Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ரேமண்ட் என்னும் வாழ்வியல் கல்வி | The Sad Demise of Rev. Fr. Raymond Ambroise
இவருடைய அடங்கமறுக்கும் துணிவே ரேடியோ வேரித்தாஸ் ஆசியா இணையதள வானொலி என்ற அமைப்பு. எந்த ஒரு வரலாறும் பண்படுவதும், வாழ்விற்கான நம்பிக்கையைக் கொடுப்பதும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் இருப்பதால்தான்.
இம் மனிதர்கள் தங்களைக் கடந்து சிந்தித்து, வரும் தலைமுறைக்கு எதிர்நோக்கைக் கொடுக்கும் ஞானம் பெற்றவர்களாக இருப்பதால் இவர்களை மாமனிதர்கள் என்று அழைக்கின்றோம். இவர்கள் பல்வேறு திக்கற்ற, திசைதெரியாத மக்களின் வாழ்வில் மகிழ்வை, வாழ்விற்கான நம்பிக்கையை கொடுக்கும் மாபெரும் வல்லமையை தன்னகத்தே உருவாக்கிக்கொண்டவர்கள். இவர்களால் மட்டுமே வரலாறு, நல்வாழ்விற்கான வழிகாட்டியாகச் செதுக்கப்படுகின்றது. அத்தகைய நல்மனிதர்களில் ஒருவர்தான் அருள்பணியாளர் ரேமண்ட் அம்புரோய்ஸ் அவர்கள்.
இலக்கை நோக்கியத் தேடல்
பாண்டிச்சேரி மறைமாவட்டத்தில் பிறந்திருந்தாலும், தன்னுடைய மொழியைத் தாண்டி, கலாச்சாரத்தைத் தாண்டிப் பணிசெய்ய உந்தப்பட்டவராக, ஆந்திரா மாநிலத்தில் ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தில் குருவாக திருநிலைப்படுத்தத் தன்னையே பணித்தார்.
இவருடைய குடும்பத்தினர் தாய்மொழியாம் தமிழ் மொழியின்மீது அளவில்லாப் பற்றுக் கொண்டவர்கள். இவருடைய சகோதரர் செம்மொழியாம் தமிழ்மொழியின் பழமையையும், அதன் எழுத்துருக்களையும் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அதனடிப்படையில் ஒரு சிறுபுத்தகத்தையும் தமிழுக்குக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்வியலில் அடிப்படை சிந்தனை மாற்றம்
இறைப்பணியில் நிறைவாய் பணிசெய்ய வெகு தொலைவு சென்ற இவருக்கு மொழியும், கலாச்சாரமும் ஒரு தடையாக இல்லை. உணவையும் கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் தனதாக்கிக் கொண்டு ஏழைகளின் முன்னேற்றத்திற்காய் வாழ்ந்தார். கடவுள் அன்பானவர் என்பதை மக்களுக்கு வாழ்வியல் அனுபவமாக ஊட்டிக்கொடுத்தார்.
கடவுள் எல்லோரையும் அன்பு செய்கிறார் என்பதை அடித்தட்டு ஏழை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று வறியோறின் விடுதலைக்காய் அதிலும் குறிப்பாக பெண்ணிய விடுதலைக்காய் அயராது பாடுபட்டு உழைத்து, அவர்களின் ஆளுமையை வெளிக்கொணரும் அமைப்புக்களை அவர்களுக்கு உருவாக்கிக்கொடுத்தார். மக்களின் அடிமைப்படுத்தும் அடிப்படை சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். பெண்கள் தங்களும் சமூகத்தில் போராடி வாழ்வில் உயர்ந்து நிற்கலாம் என்பதனைச் சொல்லிக் கொடுத்தார், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தினார், அவர்களை உலகிற்கு வாழ்ந்துகாட்டப் பணித்தார்.
வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டவர்
செல்லக்குழந்தைகள் என்று அழைக்கப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதுமையில் அனாதையாக கைவிடப்படுகிறவர்களுக்காகவும் ஒரு இல்லத்தை நிறுவினார்.
