கடவுள் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்த தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 21 ஆம் சனி 
I: 1 கொரி:  1: 26-31
II:  திபா 33: 12-13. 18-19. 20-21
III:மத்: 25: 14-30

 சிறுவயதிலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் குருவானவராக செல்வேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிந்தவுடன் எதார்த்தமாக பங்கு ஆலயத்தின் நடைபெற்ற நவநாள் திருப்பலிக்கு சென்றேன். அந்த நவநாள் திருப்பலி முடிந்த பிறகு தான் என்னுடைய பங்கு இணைப்பங்கு பணியாளராக பணி செய்த அருள்பணியாளர் இறையழைத்தலை பற்றி  எனக்கு எடுத்து கூறி இறையழைத்தல் முகாமிற்கு அனுப்பி வைத்தார். அன்று நான் உணர்ந்த இந்த வாய்ப்பு இன்று என்னை கொடுத்து குருத்துவ நிலைக்கு உயர்த்தி உள்ளது. குருத்துவம் என்பது இறைவனின் மாபெரும் கொடை என்று சொல்வேன். இந்த மாபெரும் கொடையை கடவுள் எனக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். எனக்கு இறையழைத்தல் உண்டு என்று கடவுள் அந்த அருள்பணியாளர் வழியாக வெளிப்படுத்தினார். கடவுள் கொடுத்த இந்த வாய்ப்பை அன்று முழுமையாக பயன்படுத்தினேன். இன்று இயேசுவின் பிரதிநிதியாக குருத்துவ வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 

நம்முடைய வாழ்க்கையிலும் கடவுள் பல வாய்ப்புகளை ஒவ்வொரு நிலையிலும் கொடுத்து வருகிறார். அதை முழுமையாக பயன்படுத்தும் பொழுது வாழ்வின் வெற்றி கனியை சுவைக்க முடியும். இந்த மண்ணுலக வாழ்வு கடவுள் கொடுத்த உன்னதமான கொடை.  கிடக்கின்ற வாய்ப்புகளை நேரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் பயணிக்கிற பொழுது, வாழ்வில் சாதனைகள் பல புரிய முடியும். 

கடவுள் தாவீதை அழைத்த பொழுது ஒரு சிறு பையனாக இருந்தார். ஆனால் இறைவன் பெயரால் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினார். எனவே இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது அரசராக உயர்த்தப்பட்டார். அன்னை மரியாவும் இளம்பெண்ணாக ஆண்டவரின் அழைப்பை ஏற்று இயேசுவின் தாயாக மாறிட தன்னையே முழுவதுமாக கையளித்து மீட்பின் தாயாக மாற வாய்ப்பினை பயன்படுத்தினார். இறுதியிலே கடவுள் அவரின் உடலையும் ஆன்மாவையும் விண்ணகத்திற்கு எடுத்துச் சென்று அவரை விண்ணக மண்ணக அரசியாக உயர்த்தினார். சீடர்களும் தங்களுக்கு கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தினார்கள். வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நற்செய்தியை தொடர்ந்து எல்லா மக்களுக்கும் அறிவித்தார்கள். இறுதியில் ஆண்டவர் இயேசுவின் சாட்சியமுள்ள திருத்தூதர்களாக உயர்த்தப்பட்டார்கள்.

இன்றைய நற்செய்தியில் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தாலந்து உவமையைக் கூறியுள்ளார். கிடைக்கும் வாய்ப்பை‌ப்‌ பயன்படுத்துபவர்கள் வாழ்வில் சாதனைகளை அடைகின்றனர். உழைப்பிற்கேற்ற கைமாற்றை பெறுகின்றனர். உவமையில் கூட ஐந்து காலத்தை பெற்றவர்‌ மேலும் ஐந்து தாலத்தை ஈட்டினார். எனவே தலைவரின் பாராட்டுதலைப் பெற்றார். இரண்டு காலத்தைப் பெற்றவர் மேலும் இரண்டு தாலந்தை ஈட்டினார். எனவே தலைவரின் பாராட்டுதலைப் பெற்றார். ஒரு தாலந்தைப் பெற்றவர் உழைக்காமல் தாலந்தை மண்ணில் புதைத்து  சோம்பேறியாக வாழ்ந்து பெற்றதை அப்படியே கொடுத்தார். எனவே தலைவரால் அவர் தண்டிக்கப்பட்டார். 

இறைவனின் இறையாட்சியிலும் அப்படி தான். கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறையாட்சியில் செல்வத்தை சேர்த்து வைக்கும் பொழுது நிலைவாழ்வைப் பெற முடியும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறையாட்சி மதிப்பீட்டிற்கு உகந்த வாழ்க்கை வாழவில்லையென்றால் நிலைவாழ்வை இழந்துவிட கூடும். எனவே கடவுள் நம் வாழ்வில் கொடுத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி நிலையான வாழ்வை உரிமைச் சொந்தமாக்கிக் கொள்ள தேவையான அருளை வேண்டுவோம். 

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் பெறுகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்ந்து நிலைவாழ்வின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

14 + 0 =