100 சதவீதம் உங்களைக் கொடுத்தால்? திருமதி அமுதா ஐ.ஏ.எஸ்


Ms. Amudha IAS

பெண்களே நீங்கள் உங்களை நம்பினால், கடினப்பட்டு உழைத்தால், நீங்கள் மாபெரும் செயல்களை நிகழ்த்தலாம். உங்கள் முன்மாதிரியை ஞானத்துடன் தேர்ந்தெடுங்கள், அவர்களை நெருக்கமாக பின்பற்றுங்கள், அவர்களில் நீங்கள் விரும்பும் குணநலன்களை உள்ளீர்த்துக்கொள்ளுங்கள். இத்துடன் நீங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக ஒளி வீசுவீர்கள். இந்த வார்த்தைக்கும், வாழ்வுக்கும் சொந்தமானவர்தான் திருமதி அமுதா ஐ.ஏ.எஸ். அவர்கள்.

குடும்ப வாழ்க்கைப் பின்னணி

திருமதி அமுதா ஐ.ஏ.எஸ். அவர்கள் மதுரையில் 1970 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை திரு. பெரியசாமி அவர்கள். இவருடைய பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். இவருடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும் ஒரு தங்கையும். இவருடைய ஐஏஎஸ் வேட்கையைக் கண்டு இவருடைய அண்ணணும் 1992 ஆம் ஆண்டு சிவில் தேர்வு எழுதி வெற்றிபெற்றார். தற்பொழுது ஐ.எஃப்.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். 

இவருடைய கணவர் ஷம்பு கலோலிகர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றுக் கலெக்டர் ஆனார். தற்போது தமிழகச் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியத் தலைவராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 
இவருடைய தாத்தா ஒரு விடுதலைப் போராட்ட தியாகியானதால், குடும்பத்தில் நாட்டுப்பற்று சிறுவயதிலிருந்தே விதைக்கப்பட்டது. 

இலக்கு தெளிவும் தொடர் பயணமும்

அவருடைய பாட்டிதான் இவருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். தன்னுடைய பாட்டியுடன் அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். முதன் முதலில் தன்னுடைய பாட்டியுடன்தான் தாத்தாவின் ஓய்வூதியம் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். மாவட்ட ஆட்சியருக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பினைக் கண்டுவியந்தார்.

அவருடைய பாட்டியிடம் மாவட்ட ஆட்சியர் என்றால் யார் என்று கேட்டதற்கு அவர் பாட்டி அளித்த பதிலே அவருடைய இலக்கின் அச்சாணி: மாவட்ட ஆட்சியர் என்பவர் ஒரு அரசனுக்கு ஒப்பானவர். நாம் சமூகத்திற்கு நல்லது செய்ய விரும்பினால் ஒரு மாவட்ட ஆட்சியராக மாறவேண்டும் என்றார்.

ஒரு ஆட்சியராக மாறவேண்டும் என்று அப்பொழுதே நினைத்தார். பள்ளிப் படிப்பில் ஒரு ஆவரேச் மாணவியாகத்தான் அதுவரை இருந்தார். கபடி, கோகோ, கராத்தே போன்ற போட்டிகளில் கலந்துகொண்டார். தேசிய அளவில் கபடி விளையாட்டில் 3 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். ஒரு பெண்குழந்தை என்ற சமூக கட்டுபாட்டுக்கு அப்பாற்பட்டு ஆண்களுக்கு இணையாக அனைத்தையும் கற்றுத்தேர்ந்தார். 

தன்னுடைய 13 ஆம் வயதில் இமயமலைக்கு மலையேறும் பயிற்சிக்காக சென்றபோது, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய ஒரு குழுவினரும் அங்கே மலையேறும் பயிற்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களைச் சந்தித்து உரையாடியபோதுதான் ஐ.ஏ.எஸ். படித்து ஆட்சியராக மாறவேண்டும் என்ற அவருடைய இலக்கிற்கான பாதை தெளிவானது.  

மீண்டும் வீடு திரும்பியபோது நான் கலெக்டர் ஆக முடியுமா என்று அவருடைய பாட்டியிடம் கேட்டபோது, எதிலும் 100 சதவீதம் நம்மைக் கொடுத்து முயற்சி செய்தால் அதை நாம் அடைந்திடலாம் என்னும் உறுதியான பதிலை அவருடைய பாட்டி கொடுத்தார். இந்த உறுதியை மனதில் வைத்துதான் தன்னையே முழுவதும் ஈடுபடுத்தி ஐ.ஏ.எஸ். தேர்விற்கு தயாரித்தார். 

தனது பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இளங்கலை வேளாண்மை படிப்பிற்காக மதுரையிலுள்ள தமிழ்நாடு விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்து படித்தபோது 15 தங்கப் பதக்கங்கள் பெற்றிருக்கிறார். 

கனவினை நிஜமாக்கும் போராட்டம்

1992 ஆம் ஆண்டு ஐ.பி.ஸ். தேர்வு எழுதி வெற்றிபெற்றார். பின்னர் தன்னுடைய தந்தையின் உந்துசக்தியால் 1994 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி மாநிலத்தில் முதலிடமும், இந்தியளவில் பெண்களில் முதலிடமும் பெற்று சாதனைப் படைத்தார். 

