சுற்றுசூழல் சீர்கேடும் ஒரு சமூக அநீதி : திருத்தந்தை பிரான்சிஸ் 


Catholic News Agency

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏழைகளே அதிகம் பாதிக்கப்படும்வேளை, இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வோர் உயிரின் அழகையும், கூறுபடாதன்மையையும் பாதுகாத்து அவற்றை வருங்காலத்திற்குக் கொடுப்பதற்கு, உலகினரின் வாழும் நிலையில் புதுப்பித்தல் அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இத்தாலியில், 2016 ம் ஆகஸ்ட் மாதத்தில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அமட்ரிஸ்  நகரில், ‘அமேசான் கோளம்’ என்ற தலைப்பில், ஜூலை 06, இச்சனிக்கிழமையன்று, கூட்டம் நடத்திய, Laudato si’ குழுவுக்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமட்ரிஸ் பகுதியில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அமட்ரிஸ்ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 300க்கும் அதிகமான மக்கள் பலியானார்கள், இது நடந்து இரண்டு மாதங்கள் சென்று, அவ்விடத்தைப் பார்வையிட்டது, இன்னும் நினைவில் மறையாமல் உள்ளது என்றும், பாதிக்கப்பட்ட அம்மக்களின் நினைவு, தனது இதயத்தில் எப்போதும் இருக்கின்றது என்றும், திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

நம் பூமிக்கோளத்தை மாசுபடுத்தும் நெகிழிப் பொருள்கள் குறித்து, Laudato si’ குழுக்கள், கடந்த ஆண்டில் கூட்டம் நடத்தின என்றும், இவ்வாண்டு, அமேசான் மற்றும், அப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் நிலைமை குறித்தும் சிந்திக்கின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, சமுதாய நீதியும், சுற்றுச்சூழலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை மறக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.

அமேசானில் இடம்பெற்று வருபவை, உலக அளவில் எதிரொலிக்கின்றன, தங்களின் பூர்வீக நிலப்பகுதி திருடப்பட்டதால், சொந்த நிலப்பகுதியிலே, வெளிநாட்டவர் போன்று, ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், அமேசானில் வாழ்ந்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Laudato si’ குழுக்கள், புதிய வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதற்குத் தங்களை அர்ப்பணித்து வருவதைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, ஆராதனை, திருநற்கருணை மற்றும் தவ வாழ்வு பற்றியும், தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.     

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாப்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Laudato si’ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலை வெளியிட்ட பின்னர், இத்தாலியின் பல்வேறு இடங்களில், Laudato si’ குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

1 + 0 =