Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தென்கிழக்கு ஆசியாவில் பெருகும் போதைப்பொருள் வர்த்தகம் : ஐ. நா. தகவல்
தென்கிழக்கு ஆசியாவில், நாடுகடந்து செயல்படும் குற்றக்கும்பல் அமைப்புகள் வளர்ந்து வருவதுடன், ஆதிக்கத்தையும் முக்கியத்துவத்தையும், அதிகமதிகமாக பெற்று வருகின்றன என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. போதைப்பொருள், மருந்துகள், கள்ளச்சரக்குகள், மனிதர் மற்றும் பல்வேறு விலங்கினங்களை, வர்த்தகம் செய்வதன் வழியாக, குற்றக்கும்பல்கள், பல்லாயிரம் கோடி டாலர்கள் என, ஒவ்வோர் ஆண்டும் இலாபம் ஈட்டுகின்றன என்று, ஐ.நா.வின் போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றப் பிரிவு அலுவகம், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கட்டுக்கடங்காமல் இடம்பெறும் ஊழல்கள், காவல்துறையின் பலவீனம், எல்லைக் கட்டுப்பாடுகளில் காணப்படும் தளர்ச்சி போன்றவற்றை, இக்கும்பல்கள், தங்களின் வர்த்தகத்தைப் பெருக்குவதற்குச் சாதமாகப் பயன்படுத்தும் என்ற அச்சத்தையும், ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளின் எல்லைகளில், இலஞ்சம் திட்டமிட்டு கைமாறுகின்றது என்றும், தாய்லாந்து, ஹாங்காக், மக்காவோ, தாய்வான் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான போதைப்பொருள் வர்த்தகர்கள் மையம் கொண்டுள்ளனர் என்றும், இவர்கள் பொதுநலப் பாதுகாப்பிற்கும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும், அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
2013 ஆம் ஆண்டில் 1500 (15 பில்லியன்) கோடி டாலர் வருவாயைக் கொடுத்த போதைப்பொருள் வர்த்தகம், கடந்த ஆண்டில் 3030 கோடியிலிருந்து 6140 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான், நியு சிலாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளின் சந்தைகளில் மட்டுமே, இந்த வர்த்தகம் ஏறத்தாழ 2000 கோடி டாலர் வருவாயைக் கொடுத்துள்ளது. இது, உலகளவில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியாகும்.
(ஆசியா நியூஸ் / ஏஜென்சிஸ் /வத்திக்கான் நியூஸ்)
Add new comment