திருஅவையில் இளையோர் பணி


Pope to Youth: Do Not Conform to a Mediocre Life - ZENIT - English ZENIT

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, ஜூன் 19, இப்புதன் முதல், ஜூன் 22 வருகிற சனிக்கிழமை முடிய, உரோம் நகரில், "மாமன்றமாக இணைந்துவரும் திருஅவையில் இளையோரின் செயல்பாடு" என்ற தலைப்பில், கருத்தரங்கு ஒன்றை நடத்தி வருகிறது.

இளையோரை மையப்படுத்தி, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு தொடர்ச்சியாக, இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் செய்தியாளர்களிடம் அறிவித்தது.

"இளையோர், நம்பிக்கை, அழைத்தல் குறித்த தெளிந்து தேர்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, இக்கருத்தரங்கு உதவியாக இருக்கும் என்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் செயலர், அருள்பணி. அலெக்சாண்டர் அவி மெல்லோ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "கிறிஸ்து வாழ்கிறார்" என்ற தலைப்பில் வெளியிட்ட திருத்தூது அறிவுரை மடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இக்கருத்தரங்கில் இளையோரால் ஆழமாக ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 109 நாடுகளிலிருந்து, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட 246 பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் கலந்துகொள்கின்றனர் என்றும், இவர்களில் 18 பேர், உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றனர் என்றும் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இக்கருத்தரங்கு நடைபெறும் நாள்களில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, இளையோர், சமூக வலைத்தளங்கள் வழியே இக்கருத்தரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை அறிவித்துள்ளது.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

2 + 1 =