Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புனித சனிக்கிழமையன்று...
இயேசுவின் அடக்கத்தின்போது, அவரது உடலைப் போர்த்தியிருந்த புனிதத் துணி, ஏப்ரல் 11, புனித சனிக்கிழமையன்று, தொலைக்காட்சி மற்றும் சமூகத் தளங்கள் வழியே மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
Shroud of Turin, Sacra Sindone என்னும் பெயர்களால் அழைக்கப்படும் புனிதத் துணி, தூரின் நகரில் பாதுகாக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் புனிதத் துணி ஆகும்.
இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருச்சாயல் அம்மனிதன் சிலுவையில் அறையப்பட்டு, வேதனையுற்ற தோற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இந்தத்துணி இத்தாலியின் தூரின் நகரில் புனித திருமுழுக்கு யோவான் பெருங்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
புனிதத் துணியில் தெரிகின்ற உடற்கூறுகளும் கறைகளும்
- ஒரு கையின் மணிக்கட்டில் வட்டவடிவத்தில் பெரியதொரு காயம் தெரிகிறது. ஆணியால் துளைக்கப்பட்டதுபோல் உள்ளது. மறுகையின் மணிக்கட்டு காயம் தெரியும் கையின் கீழ் உள்ளதால் அதன் காயம் தெரியவில்லை.
- தொண்டைப் பகுதி புடைத்திருக்கிறது. அது, சிலுவையில் தொங்கிய மனிதன் இறந்தபின் காயத்திலிருந்து வெளியான இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் நிணநீர் தேங்கியதால் ஏற்பட்டிருக்கலாம்.
- நெற்றி மற்றும் உச்சந்தலைப் பகுதியில் முண்முடியால் ஏற்பட்டதுபோன்ற சிறு காயங்களின் அடையாளங்கள் உள்ளன.
- கசை நார்களின் நுனியில் சிறு உலோகத்துண்டுகள் இருந்து, அக்கசையால் அடித்தபோது ஏற்பட்ட காயங்கள் உடலின் மேல் பகுதி மற்றும் கால் பகுதிகளில் காணப்படும் காயங்களின் அடையாளங்களாக உள்ளன.
- கடுமையாகத் தாக்கப்பட்டதால் முமம் வீங்கியிருத்தல்.
- மேற்கைகளிலும் முழங்கைகளிலும் இரத்தம் வழிந்தோடியதற்கான அடையாளங்கள் உள்ளன. இது சிலுவையில் அறையப்பட்டதால் ஏற்பட்டிருக்க வேண்டும்.
- காலடிகளில் ஆணிகொண்டு அறைந்ததால் ஏற்பட்ட காயங்கள்
சுற்றுச்சூழலால் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 40 ஆண்டுகளாக புனிதத் துணி மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் திறந்து வைக்கப்படவில்லை.
ஆனால், 2013ஆம் ஆண்டு, மார்ச்சு 30ஆம் நாள் புனித சனிக்கிழமையன்று புனிதத் துணி மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த ஒளிக்காட்சியின்போது வழங்கிய செய்தியில் திருத்தந்தை பிரான்சிசு இவ்வாறு கூறினார்:
"இந்த புனித உடற்துணியில் தெரிகின்ற முகம் இறந்த ஒரு மனிதனின் முகமாக இருந்தாலும், அது நம்மை உற்றுநோக்குகின்ற நாசரேத்து இயேசுவின் முகத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. அந்த முகத்தின் வழியாகக் கடவுள் நம்மோடு உரையாடுவதை நம் இதயக் கண்கள் காண்கின்றன".
இத்தாலியின் தூரின் நகரில், புனித சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு, அதாவது, இந்திய, இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு, புனிதத்துணி வைக்கப்பட்டுள்ள பேராலயத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு வழிபாட்டின்போது, இந்தப் புனிதத்துணி திறக்கப்பட்டு, மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்படும்.
தூரின் பெருமறைமாவட்டத்தின் பேராயர் Cesare Nosiglia அவர்கள் தலைமையேற்று நடத்தும் ஒரு சிறப்பு காட்சி தியானம், மற்றும், செப வழிபாடு, மக்களின் பங்கேற்பின்றி, ஊடகங்களில், நேரடி ஒளிபரப்பின் வழியே, மக்களின் இல்லங்களை அடையும் என்றும், இந்த வழிபாட்டு நேரத்தில், புனிதத்துணி திறந்து வைக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
தீமைகளை வெல்வதற்கு, இறைமகன், சிலுவையில் இறந்ததையும், அன்பினால் அனைத்தையும் வெல்லமுடியும் என்பதையும், நமக்கு தொடர்ந்து நினைவுறுத்தி வரும் புனிதத் துணி, தொற்றுக்கிருமியின் நெருக்கடி நேரத்தில், மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க உதவும் என்ற நோக்கத்துடன், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பேராயர் Nosiglia அவர்கள் கூறினார்.
Add new comment