எது உண்மையான மதிப்பு | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (22.08.2020)பொதுக்காலத்தின் 20 ஆம் சனி-   I: எசே: 43: 1-7a; II: 85: 8b, 10-11, 12-13; III: மத்:  23: 1-12

"எது உண்மையான மதிப்பு! "
 
இன்றைய நற்செய்தியில் பரிசேயகளின் மனநிலையை இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.  எப்போதுமே தாங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்று பரிசேயர்கள் இயேசு வாழ்ந்த காலத்தில்  எண்ணிக்கொண்டிருந்தனர். எங்கு சென்றாலும் தாங்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும், தங்களை மற்றவர்கள் உயர்வாக நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், தொழுகைக்கூடங்களில் அவர்கள் முதன்மையான இடங்களை விரும்ப வைத்தது. முன்வரிசையில் உட்கார்ந்தால், கடவுளின் வார்த்தையை நன்றாகக் கேட்க முடியும், தகுதியான முறையில், பக்தியான முறையில் பங்கேற்க முடியும் என்பதற்காக அல்ல, மாறாக, மற்றவர்கள் பார்க்கும் வண்ணம், பக்தியாக இருப்பது போல நடிக்க முடியும் என்பதற்காககத்தான். இத்தகைய மனநிலை நம்மில் பலருக்கு இருக்கின்றது. மக்கள் பார்க்க வேண்டுமென்று பல நற்செயலை செய்கின்றோம். இவை இவ்வுலகம் சார்ந்தது. நாம் எப்பொழுது கடவுளின் மகிமையை புகழ்வதற்காக நற்செயல்களை செய்கின்றோமோ அப்பொழுது நாம் இறைவனின் பிள்ளைகளாக உருமாற முடியும். 

மேலும் பரிசேயர்கள் மக்கள் கூடக்கூடிய இடங்களில் ”ராபி” என்று அழைக்கப்படுவதை விரும்பினார்கள். இது எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் ஒரு குழந்தைதனது பெற்றோருக்கு கொடுக்கும் மரியாதையை விட உயர்ந்ததாக இவை கருதப்பட்டது. பிறரிடம் மதிப்பைப் பெற வேண்டும் என்ற மனநிலையோடு எல்லாவற்றையும் செய்தார்கள். பெற்றோரை விட தாங்கள் தான் ஒரு மனிதரை சிறந்த மனிதராக மாற்றுகிறோம் என்ற மமதையில் வாழ்ந்தவர்கள். தங்களை  "தந்தை” என்றும் அழைக்கப்பட விரும்பினார்கள். காரணம், தந்தை என்பது உயர்ந்த இடத்தைக் குறிக்கும் சொல். இஸ்ரயேல் மக்களின் தலைவர்களை, வழிநடத்தியவர்களைத் ”தந்தை” என்ற உரிமையோடு மக்கள் அழைத்தனர். எலிசா இறைவாக்கினர், எலியாவை தந்தை என்று அழைத்தது போல (2அரசர் 2: 12) தங்களையும் அழைக்க வேண்டும் என எதிர்பார்த்தனர் .

தாங்கள் மதிப்பும் மரியாதையும் பெற்றுக்கொள்ள எவற்றையும் செய்யத் தயாராக இருந்தனர் . அவர்கள் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல காட்டினாலும் தங்களுடைய பெயருக்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.  மதிப்பும், மரியாதையும் நாமாக விரும்பிக்கேட்டு வருவது அல்ல. நாம் வாழ்கிற வாழ்வைப்பார்த்து, அதுவாக நம்மைத் தேடி வர வேண்டும். அதுதான் உண்மையான மதிப்பும், மரியாதையும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் தற்பெருமை உள்ளவர்களாக வாழ்ந்தனர்.  எனவேதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பரிசேயர்களை கடுமையாகச் சாடுகிறார். மேலும் அவர்களிடமுள்ள மறைநூல் அறிவின் படி வாழவும், அவர்களின் வாழ்க்கை முறைப்படி வாழாமல் இருக்கவும் இயேசு இன்றைய நற்செய்தி வழியாக அழைப்பு விடுக்கிறார். 

