Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருஅவைகள், சமூக நீதிக்காக அர்ப்பணிப்பது முதற்கடமை: திருத்தந்தை
புலம்பெயர்ந்தவர்களை வரவேற்பது என்பது, அவர்களுக்கு உதவிபுரிவதோடு நிறுத்திக்கொள்வது மட்டுமல்ல, மாறாக, அந்த மக்கள் புலம்பெயர்வதற்கு காரணம், மனித அடிமைமுறையின், பழைய மற்றும் புதிய வடிவங்களின் ஆபத்துக்கள் பற்றி ஆராய்வது, போன்றவை அவசியம் என்று, முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கூறியுள்ளார்.
நேப்பிள்ஸ் நகரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், ஜூன் 21, இவ்வெள்ளியன்று நடைபெற்ற, இறையியல் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், நேர்மையான வரவேற்பிற்கு உண்மை மற்றும், நீதி அவசியம் என்று கூறியுள்ளார்.
இயேசு சபையினரின் நேப்பிள்ஸ் பாப்பிறை இறையியல் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரும், இறையியல் துறையின் தலைவருமான இயேசு சபை அருள்பணி Giuseppe Di Luccio (கிஸேப்பே டி ழுச்சியோ) அவர்களுக்கு, இச்செய்தியை அனுப்பியுள்ள, முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள், முதலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வாழ்த்தியுள்ளார்.
சந்திப்பின் கடலாகிய மத்திய தரை கடலை, கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில், இக்காலத்தில் மாறுபட்ட மதிப்பைக் கொண்டிருக்கின்றது, இக்கடல், சிலவேளைகளில், உலகின் வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே, மக்கள் கடந்துசெல்ல முடியாத எல்லையாகவும், கிறிஸ்தவத்தின் அந்நியரை வரவேற்கும் சிறந்த பண்பிற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு.
வறுமை, சமய சகிப்பற்றதன்மை, போர்கள் போன்ற துன்பநிலைகளால் புலம்பெயர்ந்துவரும் மக்களை எவ்வாறு வரவேற்கிறோம், இவர்களை ஏன் வரவேற்கிறோம், எப்படி வரவேற்க வேண்டும் போன்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள், திருஅவைகள், சமூக நீதிக்காக அர்ப்பணிப்பதை முதற்கடமையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வரவேற்கப்படும் மக்களும், தங்களை வரவேற்பவர்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள் போன்றவற்றை மதித்து நடக்க வேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதையும், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
(நன்றி: வத்திக்கான் செய்திகள்)
Add new comment