நாக்கில் பட்ட சுவையும் நலமில்லா வாழ்வும் | Sunday Reflection


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு
I 9: 13-18  

II 1: 9-10, 12-17

III 14: 25-33

நிகழ்வு:
    நான் 2008ஆம் ஆண்டு எங்கள் மறைமாவட்ட இளங்குருமடத்தில் சேர்ந்த போது எங்களுக்கு நடந்த முதல் மாதாந்திர தியானத்தில் எங்கள் ஆன்மிகத் தந்தை சொன்ன அருமையான கதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அழகிய எழில் கொஞ்சம் இயற்கை சூழந்த மலை பகுதிக்கு அருகில் மடம் ஒன்று இருந்தது. அதில் துறவறம் மேற்கொள்ள விரும்பி பல இளைஞர்கள் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தனர். செபம், தவம், ஒறுத்தல், சீடத்துவம் என்றெல்லாம் தங்கள் வாழ்வை பல்வேறு ஆன்மிகப் பயிற்சிகளால் மெருகுவூட்டி கொண்டிருந்தனர். எல்லாரும் நன்றாக படித்து கொண்டிருந்தனர். அப்போது அம்மடத்தின் தலைவர் இறுதியாண்டை நெருங்கிக் கொண்டிருந்த ஏழு மாணவர்களைக் உலக அனுபவத்திற்காக ஒரு நாள் வெளியே அனுப்பினார். போங்கள், நேரத்தை நகரில் உள்ளவரோடு செலவிடுங்கள். அனுபவம் பெற்று வாருங்கள் என்றார். தலைவரின் கட்டளைப்படி சென்றனர். மாலையானதும் மடத்திற்கு திரும்பினர். மடத்தின் தலைவர் இரவு உணவு உண்பதற்கு முன் கேட்கிறார்: எப்படி இருந்தது? நல்ல அனுபவம் கிடைத்ததா? என்ன கற்றுக்கொண்டீர்கள்? அனைவரும் அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். நன்று. நன்றாக நீங்கள் அனுபவம் பெற்றதை எண்ணி மகிழ்கிறேன். வாருங்கள் உணவருந்த செல்லலாம் என்று அழைத்து வந்தார். அனைவரும் உண்டனர். ஒருவர் மட்டும் சென்று, உணவு சமைத்த பாட்டியிடம் இன்னைக்கு உப்பு கம்மியாயிருக்கு கொஞ்சம் கொடு என்றான். பாட்டி எதுவும் அவனிடம் சொல்லாமல் நேராக தலைவரிடம் வந்து, இவன் இந்தப்பணிக்கு தகுதியற்றவன். இவனை உடனே வெளியே அனுப்புங்கள் என்றார். திக்குமுக்காடிபோன தலைவர் ஏன் என்றார். இவன் நாக்கில் சுவை வந்துவிட்டது. இவன் வாழ்வு நலமானதாய் அமையாது. சீடத்துவ வாழ்வின் சுவை இவனைவிட்டு அகன்றுவிடும் என்றார். இதுவரை உணவில் நான் உப்பிட்டதே இல்லை. அதையெல்லாம் சாப்பிட்டவன், இன்று உப்பில்லை என்று சொல்கிறான் என்றார், எங்கோ இவனின் நாக்கில் சுவை ஒட்டியிருக்கிறது. அது நீங்காது எனவே இவனை நீக்கிவிடுங்கள் என்றார். ஒட்டிய சுவை நம்மைக் கடவுளிடமிருந்து ஓரங்கட்டிவிடும். ஒதுக்கிவிடும். ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் மாற்றிவிடும். சிதறிய மனதோடு வாழும் நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனக்கான சீடத்துவம் என்னவென்று?

இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே!
    இன்றைய நாள் வாசகங்கள் எவ்வாறு ஒருவர் உண்மையான சீடத்துவ வாழ்வில் பங்கேற்க முடியும் என்ற வாழ்வியல் பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன. ஆண்டவரின் அழைப்பை ஏற்றுக்கொள்கிற நாம் ஒவ்வொருவருமே அவரின் சீடத்துவத்தில் பங்கேற்க வேண்டுமென்பதே இறைவனின் விருப்பமாய் இருக்கின்றது. அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற எத்தகைய மனிதனாய் நாம் வாழ வேண்டுமென்பதை தெளிவாய் படம் பிடித்து காட்டுகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. நாக்கில் பட்ட சுவை நலமான வாழ்வை இவனை பேண விடாது என்றுரைத்த அந்த மூதாட்டியின் வார்த்தைகள் நமக்கும் பொருந்தும். என் நாக்கின் சுவை எதன் மீது இருக்கிறதோ அதை பொருத்துதான் என் மனம் செயலாற்றும். அதுவே சீடத்துவ வாழ்வைத் தடுக்கவும், தடுக்க வரும் தடைகளைத் தகர்க்கவும் செய்யும். இதைத்தான் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (மத் 6:21). ஆக நம்முடைய நாக்கின் சுவை சரியாக மாற முயற்சிப்பதுதான் சீடத்துவத்தின் அடையாளம். இதை வலியுறுத்தி வாழ்விற்கான வழியைத்தான் இன்று நாம் வாசிக்க கேட்கும் முதல் வாசகமும், இரண்டாம் வாசகமும் பறைசாற்றுகிறது. 
முதல் வாசகத்தில், 
    

சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இப்பகுதி எவ்வாறு ஒருவர் ஞானமிக்கவராக ஆண்டவரின் சீடத்துவத்தில் பங்கேற்க முடியும் என்ற புரிதலை கொடுக்கிறது. மிகச் சுருக்கமாக பார்க்கையில், மனிதன் தன் நிலையில் தற்காலிகமானவன் என்பதே ஞானம் அறிவுறுத்தும் பாடம். இவ்வுலக செல்வம், பெருமை, புகழ், பதவி, பட்டம், ஆடம்பர வாழ்க்கை இவையெல்லாம் ஆன்மாவை அழிக்கக்கூடியது. கீழ்நோக்கி நம்மைத் தள்ள கூடியது. நிலையற்றவை. இங்கு ஞானநூலின் ஆசிரியர் ஒரு கருத்தை மிகத் தெளிவாக கொடுக்கிறார்: “மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது!” (சாஞா 9: 16). அப்படியென்றால், நாம் வாழும் வாழ்க்கை சருகு போன்றது. எப்போது வேண்டுமானாலும் உதிர்ந்து போகும். எனவேதான் அன்பிற்கினியவர்கள், நம் வாழ்வைச் சற்று ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டும். ஞானமற்றவராய் செய்கிற அனைத்து செயல்களும் நாக்கில் ஒட்டிய சுவையே. அது வீண் சுவை நம் வாழ்வை வீணடிக்கும் தேவையற்ற சுவை. இதை மையப்படுத்தியே நிறைய கேள்விகளை இன்றைய முதல் வாசகம் நம்மிடம் கேட்கிறது. கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? இதெல்லாம் வெறும் கேள்விகள் அல்ல. சீடத்துவ வாழ்விற்கான அடிப்படை தத்துவங்கள். என்ன சொல்ல விழைகிறார்: வெறும் மூன்றே கூற்றுகள்தான். 
1.    இறைத் திட்டத்தை அறிதல் 
2.    இறையிடத்தில் ஒப்படைத்தல் 
3.    இறைத் துணையை நாடுதல் 

இம்மூன்றும் யாரிடத்தில் தெளிவாய் விளங்குகின்றதோ அவர்கள் ஞானமிக்கவராய் இறைவனின் சீடராய் வாழ்கிறார். இதுவே ஞானமாகவும் உள்ளது. 
இதே பின்னணியில் இன்றைய நற்செய்தியைச் சற்று கூர்ந்து கவனிக்க விரும்புகிறேன். இறைத்திட்டம், இறைவனிடத்தில் ஒப்படைப்பு, இறைத் துணையை நாடுதல் இவையனைத்தும் இன்று இல்லாமல் போனதை இரு உவமைகள் வழியாக இயேசு குறித்து காட்ட விரும்புகின்றார். ஒன்று: கோபுரம் கட்டும் நிகழ்வு, இரண்டு: போர் புரிதல். இவை இரண்டும் இரண்டு பலங்களின் அடிப்படை கூறு:
கோபுரம் கட்டுதல் - பண பலம் 
போர் புரிதல் - ஆள் பலம் 

