பாலுவே உன்னிசையை நிறுத்துவிட்டதேனையா !


SPB

ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது

பாலுவே நீயும் பாட  வருவாயா 

தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு

நீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே!

 

மூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்

மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே

காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே

கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது!

 

சுந்தரத் தெலுங்கு சொக்க வைக்கும் தமிழென்று

இந்திய மாநிலத்தில் இருக்கின்ற மொழியெல்லாம்

வந்தமைந்த உன்னிசையால் வாரியே வழங்கினையே

பாலுவே உன்னிசையை  நிறுத்துவிட்ட  தேனையா!

 

பாலுநீ பாடவேண்டும் பலபேரும் கேட்கவேண்டும்

வாழவைக்கும் இசைவழங்க வரவேண்டும் எனநினைத்தோம்

ஆழநிறை காதலுடன் பார்த்திருந்தோம் பாலுவே

 அழவிட்டு போனதேனோ அலமந்து நிற்கின்றோம்! 

 

உன்னிசையைக் கேட்பதற்கு உலகமே காத்திருக்க

உன்பிரிவைக் கேட்டவுடன் உணர்விழந்தே நிற்கின்றோம்

மண்ணகத்தில் இசைகொடுக்க வந்துநின்றாய் வரமாக

எண்ணமெலாம் உன்நினைப்பே நிறைந்திருக்கே பாலுவையா!

 

பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே

பாடல்தர விரைவாக வந்திடுவாய் எனநினைத்தோம்

ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கும்

ஆடலின்றி பாடலின்றி ஐயாநீ போனதேனோ!

 

கற்பனையும் அழுகிறது கவிதைகளும் அழுகிறது

காந்தக் குரலோனோ காலனுனைக் கவர்ந்தானே

கலையுலகம் அழுகிறது கலைஞரெலாம் கதறுகிறார்

கண்ணீரை உந்தனுக்கு காணிக்கை ஆக்குகிறோம்!

 

அரங்கமெலாம் வெறுமையாய் ஆகிருக்கு பாலுவே

அரங்கதிரும் உந்தனிசை அடங்கியதே பாலுவே

அழவைக்கப் பாடினாய் ஆடிவைக்கப் பாடினாய்

அனைவருமே ஆடிநிற்க அழவிட்டு போனதேனோ!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

Add new comment

14 + 0 =