நம்முடைய அன்றாட வாழ்விலே பல நேரங்களில் பரிசேயர்களைப் போல தற்பெருமை கொண்டவர்களாகவும்  மதிப்பும் மரியாதையும் எதிர்பார்க்க கூடியவர்களாகவும் வாழுகின்றோம். இத்தகைய மனநிலை ஆண்டவர் இயேசுவின் பார்வையில் விமர்சிக்கபடவேண்டியது.  

இன்றைய நாளில் நம் தாய் திருஅவையோடு இணைந்து தூய கன்னி மரியா விண்ணக மண்ணக அரசியாக முடிச்சூட்டப்பட்டதை நினைவு கூறுகின்றோம்.  மிகப்பெரிய மீட்பு திட்டத்திற்கு முக்கிய நபரான அன்னைமரியாள் நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றார். அவர் விண்ணக மண்ணக அரசியாக உயர்த்தப்பட்டது அவரின் நற்பண்புகளுக்கு கிடைத்த பரிசாகும்.

இன்றைய நற்செய்தியில் வருகின்ற பரிசேயர்கள் தாழ்ச்சி இல்லாதவர்களாகவும் தற்பெருமை உடையவர்களாகவும்  மதிப்பையும் மரியாதையையும் எதிர்பார்க்க கூடியவர்களாகவும் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். ஆனால் அன்னை மரியாள் தன்னை முன்னிறுத்தாமல் கடவுளை முன்னிறுத்தினார். "இதோ ஆண்டவரின் அடிமை " என்று மீட்பின் திட்டத்திற்கு தன்னையே முழுவதுமாக கடவுளிடம் அர்ப்பணித்தார். மதிப்பையும் மரியாதையையும் எதிர்பார்க்காத அன்னை மரியாவுக்கு  அவரின் தியாகத்தையும் நற்பண்புகளையும் முன்னிட்டு  உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகம் அடைய திருவுளம் கொண்டார். அதுமட்டுமல்ல, எல்லோரும் மதிக்கும் விதமாக விண்ணக மண்ணக அரசியாக முடிசூடி உயர்த்தினார்.

எனவே இன்றைய நாளிலே கடவுள் நமக்கு மிகப்பெரிய பாடத்தை கொடுக்கிறார். நாம் கடவுளை முன்னிறுத்தி தம்மையே தாழ்த்திக் கொள்ளும் பொழுது நாம் செய்யும் அனைத்தையுமே கடவுள் வெற்றி பெறச் செய்வார். கடவுளை முன்னிறுத்தாமல் சுயநலத்தோடும் தற்பெருமையோடும்  நம் வாழ்விலே  பயணிக்கும் பொழுது கடவுள் தரும் வெற்றியை உணர முடியாது. எனவே இன்றைய நாளில் நம்மிடம் உள்ள தேவையற்ற தற்பெருமை மதிப்பும் மரியாதையும் எதிர்பார்க்கும் மனநிலை பிறரை ஒடுக்க நினைக்கும் மனநிலை ஆகியவற்றைக் களைந்து, அன்னை மரியா கொண்டிருந்த தியாக மனநிலையையும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தையும் நாம் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். அப்பொழுது கடவுள் தரும் உண்மையான மதிப்பு அன்னை மரியாவை போல நமக்கும் கிடைக்கும். விண்ணக மண்ணக அரசியாக அன்னை மரியாவின் மனநிலை பெற்றுக்கொள்ள தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! பல நேரங்களில் நாங்கள் பரிசேயர்களைப் போலஎங்களை மையப்படுத்துபவர்களாக  வாழ்ந்து வருகின்றோம். அப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருக்காமல் விண்ணக மண்ணக அரசியாக அன்னைமரியா கொண்டிருந்த மனநிலையை நாங்கள் பெற்றுக் கொள்ள தேவையான தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தையும் தியாக மனநிலையையும் அர்ப்பணம் நிறைந்த வாழ்வையும் எங்களுக்கு தந்தருளும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

10 + 9 =