கடவுளிடமிருந்து பாராட்டு பெறுவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


 பொதுக்காலத்தின் 22 ஆம் வெள்ளி 
I:  1 கொரி:  4: 1-5
II: திபா 37: 3-4. 5-6. 27-28. 39-40
III:லூக்:  5: 33-39

மனிதர்களிய நாம்  பெரும்பாலும் தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்து மதிப்பிடுகிறோமோ இல்லையோ,
அடுத்திருப்பவருக்கு மதிப்பெண் வழங்க எப்போதும் தயார் நிலையில் இருக்கிறோம். ஆனால் மற்றவருக்கு தீர்ப்பு வழங்கும் போது நம்முடைய மதிப்பைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது என்பதை மறந்து விடுகிறோம். ஒருவர் மற்றவரை பாராட்டினாலோ அல்லது குறைகூறினாலோ அவர் அந்த செயலின் மூலம் தன் பண்புநலன்களையே பிரதிபலிக்கிறார் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆம்  "நீ சரி, நீ தவறு " என்று நம்முடைய ஆள்காட்டி விரல் பிறரை நோக்கி நீளும் போதெல்லாம் மற்ற நான்கு விரல்களும் நம்மையல்லவா நோக்கி இருக்கின்றன!
மற்ற்வர்களை தீர்ப்பிடும் குணம் ஒருபுறமிருக்க ,அவர்களிடமிருந்து நன்மதிப்பு பெற வேண்டும் என்ற ஆவலும் நம்மில் அதிகம். பலமுறை பிறர் காணவேண்டும் பிறர் நம்மை பாராட்ட வேண்டும்  என்ற ஆசையின் அடிப்படையிலேயே நம் செயல்கள் அமைகின்றன. எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துவிட்டால் சோர்ந்து விடுகிறோம். வாழ்க்கை ஒரு சுழற்சி. நாம் அளித்த தீர்ப்புகள் நம்மை வந்தடைந்தேதீரும். எனவே தான் நம் ஆண்டவர் "தீர்ப்பிடாதே நீ தீர்ப்பிடப்படுவாய்" என்று போதித்தார்.

இன்றைய முதல் வாசகம் புனித பவுல் தன்னுடைய நற்செய்திப்பணியின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து பணிசெய்பவராக இருக்கிறார் என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கடவுளிடமிருந்து மட்டுமே நன்மதிப்பையும் பாராட்டையும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் உடையவராய் அவர் இருந்தார். அதனால் தான் எனக்கு எதிராக யார் தீர்ப்பளித்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன் என தைரியமாகக் கூறுகிறார். அவரும் அவரைத் தீர்பிடவில்லை.மாறாக கடவுள் மட்டுமே தன்னைத் தீர்ப்பிட முழுத்தகுதியும் உரிமையும் உடையவர் என்பதில் உறுதியாய் இருந்தார்.

நம்முடைய மனநிலையை இன்று ஆய்வு செய்வோம். பிறர் பாராட்டைப்பெற விரும்பி பல்வேறு காரியங்களை செய்யும் நமக்கு நம்மைப் படைத்த கடவுளின் கண்கள் நம்மை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. நமது நற்செயல்களைப் பாராட்ட காத்துக்கொண்டிருக்கின்றன என்ற உள்ளுணர்வு 
 இருக்கின்றதா?

இன்றைய நற்செய்தி வாசகமும் இதை ஒட்டிய சிந்தனையைத்தான் நமக்கு அளிக்கிறது. பிறர் பாராட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நல்லவராய் வாழவது போல காண்பிக்க நமக்குப் பொறுத்தமில்லாத அல்லது நம்மிடமில்லாத பண்புகள் நம்மிடம் உள்ளது போலக் காட்டிக்கொள்வது பழைய ஆடையில் புதிய துணியால் ஒட்டு போடுவதற்கு சமம் என்கிறார் நம் ஆண்டவர் இயேசு.இயேசு வாழ்ந்த காலத்தில் யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை. யாருடைய தீர்ப்பையும் சட்டை செய்யவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றது மட்டுமே. எனவே தான் "என் அன்பார்ந்த மகன் இவரே" என்று தந்தையும் பாராட்டினார்.

இயேசுவை முழுமையாக பின்பற்றி கடவுளுக்கும் மனிதருக்கும் முன் தூய்மையான உள்நோக்கத்தோடு வாழ்ந்த எல்லாருமே பிறரால் வசை கூறப்பட்டார்கள். தீர்பிடப்பட்டார்கள். ஆனால் அவர்களுடைய. உண்மையான உள்நோக்கத்தை அறிந்த கடவுள் அவர்களை உயர்த்தினார். திருத்தூதர்கள், மறைசாட்சிகள்,புனிதர்கள் அனைவருடைய வாழ்க்கை வரலாறுகளும் இதையே உறுதிசெய்கின்றன.இயேசுவை பெருந்தீனீக்காரன் என்று சொன்ன அதே நாவுகள் அவருடைய சீடர்களையும் உண்கிறார்கள் குடிக்கிறார்கள் என்று வசைபாடியதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். 

எடுத்துக்காட்டாக நம் கண்முன் வாழ்ந்த அன்னை தெரசா, அவர் பணிவாழ்வின் தொடக்கத்தில் எல்லாராலும் பாராட்டப்படவில்லை. குறை கூறப்பட்டார். தீர்ப்பிடப்பட்டார். அவருடைய பணியையின் உண்மையான நோக்கத்தை அறியாதவர்கள் அவர் மதம் மாற்றுகிறார் என்று பொய்குற்றம் சாட்டினார்கள். ஏன் உதவி கேட்க ஏந்திய கைகளில் காரி உமிழ்ந்தார்கள். அவை எதுவும் அவரை அசைக்கவில்லை. இறுதியில் அவருடைய உள்நோக்கத்தை கண்ட இறைவன் அதை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கினார். மனிதர் மட்டுமா பாராட்டினர். கடவுளும் பாராட்டி அவரை புனித நிலைக்கு உயர்த்திவிட்டார்.

எனவே நாமும் பிறர் பாராட்ட வேண்டும் பிறர் தவறாக தீர்ப்பிடக்கூடாது என்ற மனநிலையையோடு வாழும் வாழ்வை மாற்றுவோம். நம் உள்நோக்கங்கள் கடவுளுக்கு மறைவாயில்லை என்பதை உணர்வோம். இயல்பாக வாழ்வோம். பிறரையும் தீர்ப்பிடாதிருப்போம். கடவுளின் பாராட்டைப்பெறுவோம்.அதற்கான இறையருள் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
உள்ளத்தின் நோக்கத்தை ஆராய்ந்து அறியும் இறைவா!
உலகினரின் பாராட்டைப் பெறவும் அவர்களின் குறைப்பேச்சுக்களை பெறாதிருக்கவுமே நாங்கள் பல காரியங்களை செய்கிறோம்.எங்கள் உண்மையான இயல்பை மறைத்து, பொய்யாக வாழ்கிறோம். எங்களை மன்னியும். உம்முடைய கண்கள் எப்போதும் எங்களைக் காண்கின்றன என்ற உணர்வை எங்களுக்குத் தாரும். அதன்படி வாழ்ந்து உமது பாராட்டை பெறுமளவிற்கு நாங்கள் நன்மையைச் செய்ய தேவையான அருள்வரங்களை எம்மீது பொழிந்தருளும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 15 =