இவையிரண்டுமே சீடத்துவத்திற்கு எதிரானவை. சீடத்துவ கனவைத் தகர்க்கும் வழிகள் என்கிறார் இறைமகன் இயேசு. இத்தகைய பின்னணியில் இன்னுமொரு விடயத்தை இயேசு தருகிறார். என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் பெற்றோர்களையும், சகோதர, சகோதரிகளையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு வர வேண்டும் எனவும், தம் உயிரையும் இழக்கத் துணிய வேண்டுமென்றும் பறைசாற்றுகிறார். இப்படியாய் வாழ முடியாதவர்கள் என் சீடராய் இருக்க முடியாது என்கிறார். என்ன இது சற்றும் மாறுப்பட்ட போதனையாய் இருக்கிறது என சிலர் யோசிக்கலாம். 
பத்துக்கட்டளையில் நான்காம் கட்டளை: “உன் தந்தையையும், தாயையும் மதித்து நட” (விப 20:12) என்கிற கட்டளைக்கு புறம்பாக இயேசு போதிக்கிறாரா? “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா 13:34) என்கிற கட்டளையை இயேசு பின்பற்ற வேண்டாமென்கிறாரா? இல்லை அன்பிற்குரியவர்களே, இன்றைய நற்செய்தியில் எல்லாவற்றையும் கைவிட்டு, துறந்து என்னை மட்டும் மேலானதாக கருதாதவன் என் சீடனாய் இருக்க தகுதியற்றவன் என்றே கூறுகிறார். இதை எப்படிப் புரிந்துகொள்வது? பெற்றோரை அன்பு செய்வதுகூட ஆண்டவருக்கு அடுத்ததாய் அமைதல் வேண்டும். ஆனால் இன்றெல்லாம் நாம் கடவுளை கடைசியாக்கிவிட்டு, காசு பார்க்கும் உழரவெநசராய் மாற்றிவிட்டோம். இதை விடுத்து என்றும் உண்மையான சீடத்துவ வாழ்வு வாழ எதை செய்ய வேண்டும் என்று வழிகாட்டுகிறது இரண்டாம் வாசகம். 
இரண்டாம் வாசகத்தில், 
    

சீடன் என்பவன் எதற்கும் அடிமையாகி விட கூடாது என்பதையும், அடிமை நிலைகூட அன்பு நிலையான மாற வேண்டுமென்ற கருத்தை புனித பவுல் அடிகள் உரைக்கிறார். சிறையிலிருக்கும் புனித பவுல் பிலமோனிடம் இருந்த ஒனேசிமுவை மீண்டும் ஏற்றுக்கொள்ள கடிதம் எழுதுகிறார். தன் தவற்றால் சீடத்துவ வாழ்வின் சுவையை இழந்த ஒனேசிமு மீண்டும் அத்தகைய நிலையைப் பெற்றுக்கொள்ள உதவுகிறார். 1கொரி 7: 24இல் “சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிற நிலையிலேயே கடவுள்முன் நிலைத்திருங்கள்” என்று வாசிக்கின்றோமே இதுதான் உண்மையான சீடத்துவத்தின் அடையாளம். கடவுள் நமக்கு நலமான வாழ்வையும், ஆழமான ஆன்மிகச் சுவையையும் வழங்குகிறார். ஆனால் நாம்தான் அதை பல நேரங்களில் இழந்தும், தேவையற்ற சுவையையும் நம் நாக்கில் மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்விலும்கூட ஒட்டிக்கொள்கிறோம். 
    

நாக்கை நீட்டி நன்மை வாங்கும் நம் நாக்கினால் நலமான வாழ்வைத் தரும் இயேசு வரும்போது வேறு ஏதாவது முன்னரே ஒட்டியிருந்தால், இயேசுவின் வருகையும் நமக்கு தெரியாது, அவரின் வருகைக்கான நோக்கமும் புரியாது. இதைத்தான் சீடத்துவம் என்று மொழிகிறது இன்றைய ஞாயிறு வழிபாடு. எனவே சிந்தித்து பார்ப்போம். நான் எவ்வாறு இயேசுவின் சீடத்துவத்தில் பங்கேற்க முடியும்? அல்லது இயேசு காட்டும் சீடத்துவ வாழ்வில் நான் எப்படி என் வாழ்வைக் கண்டுகொள்ள முடியும்? அதற்கு மூன்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். 
இயேசுவின் சீடனாய் அவரை பின்பற்றி வாழ இம்மூன்று வழிகள் நமக்கு உதவட்டும். யார் ஒருவர் இயேசுவின் சீடத்துவத்தில் பங்கேற்க விரும்புகிறாரோ அவர், 
1.    இணைய வேண்டும்
2.    இழக்க வேண்டும்
3.    துணிய வேண்டும்
இணைய விரும்புவோர், இழக்க துணிவர், இழக்க துணிபவர் எத்தகைய நிலையிலும் துணிவோடு பயணிப்பர். இதுதான் சீடத்துவத்தின் அடையாளம். 
முதலில், இணைய வேண்டும்:
    

