நம் தேடல் Vs இறை விருப்பம் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம், வாரம் 27 வியாழன் 
மு.வா: கலா: 3: 1-5
ப.பா: லூக் 1: 69-70. 71-73. 74-75
ந.வா: லூக்:  11: 5-13

 நம் தேடல் Vs இறை விருப்பம்

தந்தையிடம் மகன் நீண்ட நாட்களாக அலைபேசி ஒன்று வாங்கித்தருமாறு கேட்டுக்கொண்டே இருந்தான். தன்னுடன் படிக்கும் நண்பர்கள் அலைபேசி வைத்திருப்பதாகவும் தன்னிடம் இல்லை என்பதால் தன்னை ஏளனப்படுத்துவதாகவும் கூறினான். எவ்வளவோ அழுதாலும், சண்டையிட்டாலும் தந்தையின் மனம் கொஞ்சம் கூட அசையவில்லை. இதனால் தந்தையும் மகனும் சரியாக பேசிக்கொள்ளவில்லை. தாய் வழியாக பரிந்துரை செய்த போதும் தோற்றுப்போனான். நாட்கள் கழிந்தன. மகனுக்கு வேலைகிடைத்து வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அவனும் பரபரப்பாக தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான். அப்போது தந்தை தன் மகனை அழைத்து அவன் கையில் விலை உயர்ந்த ஒரு  அலை பேசியைக் கொடுத்தார். இதைக்கண்ட மகன் இவ்வளவு விலையுயர்ந்த அலைபபேசியா என்று எண்ணி வாயடைத்து நின்றான். அப்போது தந்தை மகனிடம் "நீ கேட்காமலேயே உனது தேவையை நானறிவேன் மகனே.உனக்கு எப்பொழுது எதைச் செய்ய வேண்டுமென எனக்குத் தெரியாதா? நீ எப்பொழுது எதைக் கேட்டாலும் அதனுடைய நோக்கத்தைச் சரிபார்த்துக்கொள்" என்று கூறினார்.

"கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்." என்ற நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். நிச்சயமாக நாம் நம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் கேட்கும் அனைத்தும் சற்று தாமாதமானாலும் கூட முழுமையாகப் பெற்றுக்கொள்வோம் என்பதில் ஐயமில்லை. கடவுள் நம் தேவைகளை நிறைவேற்றுவார் என்பது திண்ணம். ஆனால் இன்று நாம் சற்று வித்தியாசமாக சிந்தித்துப் பார்ப்போம்? நாம் எதைக் கேட்கிறோம்? எம்மனநிலையில் தேடுகிறோம்? எந்நோக்கத்திற்காக தொடர்ந்து தட்டுகிறோம்? அது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்க்கும் நன்மை தருகிறதா? கடவுளுக்கு உகந்ததாக இருக்கிறதா?

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் மனிதன், 'தன் நண்பர் பசியாய் போய்விடக்கூடாது,  தன் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கை வீணாகி விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காகத் தொடர்ந்து முயன்று கேட்டதாலேயே தனக்கு வேண்டிய அப்பத்தை பெற்றுக்கொண்டான்.' இன்று நாம் நாடும் காரியங்களில் இத்தகைய பயனளிக்கும் நோக்கம் இருக்கிறதா என ஆராயவே இவ்வாசகம் வழியாக நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.திருச்சபை வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து உழைத்தவர்கள்,நீதீயின் கதவுகளைத் தட்டியவர்கள், நல்லவற்றை தேடியவர்கள் அனைவருமே அதைப் பெற்றுக்கொண்டனர். மகாத்மா காந்தியடிகள்,நெல்சன் மண்டேலா, அன்னைத் தெரசா ஆகியோர் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

பிள்ளைகள் அப்பமும், மீனும் கேட்கும் போது தேளையும், பாம்பையும் தரும் பெற்றோர்கள் எங்குமில்லை. அப்படியிருக்க நமக்கும் பிறருக்கும் நன்மைதரும் காரியங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டு நாம் உழைக்கும் போது கடவுள் நிச்சயம் அதைத் தருவார் என்பதை நாம் உணர வேண்டும். தாமதமானாலும் நம் நம்பிக்கை வீண்போகாது. உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது சாலமோன் மக்களை வழிநடத்த ஞானம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்பதை நாம் அரசர்கள் நூலில் வாசிக்கிறோம். ஞானம் தூய ஆவியாரின் உயரிய கொடை. 

இன்றைய முதல் வாசகத்தில் 'கடவுளே தூய ஆவியை அருள்கிறார்' என்பதைத் தெளிவு படுத்துகிறார் புனித பவுல். நாமும் இறைவனிடம் நம்பிக்கையுடன் தூய ஆவியாரைக் கேட்போம். அவருடைய வழிநடத்துதலால் நமக்கும் பிறருக்கும் பயனளிக்கும் இறைவனுக்குகந்தக் காரியங்களை நாடுவோம். 'இறையாட்சிக்கு உட்பட்டவற்றைத் தேடுங்கள். மற்றவை அனைத்தும் உங்களுக்கு சேர்த்து அளிக்கப்படும்' என இயேசு கூறுகிறார். அவருடைய வார்த்தைகளை நம்பும் நாம் இறைவனிடம் நம்பிக்கையோடு நல்லனவற்றைக் கேட்டு, அவற்றை நம்பிக்கையோடு தேடி, விடாமுயற்சியோடும் அவர் இதயக்கதவுகளை தட்டி, நமக்கான அருளையும், ஆசீரையும் பெற்றுக்கொள்வோம்.
 இறைவேண்டல்
நாங்கள் கேட்கும் முன்னரே எம் தேவைகளை அறிந்த தந்தையே! எமக்கு உமது தூய ஆவியாரைத் தந்து நன்மை பயக்கின்றதும், உம் திருவுளத்திற்கு விருப்பமானதுமான காரியங்களை நாடித் தேடி அதை  நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் பெற்றுக்கொள்ளும் வரம் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 13 =