைவேற்றிக்கொள்ள இயலாத அளவிற்கு மனித நேயமில்லா சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் பரிசேயரைக் கடிந்து கொள்ளும் இயேசு அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அவர்கள் உயர்வாக மதித்த தாவீது அரசர் செய்த செயலை மேற்கோள் காட்டுகிறார். இயேசுவின் சில வல்ல செயல்களும் ஓய்வு நாளில் நடந்தேறியதை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம்.
சட்டங்கள் மனிதருக்காக. மனிதர் சட்டங்களுக்காக என்ற கருத்தை இயேசு தெள்ளத்தெளிவாக அதிகாரப்பூர்வமாக கூறுகிறார்.
இன்றைய முதல் வாசகத்திலும் திருத்தூதர் பவுல் "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே " என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டி சட்டத்தை தூக்கிப்பிடித்தால் மட்டும் போதாது மாறாக மனித நேயம் கொண்டவர்களாய் ஒருவரை ஒருவர் ஆதரித்து வாழவேண்டும் என்று நமக்கு அழைப்பு விடுக்கிறார்.பாராபட்சம் பார்க்காமலும், பிறரை எதிர்க்காமலும், இறுமாப்பு கொள்ளாமலும் நாம் வாழ வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறார்.
இன்று திருஅவை நினைவு கூறும் அன்னை தெரசா மனித நேயத்தொண்டிற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார். துன்புறும் மனிதர்களில் துன்புறும் இயேசுவைக்கண்டார். மனித நேயத்தோடு அவர்களுக்காக பணிபுரிய தன்னுடைய துறவற சபையின் சட்டங்களையும் விதிகளையும் மீற அவர் தயங்கவில்லை. மனித நேய தொண்டாற்றவே புதிய சபையை நிறுவிய அவர் அன்பு விதியை ஆதாரமாகக் கொண்டு கல்கத்தா நகர வீதிகளிலே யாருமின்றி அனாதையாய் கிடந்த ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் இயேசுவின் பெயரால் பணிவிடை புரிந்தார்.கருவுற்றால் ஒரு குழந்தைக்குத்தாய், கருணையுற்றால் உலகிற்கே தாய் என்ற வாக்கிற்கிணங்க இன்று உலகமே அவரை அன்னை என்ற அடைமொழியுடன் அன்போடு அழைப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
இன்று நம் மத்தியிலும் இயேசுவைப் போல அன்னைத்தெரசாவைப் போல விதிகளுக்கும் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட மனித நேயத்தொண்டாற்றும் பலரை காண்கிறோம். அவர்களில் ஒருவராக வாழ முயற்சி செய்வோமா? . சட்டங்களை மதிக்கவும் மனித நேயம் காக்கவும் அத்தகைய சட்டங்கள் மனித நேயத்திற்கு எதிரானால் அதை தைரியமாக எதிர்க்கவும் வேண்டிய அருளை இறைவனிடம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
கருணையின் உறைவிடமே இறைவா!
மனித மாண்பை, மனித நேயத்தை காக்கும் கடமையை எங்களுக்கு உம் மகன் இயேசுவின் மூலம் அளித்துள்ளீர். நாங்கள் அதை உணர்ந்தவர்களாய், வெறும் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படாமல் மனித நேயத்தோடு தேவையில் இருப்பவர்களுக்கு உதவும் வரம் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment