விவசாயமே வாழ்க்கையாகுமா?


ஊரடங்கு நாட்களில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் ஆகியோரை போலவே மிகவும் முக்கிய பங்கு வகித்தவர்கள் விவசாயிகளும் அவர்கள் செய்யும் விவசாயமும். அன்றாடம் உயிர் வாழ தேவையான உணவிற்கான பொருட்களை வாங்க மனிதன் அவ்வளவு ஆர்வம் காட்டிய நாட்கள் இந்த ஊரடங்கு நாட்கள். ஆனால் இந்த ஊரடங்கு முடிந்த பின்பு "இவ்வளவு உயர்ந்த இந்த தொழிலை மேற்கொள்வீர்களா?" என்று கேட்டால் 99% பேர் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும், விவசாயம் செய்ய முன்வர சற்று தயங்குவார்கள்.

ஆனால், சிறிதும் தயக்கமின்றி முன்னோர்கள் செய்த விவசாயத்தை தனது வாழ்க்கைக்கான தொழிலாய் கையிலெடுத்து சிறப்புடன் செய்து  வருகிறார், செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார். 2014 ஆம் ஆண்டு முதல் கரிம வேளாண்மை (Organic Farming) முறையில் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து வினோத் குமார் கூறுகையில், "எனது தாத்தா 60  ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்தார். ஆனால் அவரது பிள்ளைகள் யாரும் அதை தொடர்ந்து செய்ய முன் வரவில்லை. அதில் எனது அப்பாவும் விதிவிலக்கல்ல. அவர் சென்னையில் ஒரு பள்ளியில் முதல்வராக பணியாற்றினார்" என்று கூறினார். விடுமுறைநாட்களில் மட்டுமே தனது ஊருக்கு வினோத் குமார் சென்றிருக்கிறார்.

சென்னையின் பிரபலமான கல்லூரியில் மின் பொறியியல் (Electrical Engineering) படிப்பை முடித்தப் பிறகு, தொடர்ந்து  முதுநிலை வணிக நிர்வாக துறையிலும் (MBA) தேர்ச்சி பெற்றார். இதன் பிறகு, அனைவரும் எதிர்பார்ப்பது போல ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 4 முதல் 5 ஆண்டுகள் வரையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மிகவும் துவண்டு விட்ட வினோத் குமாருக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.

60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்தும் தனது தாத்தாவிற்கு  எந்த ஒரு நிலையிலும் அது சலித்து போகவில்லை. ஆனால் 4  வருடங்களே ஆனா தனக்கு ஏன் இந்த தனியார் நிறுவன வேலை சலித்துப்போனது என பல கேள்விகள் தோன்றின. இதற்கான பதிலை தேடி, தனது வேலையை விட்டுவிட்டு 1  வருடத்திற்கும் மேலாக இந்தியாவின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். விவசாயம் தொடர்பான பல செய்திகளை கேட்டறிந்தார். அதில் அவர் இந்தியாவில், ஓர் பக்கம் தொழில்முறை சார்ந்த நிறுவனங்கள் பெருகி வந்தாலும், விவசாய நிலமும், விவசாயிகளின் வாழ்க்கை முறை குறைந்துகொண்டே வருகிறது என்பதை உணர்ந்தார்.

சென்னைக்கு திரும்பிய வினோத் குமார், விவசாயத்தை முழு நேர வேலையாக செய்யப்போவதாக தன பெற்றோரிடம் கூறினார். இது தங்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், ஒப்புக்கொண்டார்கள். தன்னால் முடிந்த வரையில் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்த வினோத் குமார், விவசாயத்தை கையில் எடுத்தார். தினை, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார். ஏனெனில் இவை குறைத்த அளவு தண்ணீர் ஈர்க்கும் பயிர்களாகும். இதன் மூலம் சராசயான லாபம் வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

தனது பயிர்நிலம் மட்டும் அல்லது, கிராமத்தில் உள்ள மற்ற நிலத்திலும் கரிம வேளாண்மையை செய்து வருகிறார். மற்ற விவசாயிகளை இரசாயன உரங்களுக்கு பதிலாக கரிம உரங்களை சாகுபடி முதல் பருவத்திலும், குறைந்த அளவில்  இரசாயன உரங்களை சாகுபடி இரண்டாம் பருவத்திலும் உபயோகிக்குமாறு கூறினார். இந்த ஒரு செயல்பாடு கரிம வேளாண்மைக்கான சிறு முயற்சியாக அமைந்தது.

அவரை பொறுத்தமட்டில், அரசாங்கங்கள் , விவசாயிகளுக்காக நிறைய திட்டங்கள் கொண்டுவந்தாலும், அது பற்றிய விழிப்புணர்வு, அவர்களிடம் இல்லை. அதற்கான வழிமுறைகளை வினோத் குமார் மேற்கொண்டு வருகிறார்.

ஒருவர் எவ்வளவுதான் ஒரு செயலை எடுத்து கூறினாலும், நாம் அதனை செய்து அதற்கான பலனை அனுபவிக்காத வரை நமக்கு அதில் நம்பிக்கை வராது. அதே போல இந்த விவசாயிகளுக்கு கரிம வேளாண்மையில் நம்பிக்கையூட்ட, அவர் அவர் செய்யும் சாகுபடிக்கான செலவுகளை ஒரு புத்தகத்தில் குறித்து வைக்க சொன்னார். விதைகள் முதல் அறுவடை செய்யும் இயந்திரம் வரையில் ஆகும் செலவுகளை கணக்கிட்டு பார்க்கையில், ரசாயன உரங்களை பயன்படுத்தியபோது, வரும் லாபத்தை விட பயிருக்கு ஆகும் செலவு அதிகம் என்பதை உணர்ந்தனர்.

கரிம வேளாண்மையை பொறுத்தமட்டில், எந்த ஒரு பொருளும் அவர்கள் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. விதைகள் முதல் உரங்கள் வரை அனைத்தும் அவர்களே தயார் செய்து பயிரிடலாம். இதனால் வரும் லாபமும் அவர்களுக்கே. தனது வாழ்க்கையை மாற்றியது மட்டுமின்றி, மக்களின் வாழ்கைத்தரத்தையும் வினோத் குமார் உயர்த்தியுள்ளார். விவசாயத்தையும் காப்பாற்றியுள்ளார்.

லாவோஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றளவும் பாரம்பரிய விவசாய முறைகளை கையாள்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் மட்டுமே பயிர் நிலங்களை அழித்து அவற்றில் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் என எழுப்பிக்கொண்டிருக்கிறோம். விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லும் நாமே, அதனை தெரிந்தே அழித்துக்கொண்டிருக்கிறோம்.

இனி வரும் நாட்களில் நாம் இரசாயன தலைமுறையை வளர்க்கப்போகிறோமா? கரிம தலைமுறையை வளர்க்கப்போகிறோமா? சிந்திப்போம்!

 

 

Add new comment

1 + 10 =