மரங்களும் இவர்களும்!


"காடு அழியக் கல்மழை பொழியும்; நகரம் தாழ்நிலை அடைவது உறுதி" (எசாயா 32:19  ) 

மரங்கள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒரு அங்கமாய் மாறி விடுகிறது. ஆய்வுகளின்படி நமது பூமியில்  3.04  டிரில்லியன் மரங்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு வருடமும் சுமார் 15.3 பில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதற்காக நாம் என்ன செய்தோம்?. எழுதும் காகிதத்தில் இருந்து வீட்டின் சன்னல்கள் வரைக்கும் அனைத்திலும் மரத்தின் உதவி தேவைப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு மரத்தை வெட்டி அதிலிருந்து வரும் பொருட்களே. ஆனால் இப்படி நம் சுயநலத்திற்காக மரங்களை அழித்துக்கொண்டே போனால் எதிர்காலத்தில் நாம் சுவாசிக்கும் காற்றிற்காகக்கூட மரங்கள் இல்லாமல் போய்விடும். மரங்களை வாழ்வின் அங்கமாய் பார்க்கும் மனிதர்களை தவிர்த்து, மரங்களே வாழ்வு என்று வாழும் சில மனிதர்களும் இந்த பூமியில் உண்டு. யார் அவர்கள்? என்ன செய்தார்கள்? தெரிந்துகொள்வோம்.

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த, ஒன்னல்லி கிராமத்தில் வசிக்கும், துளசி கவுடா என்பவர் ஒரு காட்டையே பாதுகாத்து வருகிறார். இவர் ‘காடுகளின் கலை களஞ்சியம்’ என புகழப்படுகிறார். 72 வயதாகும் இவர், இதுவரை 40000 க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ளார். மரக்கன்றுகளை நட்டு அவற்றை தன் குழந்தைகைளை போல பாதுகாக்கிறார். கடந்த 60 ஆண்டுகளாக அவர் இந்தப் பணியை எந்த ஒரு எதிர்ப்பார்ப்புமின்றி செய்து வருகிறார். தான் வளர்த்த, வளர்கின்ற அனைத்து செடிகள் மற்றும் மரங்களின் வகைகளையும் அவற்றின் நன்மைகளையும், அந்த செடி அல்லது மரம் வளர்வதற்காக எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பது முதற்கொண்டு, துளசி அனைத்தையும் அறிந்துவைத்துள்ளார். தாவரங்களை பற்றிய இவரது அறிவு எந்த ஒரு தாவரவியலாளருக்கும் சலித்தது இல்லை. மக்களிடையே காடுகளை காப்பதற்கான விழிப்புணர்வை இவர் செய்து வருகிறார். துளசி, அலாக்கி பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர். தனக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே தந்தையை  இழந்துவிட்டார். வறுமையின் காரணமாக குழந்தை பருவத்திலிருந்தே கூலித் தொழிலாளியாக தனது தாயாருடன் வேலைக்கு சென்றார். இளம் வயதிலேயே கோவிந்தே கவுடாவை மணந்தார். ஆனால் அவர் சில ஆண்டுகளில் இறந்தார்.  வாழ்க்கையில், எல்லா முரண்பாடுகளையும் தாண்டி, நாட்டின் வளத்தை பாதுகாக்கும் இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது (2020) அளித்து பெருமைபடுத்தியுள்ளது.

இவர் ஒருபுறம் இருக்க, நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 வயதான பாக்கியம்மாள் என்பவர், ஈரோடு மாவட்டத்திற்கு அருகில் உள்ள வட்ட மலை முருகன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு அவற்றை பாதுகாத்து வருகிறார். இந்த 'மரங்களின் தாய்' கூறுகையில், "கோவைக்கு அருகில் இருக்கும் குங்காருபாளையம்  தான் எனக்கு சொந்த ஊர். எப்படி இந்த வட்டமலை முருகன் கோவிலுக்கு வந்தேன் என்ற நினைவு இப்போது இல்லை. கல்யாணம் நடந்தது. கணவர் இறந்துவிட்டார். பிள்ளைகள் கிடையாது. அவ்வப்போது கோவிலுக்கு வந்து போகும் மக்கள் தரும் உணவுகளை சாப்பிட்டுக்கொள்வேன். அப்போதெல்லாம் இது வெறும் பூமியாக இருந்தது. ஒரு நாள் குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்போது ஒரு புளியங்கன்று அதனுள் வேரோடு  இருந்தது. அதை கொண்டு சென்று கோவிலுக்கு பின்னால் நட்டு வைத்தேன். தினமும் தண்ணீர் கொண்டு வரும்போது ஒரு கையை தெளித்துவிட்டு வருவேன். மனதிற்கு ஒரு நிம்மதி. துணையில்லாமல் கிடந்த ஒரு பெண்ணுக்கு ஒரு துணை கிடைத்தாற்போல உணர்ந்தேன். அதனுடன் அமர்ந்து பேசத்தொடங்கினேன். காற்றோடு இசைந்து அதுவும் தலைகள் அசைத்து கேட்கும். பின்னர் இதுவே எனக்கு பிடித்த செயலாக மாறி விட்டது. இலுப்பை, புளி, வேப்பங்காய் போன்ற விதைகளை புதைத்து வைப்பேன். அவைகளும் செடியாக வளர்ந்து வரும். அப்படி வளர்ந்தது தான் இந்த மரங்கள் எல்லாம்" என்று மிகவும் பெருமையோடு கூறினார், பாக்கியம்மாள். "ஒண்டிக்கட்டையாக இருந்த என் வாழ்வில், 90 வயதிலும் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்க காரணம் இந்த மரங்கள் தான்" என்று கூறியவரின் கண்களில் ஆனந்தமும் பெருமையும் தெளிவாக தெரிந்தன.

நமது முன்னோர்கள் செல்வந்தர்களாக வாழ்ந்தார்களா என்பது நமக்கு தெரியாது. ஆனால் நிச்சயமாக ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பது அவர்களின் வாழ்நாட்களின் நீளம் நமக்கு உணர்த்தும். அதே நீண்ட ஆயுளை ஆரோக்கியமாக வாழ்ந்து அனுபவிக்க நாம் நமது வருங்கால தலைமுறைக்கும் விட்டு செல்வோம். அதற்கு நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது நட்டு வைப்போம். 

மரம் வளர்ப்போம்! மழைக்காக மட்டும் அல்ல நம் மழலைகளுக்காகவும்.....

 

Add new comment

11 + 5 =