Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
யாசகம் பெற்ற பட்டதாரி இளைஞர்
யாசகம் என்ற ஒன்று இழிவான ஒரு செயலாக தான் இன்று வரை கருதப்படுகிறது. ஆனால் யாசகம் எடுப்பவர்கள், வாழ்வு முழுக்க யாசகம் மட்டுமே தான் எடுக்கிறார்களா என்றால் அதற்கு 'இல்லை' என்ற பதிலை நமக்கு மிகுந்த நம்பிக்கையுடன் கொடுக்கிறார் அலங்காநல்லூரை சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர்.
தூத்துக்குடி மாவட்டடத்தை சேர்ந்தவர், தமிழரசன். பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு பெற்றோர் கிடையாது. தனது இரண்டு வயதில் தாய் மற்றும் தந்தையை இழந்தவர். தந்தையின் நண்பரின் உதவியால் விருதுநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்து தனது படிப்பை தொடங்கியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த இவர், வேலை தேடி சென்னை வந்தார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சாலையோரங்களில் தங்கியுள்ளார். இப்படி இருக்க ஒரு நாள் இரவில் உறங்கி கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் இவரின் உடைமைகள் மற்றும் கல்வி சான்றிதழ்களை திருடிவிட்டார்.
இதனால் என்ன செய்வதென்று அறியாது திளைத்து நின்ற தமிழரசன், வேறு வழி இன்றி யாசகம் பெற தொடங்கினார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக யாசகம் பெற்று வந்த இவர், அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். வந்த பணத்தில் தனது பசியை ஆற்றுவது மட்டுமில்லாமல், தன்னை போலவே பசியால் வாடும் சிலருக்கு உணவளித்து வந்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு செயல்பாட்டில் இருக்கும் நிலையில், சொந்த ஊரை நோக்கி புறப்பட்ட தமிழரசனால் மதுரையை தாண்டி செல்ல முடியவில்லை.
வேறுவழியின்றி, அலங்காநல்லூர் வந்து சேர்ந்த தமிழரசன், சென்னையில் தான் யாசகம் பெற்று சேமித்த தொகையில், வீடு வாடகைக்கு எடுத்து, மிதிவண்டி, தேநீர் பாத்திரம் போன்றவற்றை வாங்கி, தேநீர் விற்பனையை தொடங்கியுள்ளார். போதுமான வருமானம் தேநீர் விற்பனையின் மூலம் கிடைக்க தன் செலவிற்கு ஆகும் பணத்தை தவிர மீதமுள்ள தொகையில், ஏழை மக்களுக்கு உணவளித்து வருகிறார். இது குறித்து தமிழரசன் கூறும்போது, "தேநீர் விற்பனை செய்யும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்களை தயார் செய்கிறேன். உணவு கிடைக்காமல் நான் பட்ட கஷ்டத்தை யாரும் என் கண் முன் பட கூடாது என்பதற்காகவே இது போன்ற உதவிகளை செய்கிறேன். இந்த சேவை மனதிற்கு ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறது. வருங்காலத்தில், ஆதரவற்றோருக்கு இல்லம் அமைத்து, அவர்களை பாதுகாப்பதே எனது லட்சியம்" என்று தெரிவித்துள்ளார்.
Add new comment