கடலூரில் துணை ஆட்சியராகப் பணியாற்றினார். தனது இரண்டாம் ஆண்டில், அதாவது 1998 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றியபோது மணல் கடத்தும் கும்பல்களைத் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்கள் லாரியை வைத்துமோதிக் கொல்ல முயன்றபோது அவருக்கு முதுகில் அடிபட்டது.  ஆனால் அவர்களால் அவருடைய துணிச்சலை அசைத்துப் பார்க்கமுடியவில்லை.

இதனால் கட்சித் தலைவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் இவரை பணிமாற்றம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டனர். அப்பொழுது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த கலெக்டரை மாத்த முடியாது. அவங்க மூலமா பின்தங்கிய உங்கள் மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்துக்கோங்க என்றார். அப்பொழுது கலைஞர் அவர்கள் அவருக்கு வைத்த சிறப்புப் பெயர்தான் அதிரடி அமுதா.

தர்மபுரி ஆணையராக இருந்தபோது பெண்கல்வி, பெண்சிசுக்கொலை, மகளிர் சுயஉதவிக்குழு என அந்த மாவட்டத்தை உயர்த்தினார். குறிப்பாக குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கு முழு முயற்சி செய்தார். அவருடைய அலைபேசி எண்ணை அனைவருக்கும் கொடுத்தார். அனைவரும் அவரை எப்பொழுதும் தொடர்புகொள்ளலாம் என அறிவித்தார். இந்த முயற்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

2015 ஆம் ஆண்டு சென்னையை உலுக்கிய பெருவெள்ளத்தின்போது, தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். மக்களை மீட்டெடுத்தார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார். வெள்ளத்திற்கு காரணமான ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கு இவரே முழுமையாக முன்னின்று செயல்பட்டார். இதனால் பலருடைய எதிர்ப்புக்கும் பகைக்கு ஆளானார். வெள்ள நிவாரணத்திற்குப் பின்பு, எதிர்காலத்தில் இத்தகைய இடர் நிகழாமல் இருக்கச் செய்வதற்கு இவர் வகுத்த சிறப்பு செயல் வடிவத்தை அரசு நடைமுறைப்படுத்திக்கொண்டுவருகிறது.

பெண்மையை அணிசெய்த நிர்வாகச் சிறப்புகள்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், முன்னால் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்தினார்.

தமிழகத்தின் முதல் பெண் தெழிலாளர் நல ஆணையர் என்ற சிறப்பினைப் பெற்றார். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அதிகாரியாகச் செயல்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் பொருளாதாரமும் அரசியலும் படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பப்பட்டார். 

சிவில் சர்விஸ் பணிகளில் 25 ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றார். 15 துறைகளில் வேலைசெய்திருக்கிறார். ஆளுமைத் துணிவிற்காக புதிய தலைமுறையின் சக்தி விருது 2017 இவருக்கு கொடுக்கப்பட்டது. மாண்புமிகு அதிகாரிக்கான விருதினை அவள் விகடன் அவருக்குக் கொடுத்து பெருமைப்படுத்தியது. இன்னும் பல விருதுகளை மேடையில், மக்களின் மனதிலும், இளைஞர்களின் நம்பிக்கையிலும் பெற்றுக்கொண்டே இருக்கிறார். தற்போது சென்னையின் உணவு பாதுகாப்பின் முதன்மை செயலாளராகப் பணியாற்றி வருகின்றார். 

எதிர்கால தலைமுறைக்கு ஒளியாக...

ஒரு பெண்ணின் விடாமுயற்சி, ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கான ஊன்றுகோளாக இருக்கின்றது. நம் குடும்பத்தில் பெண் குழந்தைகளை எந்த நிலையில் உற்சாகப்படுத்துகின்றோம். எத்தகைய சுகந்திரத்தைக் கொடுக்கின்றோம். எத்தகைய பயிற்ச்சிக்கு அனுமதிக்கின்றோம். எத்தகையவர்களாக உருவாகவேண்டும் என்று நினைக்கின்றோம் என்பதையெல்லாம் மீண்டும் புடமிடுவோம். பெண் என்ற சக்தி அது மாபெரும் சக்தி, அதை சரியாக நாம் வளர வாழ அனுமதித்தால் இவ்வுலகும் சொர்க்கமே.

இளைஞர்களே மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் உங்களை நம்பினால், கடினப்பட்டு உழைத்தால், மாபெரும் செயல்களை நிகழ்த்தலாம். உங்கள் முன்மாதிரியை ஞானத்துடன் தேர்ந்தெடுங்கள், அவர்களை நெருக்கமாக பின்பற்றுங்கள், அவர்களில் நீங்கள் விரும்பும் குணநலன்களை உள்ளீர்த்துக்கொள்ளுங்கள். இத்துடன் நீங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக ஒளி வீசுவீர்கள்.

Add new comment

1 + 2 =