விலையேறப்பெற்ற இட்லியின் கதை!


உணவு என்பது ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. ஒரு வேளை உணவிற்காக நாம் அன்றாடம் உழைக்கிறோம். எனினும் அந்த உணவை மற்றவருடன் பகிர்ந்து உண்பதில் மனமகிழ்வு உண்டு. பீட்சாக்களும் பர்கர்களும் நிறைந்த இந்த காலத்தில், ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பது என்பதை கேட்டால் நாம் கனவுலகத்தில் இருப்பது போல தோன்றும். ஆனால் இதனை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்கி கொண்டிருக்கிறார் கோவை மாவட்டத்தை சேர்ந்த கமலாத்தாள் என்ற 85 வயதைக் கடந்த பாட்டியம்மா.  

கோவை மாவட்டத்தில் வடிவேலம்பாளையம் என்ற ஊரில், தனது வீட்டிலேயே இந்த ஒரு ரூபாய் இட்லி கடையை நடத்தி வருகிறார். இதனை இவர் சுமார் 30 ஆண்டுகளாக செய்து வருகிறார். காலையில் 6 மணிக்கு தொடங்கும் இவரது வியாபாரம், மதியம் 12 வரை நடைபெறுகிறது. முதலில் 50 பைசாவிற்கு விற்கப்பட்ட இட்லிகள் கடந்த 10 வருடங்களாக 1 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. தனது பேத்தி ஆர்த்தியின் உதவியுடன் எல்லா வேலைகளையும் தானே செய்து வருகிறார். 

இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம், இட்லி செய்வதற்கு தேவையான மாவிலிருந்து சட்னி அரைப்பது வரை அனைத்திற்கும் இவர் ஆட்டுக்கல்லையே பயன்படுத்துகிறார்.
அதே போல் சமைப்பதற்கும் விறகடுப்பையே பயன்படுத்துகிறார். கேஸ் ஸ்டவ் உபயோகிக்கலாமே பாட்டியம்மா என்று கூறியதற்கு, "எனக்கு அதெல்லாம் உபயோகப்படுத்த தெரியாது. எனக்கு இது தான் வசதியா இருக்கு" என்று புன்னகையுடன் கூறுகிறார் இந்த 'இட்லி பாட்டி.'

இந்த 'ஒரு ரூபாய் இட்லி' பற்றிய செய்தி நாளடைவில் மற்ற ஊர்களுக்கும் பரவத் தொடங்கியது. இதனால் இந்த கடைக்கு பொலுவம்பட்டி, பூலுவம்பட்டி, தென்கரை மற்றும் மதிபாளயம் போன்ற பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வர தொடங்கியுள்ளனர். கமலாத்தாள் எதிர்காலத்தில் கூட இட்லியின் விலையை அதிகரிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார். 

கமலாத்தாள், "என் பேரக்குழந்தைகள் எனக்கு வயதாகிவிட்டதால் வியாபாரத்தை நிறுத்தச் சொல்கிறார்கள். என் உடல்நிலையை நான் கவனிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் மக்களுக்கு உணவு தயாரிப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருவதால் நான் நிறுத்த மறுக்கிறேன். இது என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது" என்று கூறுகிறார்.

"இங்கு பரிமாறப்படும் இட்லிக்கு ஒரு பாரம்பரிய தொடர்பு இருக்கிறது. நான் இங்கு சாப்பிடும்போதெல்லாம், என் பாட்டிமா எனக்கு உணவளிப்பதாக உணர்கிறேன்" என்கிறார் அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர். 

இதற்கிடையில், இந்த கடினமான காலங்களில் கூட, கமலாத்தாள், இட்லிகளை ஒரு ரூபாய்க்கு தொடர்ந்து விற்பனை செய்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து நிலைமை கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் இட்லியை ஒரு ரூபாய்க்கு வழங்க, முடிந்த வரை முயற்சி செய்கிறேன். எனது இட்லியின் விலையை நான் உயர்த்தமாட்டேன். பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு சிக்கித் தவிக்கின்றனர். எனவே அதிகமான மக்கள் வருகின்றார்கள். இங்கு வந்து எனக்கு உதவி செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறார்கள். நான் அதை ஒரு ரூபாய் இட்லி தயாரிக்க பயன்படுத்துகிறேன்" என்று கூறும் இந்த இட்லி பாட்டியின் சேவை சிறக்க வாழ்த்துவோம். 

அன்று தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை செலுத்திய செல்வந்தர்களுக்கு மத்தியில், தனக்கு பற்றாக்குறை இருந்தும் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளை அந்த ஏழை கைம்பெண் காணிக்கையாக செலுத்தினார் (மாற்கு 12:41-44). இன்று, தாங்கள் செய்யும் சிறு உதவிகளைக் கூட கைபேசியை  எடுத்து சென்று படம் பிடித்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு  விளம்பரம் எதிர்பார்க்கும் செல்வந்தர்களுக்கு மத்தியில், தன் மன நிறைவிற்காக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் இந்த ஏழை பாட்டி, ஆண்டவரின் கண் முன் விலையேறப்பெற்றவராய் விளங்குகிறார்.

நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய செல்லும்போது கைபேசியை எடுத்து செல்கிறோமா? ஆண்டவரை எடுத்து செல்கிறோமா? சிந்திப்போம்......

Add new comment

1 + 1 =