Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
யார் இவர்? இவரைத் தெரியுமா உங்களுக்கு?
கடவுளின் படைப்புகளில் மிகவும் அழகான படைப்பு இந்த ஹீரோ தான். இவருக்கு நிகராக உலகில் யாருமே இல்லை. இவரை போலவும் இந்த உலகில் யாரும் இல்லை. கடவுளின் பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர் இவர். மிகவும் துணிச்சல் மிக்கவராக இவருக்கு எதிராக எவராலும் நிற்க இயலாது.
இவரைப் போல பிறரை அன்பு செய்யவும் யாராலும் முடியாது, பிறரின் மனதை புரிந்துகொண்டு செயல்படவும் யாராலும் முடியாது. இவரைப் போல மன்னிப்பதில் வல்லவர் யாரும் இல்லை. இவரைப் போல நன்மை செய்பவர் யாரும் இலர்.
எப்போதும் புன்னைகையுடன் இருக்கும் அவர் முகத்தில் இறைவனின் சாயல் இருந்துகொண்டே இருக்கும். கனிவுடன் பேசும் பேச்சில் அவரின் இரக்கத் தன்மை மிளிர்ந்துகொண்டே இருக்கும்.
வாழ்வில் எவ்வளவு முறை தோற்றாலும், மீண்டும் முழு நம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ள தயாராகும் துணிவு மிக்க ஹீரோ இவர்!
யார் அந்த ஹீரோ? யாரை பற்றி இவ்வளவு பேச்சுக்கள்? தெரிந்து கொள்ள விரும்பினால் சற்று கண்ணாடியின் முன் சென்று நின்று பாருங்கள், அவரின் அழகிய உருவம் உங்கள் கண் முன் தோன்றும்.
ஆம்! உங்கள் கண்கள் காண்பது சரியே. அந்த ஹீரோ நீங்கள் தான்.
ஹீரோ என்றால் யார்? என்ன செய்தார் அவர்? ஒருவரின் வாழ்வில் தனது செயல்கள் மூலமாகவோ, சொற்கள் மூலமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துபவர் தான் ஹீரோ.
அப்படி ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் நீங்களும் ஹீரோ தான். அந்த ஹீரோவைப் போல் நான் ஆகா வேண்டும் என்று எண்ணாமல், நான் மற்றவருக்கு ஹீரோவாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.
முகம் பார்க்கும் கண்ணாடி கூட, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதையே தான் பிரதிபலிக்கும். அப்படி இருக்க, நாம் ஏன் பிறரை போல இருக்க ஆசிக்க வேண்டும்?
ஆண்டவர் நம்மை தனது சாயலில் படைத்தார். அப்டி இருக்க, நாம் ஏன் பிறரின் சாயலில் வாழ ஆசைப்பட வேண்டும்?
உங்கள் மனதிற்கு 'சரி' என்றுத் தோன்றுவதை துணிச்சலுடன் செய்யுங்கள். ஆசைப்படுகின்ற செயலை செய்வதற்கு காலம், நேரம், வயது தேவை இல்லை. அன்று கோலோனில் ஹார்லாண்ட் சாண்டர்ஸ் 65 வயதில் தன்னால் எதுவும் முடியாது என்று நினைத்திருந்தால், இன்று KFC என்ற ஒரு அடையாளம் இந்த உலகிற்கு வந்திருக்காது.
உங்களுக்குள் இருக்கும் ஹீரோவை வெளியில் கொண்டு வர வயது என்றுமே ஒரு தடை இல்லை.
பிறரை நம் ஹீரோவாக நினைக்காமல், நாம் பிறரின் ஹீரோவாக மாற முயற்சி எடுப்போம்!
Add new comment