Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தாழ்ச்சியோடும் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் தந்தையிடம் கேட்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 27 ஆம் வியாழன்
செபமாலை அன்னை திருவிழா; I: மலாக்கி 3:13-20; II : தி.பா 1:1-4,6; III : லூக்: 11:5-13
கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறுகிறார். கேட்பதில் தவறில்லை. ஆனால் கேட்ட உடனே நமக்குக் கிடைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் தவறு. ஆம் தாழ்ச்சியோடு கேட்கத்தெரிந்த நமக்கு பொறுமையோடு காத்திருக்கவும் தெரியவேண்டும். மீண்டும் பொறுமையோடும் உரிமையோடும் கேட்கவும் தெரியவேண்டும். ஆம் அன்புக்குரியவர்களே நேற்றைய நாளில் இயேசு எவ்வாறு இறைவேண்டல் செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுத்ததை தியானத்தோம். இன்று இயேசு நாம் எத்தகைய மனநிலையோடு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதை கற்பிக்கிறார். அதை நாம் ஆழமாக சிந்திப்போம்.
இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள உவமையில் தன்னுடைய நண்பனின் வீட்டிக் கதவை இரவு நேரத்தில் தட்டி மற்றொரு நண்பனுக்காக உணவு கேட்டபவரைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வுவமையில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அம்மனிதரின் மனநிலை.
முதலாவதாக தன்னுடைய நண்பன் நண்பன் என்ற உரிமை இருந்தாலும் தாழ்ச்சியோடு உதவி கேட்கிறார். தந்தையாகிய கடவுளின் பிள்ளைகள் நாம் என்ற உரிமை நமக்கும் உண்டு. ஆயினும் நாம் தம்முடைய தேவைகளை தாழ்ச்சியோடு வேண்டும் என்பதை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
இரண்டாவதாக தானும் தன் பிள்ளைகளும் படுத்திருப்பதாகவும் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நண்பன் பதில் சொன்ன போதும் நண்பனுக்கு உதவ மனமில்லையே என வருத்தமோ கோபமோ கொள்ளாமல் பொறுமை காத்தார் உதவி கேட்டு சென்றவர். அதைப்போல நாமும் இறைவேண்டல் செய்யும் போது நம் வேண்டுதல்கள் கேட்கப்பட தாமதமாகும் போது விரக்தியும் தளர்ச்சியுமடையாம ம் பொறுமை காக்க வேண்டும் என்ற தெளிவையும் இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
மூன்றாவதாக விடாமுயற்சி. தனக்கு உதவ நண்பன் மறுத்த போதும் திரும்பிச் சென்று விடாமல் தொடர்ந்து தன் நண்பனின் உதவிக்கரத்திற்காக மீண்டும் முயற்சிக்கிறார். இதைப்போல நாமும் விடாமுயற்சியோடு நம் வேண்டலில் நிலைத்திருக்க வேண்டும்.
ஆம் அன்புக்குரியவர்களே இறைவனின் இதயக்கதவைத் திறக்க இறைவேண்டுதல் ஒரு ஆயுதம். அவ்விறைவேண்டலை தாழ்ச்சியோடும் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் செய்து அவரின் இதயக்கதவைத் தட்டுவோம். நமக்காக அக்கதவு நிச்சயம் திறக்கப்படும்.இன்று நாம் செபமாலை அன்னையின் விழாவைக் கொண்டாடுகிறோம். செபமாலை என்பது அன்னையின் பரிந்துரையோடு இறையருளை நமக்கு பெற்றுத்தரும் வல்லமையுள்ள கருவி. செபமாலையை விடாமுயற்சியுடன் நம்பிக்கையோடு செபிப்போம். இறையாசிர் என்றும் நமக்கு உறுதியாய் கிடைக்கும்.
இறைவேண்டல்
அன்பு இறைவா
மனத்தாழ்ச்யோடும் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் செபிக்கும் மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Comments
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
மக்கள் நோயுற்றவர்கள் சிறப்பாக வெற்றி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் ஏசுவுக்கு நன்றி
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
இயேசுவுக்கே நன்றி
Add new comment