முன்மதியும் தயார்நிலையும்..... | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 21 ஆம் வெள்ளி 
I: 1 கொரி:  1: 17-25
II:  திபா 33: 1-2. 4-5. 10-11
III:மத்: 25: 1-13

ஒரு கணித ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திவிட்டு ஒவ்வொரு முறையும் "நாளை  வகுப்புத்தேர்வு வைப்பேன். ஒழுங்காக படித்து வாருங்கள்" என்று கூறுவார். அப்படி கூறினால் மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்று அவர் எண்ணினார். ஆனால் பாடங்களை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்தினால் அவரால் வகுப்புத்தேர்வு வைக்க இயலவில்லை. இதனால் மாணவர்கள் ஆசிரியர் தேர்வு வைக்க மாட்டார் என மிகுந்த மெத்தனமடைந்தனர். நாளடைவில் வீட்டுப்பாடங்களைக்கூட சரியாக செய்துவரத் தவறினர். அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கையில்தான், ஒரு நாள் அந்த கணித ஆசிரியர் தன்னுடைய பாடவேளை அல்லாத நேரத்தில் வகுப்பறைக்குள் வந்தார். மாணவர்களோ ஆசிரியர் வேறு காரியமாக வந்திருப்பார் என நினைத்துக்கொண்டு எழுந்து வணக்கம் கூறினர். பதிலுக்கு வணக்கம் சொன்ன ஆசிரியை மாணவர்களை நோக்கி "அனைவரும் வகுப்புத்தேர்வு ஏட்டை எடுத்துக்கொண்டு இடைவெளி விட்டு அமருங்கள். இப்போது தேர்வு" என்று கூறினார். இதைச் சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அதிர்ந்து போனார்கள். தாங்கள் எப்போதும் தயாராகவும்,
முன்மதியுடனும் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.தங்கள் மெத்தனப்போக்கை எண்ணி வருந்தினார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கின்ற பத்து கன்னியர் உவமை வழியாக இயேசு நமக்கு கூறும் செய்தி இதுதான்.நமது வீட்டில் ஒரு சுபகாரியம் நடக்கிறது என்றால் பல நாட்களுக்கு முன்பே அதற்கான திட்டங்களைத் தீட்டி, முன் மதியோடு செயல்பட்டு, எதுவும் குறைவுபடாத வண்ணம் பார்த்து பார்த்து அனைத்தையும் செய்து தயார்நிலையில் இருப்போம். தேர்வில் முதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர், தொடக்கத்திலிருந்தே நன்கு படித்து ஆயத்தமாயிருப்பார்.  இதைப்போல பல உதாரணங்களைக்கூறலாம். வாழ்வில் வளர்ச்சி பெற விரும்பும் எவரும் முன்மதியோடும், எல்லா நேரத்திலும் சவால்களை சந்திக்க தயாராகவும் இருக்க வேண்டும். இவ்வுலக காரியங்களில் இவ்வளவு கவனமாக இருக்கும் நாம், நம் ஆன்மீக காரியங்களில் முன்மதியோடும், ஆயத்தமாகவும் இருக்கிறோமா என்பதை சிந்தித்துப்பார்க்க, இன்று இயேசு நம்மை அழைக்கிறார். 

உலக காரிங்களில் முன்மதியுடைய கன்னியரை பிரதிபலிக்கும் நாம், பல சமயங்களில் ஆன்மீகத்தேடலில் முன்மதியிழந்த கன்னியரை பிரதிபலிக்கிறோம். சவால்களை துணிந்து சந்தித்து நம் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற எப்போதும் தயாராயிருக்கும் நாம், ஏனோ அன்றாட வாழ்வில் பல்வேறு அனுபவங்கள் வழியாக வரும் இறைவனை சந்தித்து நம் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்ற தயார் நிலையில் இருப்பதில்லை. 

நம்முடைய ஜெப வாழ்வு பல நேரங்களில் அரைகுறைதான். நற்செயல்கள் புரிதல், பிறருக்கு உதவுதல்,தீமைகளை ஒதுக்குதல், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தல் போன்ற உண்மையான ஆன்மீக செயல்பாடுகளில் நமது நாட்டம் மிகக்குறைவு என்றே கூறலாம். இவ்வாறாக இறைவனைத்தவிர மற்ற எல்லாவற்றிறற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அருகில் இருக்கும் போது அவரைக்  காண மறுக்கிறோம். இறுதியில் "உங்களை எனக்குத் தெரியாது" என்று அவர் கூறுமளவிற்கு நம் வாழ்வை இழந்து விடுகிறோம்.

இன்றைய முதல் வாசகமும் ,இதை ஒட்டிய கருத்தையே நமக்கு கூறுகிறது. இன்றைய அறிவியல் உலகில் உடலுக்கும் மனதிற்கும் இனிமை தர பல வித கண்டுபிடிப்புகள் இருக்கின்ற நிலையில், கடவுளும், கடவுள் சார்ந்த செயல்பாடுகளும் பலருக்கு முட்டாள் தனமாகத்தான் தெரிகிறது. ஆனால் இவ்வுலகம் மடமை என்று கருதுவது கடவுளின் பார்வையில் ஞானமாகிறது. கடவுளின் மடமை இவ்வுலக ஞானத்தை விட சிறந்தது. சிலுவையே அதற்கு சிறந்த சாட்சி. 

எனவே உலக ஞானத்தை விடுத்து கடவுளின் ஞானத்தைப் பெற, ஆன்மீக காரியங்களில் முன்மதியோடு செயல்பட்டு, கடவுளை சந்திக்க எப்போதும் தயார்நிலையில் இருக்கும் வரம் வேண்டி ஜெபிப்போம்.

 இறைவேண்டல் 
அனுதின அனுபவங்களில் எம்மை சந்திக்க ஆவலாய் இருக்கும் இறைவா, இவ்வுலக காரியங்களில் முன்மதியோடும் ஆயத்தமாகவும் செயல்படும் நாங்கள், அதே முன்மதியோடும் ஆயத்தத்தோடும் எம் ஆன்ம காரியங்களை நிறைவேற்றி உம்மை  அன்றாடம் சந்திக்கும் வரம் தாரும். இவ்வுலக ஞானத்தை விட உம்முடைய தெய்வீக ஞானத்தை நாடித்தேட அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 0 =