வாழ்க்கைக்கு உரமூட்டுவது உடன்படிக்கை! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 19ஆம் வெள்ளி 
ஆண்டவரின் தோற்ற மாற்ற விழா
மு.வா: எசேக்கி 16: 1-15, 60, 63
ப.பா:  எசா 12: 2-3. 4bcd. 5-6 
ந.வா: மத்19: 3-12

 வாழ்க்கைக்கு உரமூட்டுவது உடன்டிக்கை! 

அன்புக்குரியவர்களே மனித வாழ்க்கை என்பது தனித்து வாழ்வது அல்ல. ஒருவர் மற்றவரோடு இணைந்து, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது.  ஒரே குடும்பமோ ,நட்பு வட்டாரமோ,குழுமமோ, எதுவானாலும் அங்கே வாழப்படக்கூடிய சார்பு வாழ்க்கைக்கு ஒருவித ஒப்பந்தம் அல்லது புரிதல் தேவைப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அல்லது விவிலிய அடிப்படையில் நாம் சொல்கின்ற உடன்படிக்கை என்பது நம்மிடையே புரிதலையும்  உறவு ஒன்றிப்பையும் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையும் அன்பையும் மன்னிப்பையும் நாளுக்கு நாள் வளர்க்கிறது. வளர்த்துக்கொண்டே இருக்கிறது. ஆனால்  உடன்படிக்கையை மீறினால் உறவும் நட்பும் முற்றிலுமாக உடைக்கப்பட்டு வேதனையும் வெறுப்பும் மட்டுமே மிஞ்சுகிறது.

இன்றைய வாசகங்கள் இரண்டும் உடன்படிக்கையின் முக்கியத்துவத்தையும் அதனை உடைப்பது பெரும் பாவம் என்ற கருத்தையும் மிக மிக ஆழமாக உணர்த்தக்கூடியதாக உள்ளது எனலாம்.

முதல் வாசகம் பாவத்தில் உழன்று கிடந்த இஸ்ரயேல் மக்களோடு கடவுள் உடன்படிக்கை செய்ததையும் அம்மக்களை தன் சொந்த மக்களாக்கி அவர்களுக்காக கடவுள் பல அரும் பெரும் செயல்களை செய்தார் என்பதையும் அதை இஸ்ரயேல் மக்கள் மீறினர் என்பதையும் மிக ஆழமாக எடுத்துக்கூறுகின்றது. மேலும் இவ்வாசகம் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனக்குச் சொந்தமாக தேர்ந்தெடுத்து உடன்டிக்கை செய்து அனைத்து அருளையும் ஆசிரையும் பொழிகிறார் என்பதை உணர அழைப்பு விடுப்பதோடு நமக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உடன்படிக்கை உறவில் நாம் ஆழமாக வளர்வதே நம் ஆன்மீக வாழ்க்கைக்கு உரமூட்டும் என்பதையும்  நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஒரு கணவன் மனைவிக்கு இடையுள்ள உடன்படிக்கை வாழ்வின் தூய்மையையும் நம்பகத்தன்மையும் தெளிவாக விளக்குகிறார். இன்றைய காலத்தில் எத்தனை விவாகரத்துகளை நாம் கேள்விப்படுகிறோம். இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் பிரமிணிக்கமாக இருப்பேன் என்று வாக்களித்த தம்பதிகள் சின்னச் சின்ன காரணங்களுக்காகவும்  தேவையற்ற இழிவான உலக இச்சைகளுக்காகவும் உடன்படிக்கையை உடைத்து நீதிமன்றத்தை நாடும் அவல நிலையையும் நாம் காண்கிறோம் அல்லவா. அதுவும் கிறிஸ்தவ தம்பதிகள் அதிகமாக விவகரத்து பெறுவதை நாம் காணமுடிகிறது. இதற்குக் காரணம் ஆழமில்லாத அல்லது உண்மையில்லாத உடன்படிக்கை வாழ்வே.

ஆம் அன்புக்குரியவர்களே உடன்படிக்கையை நாம் மதித்து அதை உணர்ந்து வாழும் போது அங்கே பாவமும் பிரிவுகளும் இருக்காது. மாறாக வாழ்க்கையில் உறவுகள் உரமூட்டப்படும். எனவே இன்று இறைவனோடு நாம் கொண்டுள்ள உடன்டிக்கையை உறுதிப்படுத்தி நம் ஆன்ம வாழ்வுக்கு உரமூட்டுவோம். உடன்படிக்கை வாழ்வில் நிலைக்கத் தவறும் தம்பதியருக்காகவும் நாம் செபிப்போம்.

 இறைவேண்டல் 
உடன்படிக்கையின் இறைவா உம்மோடு வாழ்வில் நிலைத்திருந்து எங்கள்  ஆன்ம வாழ்விற்கு உரமூட்ட வரமருளும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்ட

Add new comment

2 + 11 =