தான் இவ்வுலகில் மறைந்தாலும், அதாவது இன்று, சமூகத்தால் வாழ்வின் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட இவர்கள் வாழ்வு தொடர்ந்து மகிழ்வானதாக அமைவதற்கான சூழலை உருவாக்க, அனைத்து சமய சகோதர்களையும் நிர்வாகக்குழுவில் இணைத்து என்றும் அடைக்கப்படமுடியாத இல்லமாக மாற்றினார்.
உயர் மனிதர்களும் அவர்களுடைய விழுமியங்களும் மண்ணோடு மறைவதில்லை, மாறாக தலைமுறைதோறும் வாழ்ந்து காட்டப்படும் என்பதற்கு இது ஒரு அரிய எடுத்துக்காட்டு.
முதிர்வயதில் இளமையின் தேடல்
ஆசிய ஆயர்பேரவைக் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலராகப் பணியாற்றிய இவர், ரேடியோ வேரித்தாஸ் ஆசியா வானொலியின் 50 ஆவது ஆண்டின் நிறைவை நிறைவாகக் கொண்டாட திட்டமிட்டு செயல்படுத்தினார் . ரேடியோ வேரித்தாஸ் ஆசியா வானொலிக்கு இவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றும் அழியாத காவியம்.
ஒரு காலத்தில் மக்களின் வாழ்வின் அங்கமாக, மாற்றத்தின் ஊடகமாக இருந்த வானொலியை இன்றைய தலைமுறை மக்கள் தேடாதபோது, அவர் ஒரு இளைஞனைப்போல சமகாலத்தவர்போல சிந்தித்தார். வானொலியின் இடத்தை இன்று ஆளுகை செய்யும் சமூக ஊடகங்கள் வழியாக மீண்டும் மக்களின் சிந்தையை மெருகேற்றும் வாழ்வியல் புரட்சியை மேற்கொள்ள அவர் நினைத்ததின் விளைவே, ரேடியோ வேரித்தாஸ் ஆசியா வானொலியின் இணையதளப் பணி.
இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு துணிச்சல், இவருடைய அடங்கமறுக்கும் துணிவே ரேடியோ வேரித்தாஸ் ஆசியா இணையதள வானொலி என்ற அமைப்பு. ஆசியாவின் 21 மொழிகளில் மக்களின் வாழ்வை மேம்படுத்த, அவர்களின் பாதையை நெறிப்படுத்த முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது.
விண்ணகம் மகிழ மண்ணகம் அழ
இன்று அவர் மண்ணில் இறந்தாலும், விண்ணகம் தன் அன்புமகன் வாழ்வின் ஓட்டத்தில் வெற்றிவாகை சூடிக்கொண்டு வருவதைக் கண்டு மகிழ்கின்றது, பூரிப்படைகின்றது.
அதே வேளையில் மனிதனாக, இவ்வுலகில் தாம் பார்ப்பவர்களையும் பழகுபவர்களையும் வேறுபாடுகளின்றி அன்புசெய்யும் பக்குவம் பெற்று, பலருடைய வாழ்வின் அங்கமாக வாழ்ந்துவந்ததால் பல உள்ளங்கள் அழுகின்றன. அவருடைய இறப்பின் இழப்பினால் துன்புறுபவர்கள் அனைவருக்கும் எம் ஆறுதலையும் செபத்தையும் உறுதிசெய்கின்றோம்.
அதே வேளையில் நாமும் அவரைப்போல எளிய மனிதரர்களாக, வேறுபாடற்ற அன்பினை அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் பக்குவம் பெற்றவர்களாக, அடங்கமறுக்கும் துணிவுடன் வேலைசெய்கின்றபோது இறையருளை வேண்டிநிற்கும் நல்ல நம்பிக்கையார்களாக, எல்லா சமயத்தினரையும் அரவணைக்கும் பாங்குபெற்றவர்களாக, எல்லோருக்கும் நம்பிக்கையையும் எதிர்நோக்கினையும் கற்றுக்கொடுக்கும் போராளியாக வாழ்வோம் என்ற உறுதியளிப்போம். இறைவன் அனைவரையும் நிறைவுசெய்யட்டும்.
தமிழ்ப்பணிக் குடும்பம்
ரேடியோ வேரித்தாஸ் ஆசியா வானொலி
Add new comment