Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறந்த புலியின் வயிற்றில் துண்டு பிளேடு கண்டுபிடிப்பு
நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த ஆண் புலியினை உடற் கூராய்வு செய்த பொழுது அதன் வயிற்றில் ஒரு துண்டு பிளேடு இருந்தது தெரிய வந்துள்ளது. பார்சன் பள்ளத்தாக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதி ஆகும். ஊட்டிக்கு தேவையான தண்ணீர் பெரும்பான்மையாக பார்சன் பள்ளத்தாக்கின் அணைக்கட்டில் இருந்துதான் எடுக்கப்படுகின்றது. பார்சன் பள்ளத்தாக்கின் மறுபுறம் கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு உள்ளது. மனித இடையூறுகள் குறைவான பகுதி என்பதால் பல வனவிலங்குகள் இங்கே வாழ்கின்றன. குறிப்பாக வரையாடுகள், கடமான்கள் போன்ற உயிரினங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. இரை விலங்குகள் இருப்பதால் புலிகளின் வாழ்விடமாகவும் இது உள்ளது.
இந்த பார்சன் பள்ளத்தாக்கில் சுமார் இரண்டரை வயதுள்ள ஆண்புலி ஒன்று இறந்து கிடப்பது வனத்துறையினர் கவனத்திற்கு வந்ததை அடுத்து அவர்கள் அங்கே விரைந்தனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அப்பகுதியின் உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், "பார்சன் பள்ளத்தாக்கில் புலி இறந்துகிடப்பது தெரிய வந்தவுடன் வனத்துறை சார்பில் இறப்பிற்கான காரணங்கள் குறித்து கள ஆய்வுகளை தொடங்கிவிட்டோம். விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆராய்ந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பிரேத பரிசோதனை மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் "இறப்பதற்கு முன்பு புலி தன் வயிற்றில் தொந்தரவாக இருந்த ஏதோ ஒன்றை வெளியே தள்ள முயற்சி செய்து தோற்றுள்ளது. பிரேதப் பரிசோதனையின் போது புலியின் வயிற்றில் இருந்து ஒரு பிளேடு துண்டு எடுக்கப்பட்டது . இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு , ஒரு கடமானை சாப்பிட்டுள்ளது அந்தப் புலி. ஒன்று புலி நேரடியாக பிளேடினை விழுங்கி இருக்கலாம், அல்லது கடமான் பிளேடினை விழுங்கி இருந்து அதன் வாயிலாகவும் புலியின் வயிற்றுக்கு பிளேடு துண்டு சென்றிருக்கலாம்" என்றும் குறிப்பிட்டார்.
பார்சன் பள்ளத்தாக்கில் இருந்து சில கி.மீ. தொலைவில் தீட்டுக்கல் என்ற இடத்தில் மிகப் பெரிய குப்பைக்கிடங்கு உள்ளது. குப்பைக்கிடங்கினை சுற்றிலும் முறையான வேலி அமைக்கப்படாமல் உள்ளது. வன விலங்குகளின் வாழ்விடத்திற்கு அருகில் உள்ள குப்பைக்கிடங்கினை முறையாக மேலாண்மை செய்யாவிடில் பல வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சூழல் ஆர்வலர்கள் பலரும் கூறி வந்த நிலையில் இந்த புலியின் மரணம் நிகழ்ந்துள்ளது.
(நன்றி : பிபிசி நியூஸ்)
Add new comment