இயேசுவின் சீடனாய் வாழ வேண்டுமென்றால், சீடத்துவத்தில் பங்கேற்க விரும்புபவர் முதலில் கடவுளோடு இணைய வேண்டும். கடவுளோடு இணையாதவர் கடவுளின் கட்டளைகளுக்கு தங்களை உட்படுத்த முடியாது. மாற்கு 3: 14 இல் பார்க்கிறோம் - “தம்மோடு இருக்கவும்” இயேசு சீடர்களுக்கு போதித்த கட்டளை. சீடர்களாக வாழ நினைப்பவர்கள் அவரோடு இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும். யோவான் 15: 4, “நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது” என்று வெளிப்படையாகவே இயேசு யோவான் நற்செய்தியில் கூறுகிறார். எனவே இறைவனுடன் இணையும் பொழுதுதான் எவையெல்லாம் என் வாழ்வின் தேவையற்ற இணைப்புகள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய நிலையைத்தான் புனித பவுல் இவ்வாறு சொல்கிறார்: 1கொரி 11: 1 – “நான் கிறிஸ்துவைப் போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப் போல் நடங்கள்”. இயேசு எப்படி நடந்தார்? “மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்” (மத் 14:23) இதுதான் உண்மையான இணைதல். இது இருக்கும்போது நாம் அவரின் சீடராய் வாழ்கிறோம். 
இரண்டாவது, இழக்க வேண்டும்: 
    

இயேசுவின் சீடனாய் வாழ வேண்டுமென்றால், சீடத்துவத்துக்கு தடையாக இருக்கும் அனைத்தையும் இழக்க வேண்டும். இழப்பே இணையற்ற வாழ்வைப் பெற்றுத்தரும். இழப்புகள் ஒவ்வொன்றுமே இணையற்ற இணைப்புகளைக் கொடுக்கின்றன. இதை புனித பவுல் தன் வாழ்வின் அனுபவத்திலிருந்து இவ்வாறு பறைசாற்றுகிறார்: “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” (பிலி 1:21). “உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில், என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நாம் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்” (பிலி 3:8) என்று சீடத்துவத்தில் பங்கேற்க எல்லாவற்றையும் இழக்க விரும்புகிறார் பவுல். இணைவது முழுமையாய் அமைய வேண்டுமென்றால், அதற்கு நாம் இழக்க வேண்டும். இழப்பினால் இணைப்பு இன்னும் அதிகமாகவும், நெருக்கமாகவும் மாறும். 
மூன்றாவது, துணிய வேண்டும்:
    

இயேசுவின் சீடத்துவ வாழ்வில் பங்கேற்க துணிவு மிக அவசியம். துணிவு என்றால் சண்டைக்கு போவது மட்டுமல்ல. ஆன்மிகத்தைப் பின்பற்றுவதில்கூட நமக்கு துணிவு வேண்டும். எப்போது வரும், தன்னிலை உணரும் போதும், கை சுத்தமாய் இருக்கும் போதும். மடியில் கணம் இருந்தால், வழியில் பயம் இருக்கும் என்பார்கள். அது மனித வாழ்வுக்கு மிகவே பொருந்தும். எவர் ஒருவர் தன் வாழ்வில் துணிந்து முன்னேறுகிறாரோ அவர் சீடத்துவத்தின் அடையாளத்தை அணிந்;துகொள்கிறார். ஏனெனில்;, நாம் போராடுகிறோம், எவ்வாறு எபே 6:12 இல் “நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்” என்கிறது பவுலின் வார்த்தைகள். இத்தகு சூழலில் நிச்சயம் நமக்கு துணிவு அவசியம். அது நற்செய்தியில் வருவதுபோன்று ஆள்பலமோ, பணபலமோ அல்ல. மாறாக, இறை பலம். எப்படி கிடைக்கும்? பிலி 4:8 “சகோதர, சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்” இதுதான் துணிவுமிகுந்த வாழ்வு. 
ஆகவே, இவையனைத்தும் நம்மிடம் இருந்தால், இறைவனுடன் இணைவதும், இழப்பில் மகிழ்வதும், இணைவதன் வழியாக, இழப்பதன் வழியாக துணிவோடு பயணிக்கும் ஆற்றலை பெறுவதிலும் எவ்வகை சிரமமமும் நம்மில் எழாது. சீடத்துவ வாழ்வும் சிறப்பாய் அமையும். அதற்கான அருளைத் தொடர்ந்து கேட்போம்! 
“கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்” (எபே 4:13)

 

Add new comment

1 + 10 =