Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு - I. எசா: 61:1-2,10-11; II. லூக் 1:47-48, 49-50, 53-54; III. 1தெச: 5: 16-24; IV. யோவா: 1: 6-8,19-28
ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மகிழ்ச்சியை விரும்பாத மனிதர்களே இல்லை. ஆனால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க நம்மையே தகுதிப் படுத்தவேண்டும் என்ற சிந்தனையைப் பலர் மறந்து விடுகின்றனர். நிறைவான மகிழ்ச்சி பெற்றிட நாம் இறைத்திட்டத்தைத் தெரிந்து,அதை ஏற்கவேண்டும். மேலும் இறைவனோடு இணைந்திருந்தது நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு இறைவனோடு இணைந்திருந்து இறைதத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது நிறைவான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். முழுமையான மகிழ்ச்சி அனுபவிக்க நம்முடைய உடலும் உள்ளமும் கடவுளின் திருவுளத்தை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.
ஒரு ஊரிலே சமூக நல ஆர்வலர் வாழ்ந்து வந்தார். அவர் எண்ணற்ற மரங்களை தான் வாழ்ந்த கிராமத்தில் நட்டு வந்தார். சட்டத்துக்கு புறம்பாக இயற்கைகள் சுரண்டப்படும் பொழுது அவர் தன் கண்டனக் குரல் எழுப்பினார். எனவே அனைவரும் இவர் மீது கோபம் கொண்டனர். ஆனால் இவை எவற்றையும் பொருட்படுத்தாமல் அவர் உண்மையோடும் நேர்மையோடும் தான் வாழ்ந்த கிராமத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் மரக்கன்றுகளை அதிகமாக நட்டு வளர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மழை இல்லாமல் பல கிராமத்தில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் வருந்தினர். ஆனால் இவர் வாழ்ந்த கிராமத்தில் மட்டும் அவ்வப்போது மழை பெய்தது. எனவே மற்ற ஊர் மக்களெல்லாம் இவரின் ஊருக்கு தண்ணீர் எடுக்க வந்தனர். அப்பொழுதுதான் இந்த சமூக ஆர்வலரின் பெருமை மக்களுக்கு தெரியவந்தது. இந்த சமூக ஆர்வலரின் முயற்சி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
நாமும் பிறரும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால் பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் சந்தித்தாக வேண்டும். நம் ஆண்டவர் இயேசு இந்த மண்ணுலகில் குழந்தையாகப் பிறந்தது மனிதர்களாகிய நமக்கு மீட்பின் மகிழ்ச்சியை கொடுப்பதற்காகவே. "வானதூதர் இடையர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்: 2:10) எனக் கூறியதை வாசிக்கிறோம். இயேசுவின் பிறப்பு ஒரு மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கின்றது. இயேசு இந்த உலகத்தில் பிறக்கத் தந்தையாம் கடவுள் திருவுளம் கொண்ட பொழுது மக்கள் அனைவரும் கடவுளுக்கு எதிரான பாவங்கள் பல செய்தனர். தங்கள் ஆன்மாவை மீட்டுக் கொள்ள முடியாமல் தவித்தனர். இத்தகைய சூழலில்தான் தந்தையாம் கடவுள் தன் ஒரே மகனை இம்மண்ணுலகிற்கு அனுப்பினார். தந்தையாம் கடவுளின் ஒரே நோக்கம் அனைவரும் மீட்பைப் பெற்று மகிழ வேண்டும் என்பதே.
இந்த மகிழ்ச்சியின் மகனாகிய இயேசுவின் பிறப்பை மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் காலம் தான் இந்த திருவருகைக் காலம். இறைவனை வரவேற்பதற்காகத் திருமுழுக்கு யோவான் வழியை ஆயத்தப்படுத்தினார். "இதோ உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி" (யோவா: 1:29) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டினார். இதன் வழியாக மகிழ்ச்சியின் இறைவன் இயேசுவை அனைவரும் கண்டு அகமகிழ்ந்தனர். நம்முடைய அன்றாட வாழ்விலும் திருமுழுக்கு யோவானைப் போல தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு உடலையும் உள்ளத்தையும் தகுதிப்படுத்தி ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகரும் பொழுது நிச்சயமாக ஆண்டவர் இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறந்து நிறைவான மகிழ்ச்சியை வழங்குவார்.
மேலும் உண்மையான மகிழ்ச்சியை எப்படி பெற்றுக் கொள்வது என்பதை இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் சுட்டிக்காட்டியுள்ளார். "எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்" என்ற இறைவசனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து நேர்மறை எண்ணத்தோடு பிறரை அன்பு செய்ய அழைப்பு விடுக்கின்றது. எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து இடைவிடாது ஜெபித்து இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்கின்ற பொழுது நிறைவான மகிழ்ச்சி நாம் பெறமுடியும் .
இன்றைய முதல் வாசகத்தில் நிறைவான மகிழ்ச்சியை கொடுக்க நாம் ஒவ்வொருவரும் எத்தகைய பணிகளைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்துள்ளோம். "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்" (எசா: 61:1) என்ற இறைவசனம் மனிதநேயமுள்ள மக்களாக வாழ்ந்து பிறர் வாழ்வு வளம் பெற உழைக்கும் பொழுது நாமும் பிறரும் நிறைவான மகிழ்ச்சியைப் பெற முடியும் என்ற கருத்தினை வலியுறுத்துகிறது.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள உண்மையோடும் நேர்மையோடும் இருக்க முயற்சிசெய்வோம். நம் அன்றாட வாழ்வில் உண்மையோடு நேர்மையோடு வாழ்ந்து பாலன் இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க நம்மையே முழுவதுமாக கையளிப்போம். துன்பப் படுகின்ற மக்கள் மத்தியில் நாமும் அவர்களுடன் இருந்து துன்பத்தை மகிழ்ச்சியாக மாற்ற முயற்சி செய்யவோம். இந்த காலகட்டத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் நம்முடைய பங்களிப்பை அவரோடு இணைந்து செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம். வேளாண் மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நாம் உள்வாங்கி அவர்களுடன் இருந்து வெற்றி பெற உழைக்கும் பொழுது, நிச்சயமாக நிறைவான மகிழ்ச்சியை விவசாயிகளும் அவர்களைச் சார்ந்த மக்களும் பெறுவார்கள். எனவே நமது அன்றாட வாழ்வில் மனித சேவையில் புனிதம் கண்டு எந்நாளும் வாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சி யை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம். அத்தகைய அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா எங்கள் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியை அடைய தடையாகயுள்ள அனைத்தையும் விட்டுவிட்டு உமது நற்செய்தி மதிப்பீட்டின்படி வாழ்ந்து நிறைவான மகிழ்ச்சிபெற்றிட தேவையான அருளைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Comments
Excellent
Hi Friends, sermon of the 3rd Sunday of Advent is so meaningful. Thank u
Add new comment