Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 23.09.2022


வேரித்தாஸ் செய்திகள் - 23.09.2022

1. உக்ரைன் மக்களுக்காக செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

செப்டம்பர் 21, இப்புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரைக்குப்பின், உக்ரைனில் போரினால் துயருறும் மக்களோடு தனது அருகாமையைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

மிக அதிகமாக வேதனைகளை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களோடு, எண்ணங்கள் மற்றும் செபங்களால் நம் அருகாமையைத் தெரிவிப்போம் என்றுரைத்த திருத்தந்தை, அந்நாட்டில் நான்காவது முறையாக, மனிதாபிமான, மற்றும், மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்ட கர்தினால் Konrad Krajewski அவர்களோடு, செப்டம்பர் 20, செவ்வாயன்று, தான் தொலைப்பேசியில் பேசியது குறித்து குறிப்பிட்டார்.

உக்ரைனில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள், அந்நாட்டில் இடம்பெற்றுள்ள போரின் கொடூரங்கள், மிருகத்தனமான செயல்கள், சித்ரவதைக்கு உள்ளான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது போன்றவற்றை கர்தினால் Krajewski அவர்கள் விவரித்தபோது மிகுந்த வேதனையடைந்தேன் என்று, புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைனுக்கு மனிதாபிமான பயணத்தை மேற்கொண்டு, செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று உரோம் திரும்பியுள்ள, பிறரன்பு திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Krajewski அவர்கள், அந்நாட்டின் நிலைமை குறித்து திருத்தந்தையிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

2. பங்களாதேஷில் இயேசு சபையினரின் முதல் பள்ளி

பங்களாதேஷ் நாட்டுச் சிறாரை, நல்ல குடிமகன்களாக உருவாக்கும் நோக்கத்தில், அந்நாட்டில் இயேசு சபையினர், தங்களின் முதல் பள்ளிக்கூடத்தைத் தொடங்கியுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

தலைநகர் டாக்காவுக்கு அருகில், Gazipur மாவட்டத்தின் Kuchilabari நகரில் இக்கல்வி ஆண்டில் இயேசு சபையினர் தொடங்கியுள்ள புனித சவேரியார் பன்னாட்டு பள்ளியில் (St. Xavier's International School) தற்போது 34 மாணவர்கள் படித்து வருகின்றனர் என்றும், இப்பள்ளியில் 600 மாணவர்கள் வரை கல்வி கற்க வசதி உள்ளது என்றும் பீதேஸ் செய்தி தெரிவித்துள்ளது.

இப்பன்னாட்டு பள்ளியின் தலைமை ஆசிரியரான இயேசு சபை அருள்பணி Probash Rozario அவர்கள், இப்பள்ளி குறித்து பீதேஸ் செய்தியிடம் விளக்குகையில், ஏற்கனவே தொடங்குவதாய் திட்டமிடப்பட்டிருந்த இப்பள்ளிக்கூடம், பெருந்தொற்று பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது என்றும், இப்போது அத்திட்டம் நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்.

அண்மை ஆண்டுகளில், Motbari பங்குத்தள பகுதியில் சிறாருக்கு ஆங்கிலப் பள்ளியின் தேவை அதிகமாக இருந்தபோதிலும் அத்தகைய பள்ளி இதுவரை அங்கு இல்லை என்று கூறியுள்ள அருள்பணி ரொசாரியோ அவர்கள், "ஒரு தீ மற்ற தீயை எரியச் செய்கிறது" என்ற விருதுவாக்கோடு இப்பள்ளியைத் தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சிறார் நல்ல குடிமக்களாகவும், நாட்டுப்பற்று உள்ளவர்களாகவும் உருவாக அவர்களோடு உடன்பயணிக்க விரும்புகின்றோம் என்று அருள்பணி ரொசாரியோ அவர்கள் எடுத்தியம்பியுள்ளார். 

மேலும் இப்பள்ளியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரும், டாக்கா பேராயருமான Bejoy N. D'Cruze அவர்கள், பங்களாதேஷில் திருஅவை கல்வித்துறையை மேம்படுத்த விரும்புகிறது, அதற்குச் சான்றாக இக்கல்வி நிலையம் விளங்குகிறது என்று கூறியுள்ளார். 

பங்களாதேஷில் 90 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். ஆயினும், அந்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம், 13 கல்லூரிகள், 200க்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், 500க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகள், மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களை கத்தோலிக்கத் திருஅவை நடத்துகின்றது. (Fides)

3. Fiona புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிக்கப்பட அழைப்பு 

தொமினிக்கன் குடியரசு, புவர்த்தோ ரிக்கோ ஆகிய கரீபியன் பகுதி குடியரசுகளில் Fiona புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கிறிஸ்தவர்கள் ஆதரவளிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

செப்டம்பர் 21, இப்புதனன்று அந்நாடுகளின் ஆயர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திருத்தந்தையின் செபங்களும் ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 19, இத்திங்களன்று பெய்த கனமழை மற்றும், புயலால், புவர்த்தோ ரிக்கோ குடியரசில், 13 இலட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் மற்றும், தொழில்களுக்கு மின்வசதி கிடையாது. 30 செ.மீ. அளவில் பெய்த மழையால் வீடுகளும், சாலைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. 

தொமினிக்கன் குடியரசில், 11 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வசதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

4. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா (SII), நாட்டின் முதல் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்த புற்றுநோய் தடுப்பூசி விரைவில் விற்பனைக்கு வரும் என நிறுவனமும், இந்திய அரசாங்கமும் அறிவித்துள்ளன.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் 6,04,000 கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதன்போது நோயால் 3,42,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயானது உலகளவில் பெண்களிடையே நான்காவது பொதுவான புற்றுநோயாகும் என கண்டறியப்பட்டுள்ளது.

மனிதனை தாக்கும் இரண்டு பாப்பிலோமா வைரஸ்(HPV) வகைகளான 16 மற்றும் 18, என்பன குறைந்தது 70% கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்களுக்கு காரணமாகின்றன. இவை அண்மையிலேயே கண்டறியப்பட்டுள்ளன.

சீரம் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு, மேற்குறிப்பிட்ட இரண்டு வைரசுக்களுக்கும் பதிலளிக்கும் என தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசி, கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயால் ஏற்படும் பெண் இறப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கும் என சீரம் நிறுவன தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி சில மாதங்களுக்குள் முதலில் இந்திய சந்தைக்கும், பின்னர் உலகத்திற்கும் விற்பனைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதன் விலை இந்தியாவில் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை இருக்கலாம்.

 

-வத்திக்கான் செய்திகள் 

 

Add new comment

2 + 3 =