Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை அறிவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 26 புதன்
I: யோபு: 9: 1-12, 14-16
II: திபா: 88: 9-10. 11-12, 13-14
III: லூக்: 9: 57-62
இயேசுவைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை அறிவோமா!
இயேசுவின் பின்னே நான் செல்வேன் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்ற பாடல் வரிகள் நாம் அறிந்ததே. செபக்கூட்டங்களிலும் ஆலயங்களிலும் இந்தப்பாடலை மேளதாளத்தோடும் உற்சாகத்தோடும் கரங்களைத் தட்டியும் நாம் பாடுகிறோமே.ஆனால் நம்மில் எத்தனை பேர் இதன் முழு அர்த்தத்தைப் புரிந்து பாடுகிறோம். இன்றைய வாசகங்கள் நமக்கு சீடத்துவத்தின் சரியான பொருளைத் தருகின்றன. இயேசுவை பின்பற்றுவதற்கான வழிமுறைகளை வகுக்கின்றன.
நற்செய்தியில் மூவர் இயேசுவைப் பின்பற்ற விரும்புவதைப் பார்க்கிறோம்.முதலாமவர் தாமாக முன்வருகிறார். அதற்கு இயேசு மனுமகனுக்கு தலைசாய்க்கக் கூட இடமில்லை என்கிறார். இவ்வாறு சொல்வதால் இயேசு அவரைத் தடுக்கவில்லை. மாறாக எச்சூழ்நிலையிலும் தளரா மனமுடையவராய் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். திருமுழுக்கு பெற்ற நாம் எல்லாருமே சீடத்துவ வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள். துறவறமோ இல்லை இல்லறமோ எதைத் தேர்ந்தெடுத்தாலும் நாம் எதிர்கொள்கின்ற ஏழ்மை வறுமை சவால்களை தாங்கிக் கொண்டு இயேசுவைப் பின்தொடர தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம்.
இரண்டாவது நபரை இயேசு அழைக்கிறார்.ஆனால் அவரோ இறந்தவர்களை காரணம் காட்டி தாமதிக்கிறார். அழைப்பு எல்லாருக்குமானது. ஆனால் நம்மில் எத்தனை பேர் உயிரற்ற உலகம் சார்ந்த பற்றுகளைக் காரணம் காட்டி இயேசுவை முழுமையாகப் பின்பற்ற தாமதிக்கிறோம் என நம்மை ஆய்வு செய்ய வேண்டும்.
மூன்றாவது நபர் இயேசுவை பின்பற்ற விரும்பி முன்வருகிறார். இருப்பினும் தன் கடைமைகளை நினைத்துப் பின்வாங்குகிறார். அந்த கடைமைகள் அவருடைய உலகப் பிடிப்புகளைக் குறிக்கின்றன. ஒருகாரியத்தை முன்னெடுத்த பின் பின்வாங்கினால் அது முழு வெற்றியை அடையாது. அது போலத்தான் இயேசுவைப் பின்பற்ற விரும்பி அர்ப்பணத்த பின் யோசிப்பது சீடத்துவத்துக்கு எதிரானது. கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்ப்பதற்கு சமமாகிவிடும்.
அன்புக்குரியவர்களே நாம் இயேசுவை முழு மனதோடு முழு உற்சாககத்தோடு பின்பற்றுகிறோமா? அல்லது காரணங்களைக் காட்டி தாமதித்து பின்வாங்குகிறோமா?இத்தகைய மனநிலை நம்மிடமிருந்தால் இயேசுவின் துணையோடு மாற்ற முயலுவோம். சரியான மனநிலையிலும் வழிமுறையிலும் அவரைப் பின்பற்றுவோம்.
இறைவேண்டல்
அழைப்பின் இறைவனே! எதற்கும் தயாரான சரியான மனநிலையிலும் வழிமுறையிலும் உம்மைப் பின்பற்ற வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment