Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவார்த்தையை வாழ்வாக்கி பேறுபெற்றவராவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலம், வாரம் 27 சனி
I: கலா: 3: 22-29
II: திபா 105: 2-3. 4-5. 6-7
III: லூக்: 11: 27-28
பேறுபெற்றோர் என்பதன் உண்மையான பொருள் நம்மில் பலருக்கு புரிவதில்லை. நாம் விரும்பிய அனைத்தும் நிகழ்ந்தேறியது என்றால் நமக்குத் தேவையான அனைத்தும் கிடைத்ததென்றால் அல்லது நாம் துன்பமின்றி மகிழ்வோடும் அமைதியோடும் வாழ்கிறோமென்றால் அது பேறுபெற்ற நிலை என நம்மிலே பலர் எண்ணிக்கொள்கிறோம். இன்னும் சிலர் தன் வசதி ,பதவி ,தன் நாடு ,இனம் ,மதம் போன்றவற்றில் பிறந்தது தனக்கு பேறுபெற்ற நிலை என மார்தட்டுவர். மற்றும் சிலர் தன் பெற்றோர் ,குடும்பம் ஆகியோர் கடவுள் தந்த ஆசீர் அல்லது பேறு என எண்ணுவதும் உண்டு. இது ஒரு பார்வையில் நமக்கு சரியாகத் தோன்றலாம்.
அதேபோல் ஏழ்மை, நோய், துன்பம், ஏமாற்றம் போன்றவற்றை வாழ்விலே அடிக்கடி கண்டு துவண்டவர்கள் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் சாபமாகக் கருதுவர். அவர்களை இவ்வுலகமே ராசி இல்லாதவர், கடவுளின் சாபத்தை பெற்றவர் என்றெல்லாம் கூறுவது உண்டு.
நம் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றிற்கும் காரணமானவர் கடவுள்தான் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. எல்லா பேறுகளும் கொடைகளும் அவர் தருவதுதான். ஆயினும் அதைப் பெறுவதற்கு நாம் உழைக்க வேண்டும். நம்மை நாமே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை பல வேளைகளில் நாம் மறந்து விடுகிறோம். இன்றைய நற்செய்தியில் பேறுபெற்ற நிலை நாம் அடைய சரியான வழியை நம் ஆண்டவர் இயேசு கற்பிக்கிறார். "இறைவார்த்தையை வாழ்வாக்குவதே "அவ்வழி.இயேசுவின் செயல்களைக் கண்டு வியந்து
அவரைப் பெற்றெடுத்த தாயை பேறுடையோள் எனப் போற்றும் பெண்ணுக்கு இறைவார்த்தையை வாழ்வாக்குவோர் அதிகம் பேறுபெற்றோர் என்ற பதிலைத் தருகிறார். இப்பதிலால் அவருடைய தாயை இன்னும் அதிகமாக இயேசு போற்றியுள்ளார் எனச் சொன்னால் அது மிகையாகாது.
லூக்கா 1 ஆம் அதிகாரத்தில் மரியாவின் புகழ்ச்சிப் பாடலில் "இதோ எல்லாத் தலைமுறையும் எனைப் பேறுடையாள் எனப் போற்றுமே "என மரியா கணித்திருந்தார். அதற்கு காரணம் இறைவனின் வார்த்தையை ஏற்று இதோ அவரின் அடிமை என பணிந்தது தான்.
நாமும் பேறுபெற்றவராகலாம் இறைவார்த்தையை வாழ்வாக்கினால். இறைவார்த்தை நம்முள் சென்று கடவுளோடு இணையவும் அதன்மூலம் பிறரை அன்பு செய்யவும் மன்னிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளவும் தூண்டுகிறது. இவற்றை நாம் செய்ய முயன்றாலே போதும் நிச்சயமாக எல்லாத் தலைமுறையும் நம்மையும் பேறுபெற்றவர் எனப் போற்றும். சிந்திப்போம். இறைவார்த்தையை வாழ்வாக்க விழைவோம்.
இறைவேண்டல்
வார்த்தையால் உலகை இயக்குபவரே! உம் வார்த்தையால் நாங்கள் இயக்கப்பட்டு பேறுபெற்றோராக வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment