நிலையான அன்பு!


நமக்கு அருகில் இருப்போரின் அருமை என்றும் புரியாது என்பார்கள்!
அப்படி புரியாத புதிராய் நம் வாழ்வில் பலர் இருந்தாலும், நம்மோடு கூடவே என்றும் பயணிக்கும் நபர்களில் சிலர் நம் பெற்றோர். காலில் சக்கரங்கள் கட்டி பம்பரமாய் வாழ்க்கை பயணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாம், அந்த சக்கரத்தை கட்டிவிட்டவர்கள் நம் பெற்றோர் தான் என்பதை பல நேரங்களில் மறந்து விடுகிறோம். அவர்களுக்கான சமர்ப்பணமே இந்த படைப்பு!

முத்தாய் என்னை மூடி காக்கும்
ஈன்றோருக்கு இக்கவிதை சமர்ப்பணம்!

உருப்பெறா முன்னே என்னை உலகமாய்
கண்காணா முன்னே என் வாழ்நாளை 
தன் எதிர்கால கனவாய்
ஈர்ஐந்து திங்களின் தவமாய் 
தவத்தால் கிடைத்த வரமாய்
மரண வீதியின் தெருமுனை தழுவி 
பெற்றீரே என்னை சிசுவாய்

உதிரம் கொடுத்து உறக்கம் கெடுத்து 
அழகாய் வளர்த்தீர் நல் விதமாய் 
தவழ்ந்து இடம்பெயர 
தத்தி குரலெடுக்க 
எட்டி நடை பழக 
நித்தம் உன் விழிகளில் 
பட்டு ஒளிரும் பிம்பமாய்
பள்ளி தான் செல்கையில் தள்ளி 
நின்று மகிழும் ரசிகராய்

வீரம் ஏழும் வேளையில் தந்தை சாயலில்
பேச்சு மிகும் வேளையில் தாயின் நகலாய்
சிணுங்கி அழும் வேளையில் 
சிரித்து மகிழ்விக்கும்  கோமாளியாய் 
தோல் அமர்த்தி வான் உயர்த்தும்
உற்ற தோழனாய் 
இடை அமர்த்தி பண்பை விதைத்து 
பிழை பொறுக்கும் ஆசானாய் 
படிப்பளித்து பகுத்தறிவு தான் கொடுத்து 
பட்ட துயர் மறைத்து 
மேதை என என்னை செதுக்கினாய்

சிற்பி என உம்மை நினைத்திருந்தேன் 
வலி தாங்கும் உளியாய் நீரே ஆனீர்!
பெற்றதால் முற்றும் துரந்தளித்து 
ஞானி ஆனீர்!
அன்பு ஊற்றால் சுரக்கும் கேணி ஆனீர்!
என்றும் ஏற்றம் தரும் ஏணி ஆனீர்!
வாழ்க்கை கடலில் பயணிக்க உதவும் தோனி ஆனீர்!
பெற்றதால் உன் வாழ்வே நான் ஆனேன் 
உன்னை பெற்றதால் தானே நான் ஆளானேன்
சான்றோர்  யாவும் உம்மை போன்றில்லை 
சான்றோன் ஆயினும் உம்மை போற்றாத நாளில்லை!

 

படைப்பு
வே. குணசேகரி 

 

 

Add new comment

1 + 0 =