நினைத்தபடி வாழ்பவர்களும் நினைக்கும்படி வாழ்பவர்களும்


pixabay

கேள்விகளுக்கான சுதந்திரமும் வரையறையும் வரையறுக்க முடியாத இந்த புதுயுகத்தில் எனக்கும் சில கேள்விகள் தொடர் தேடலை என் வாழ்வில் உருவாக்கியிருக்கின்றன: இந்த உலகில் வாழும் பலர் தாங்கள் நினைத்தப்படி வாழ்கின்றார்கள், மற்றவர்களைப் பற்றி அக்கறையும் அன்பும் அற்று, சுயநலத்தில் நிறைசுகம் கண்டு, இவ்வுலக இன்பவனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், வாழ்ந்து இறந்துவிடுகிறார்கள். 

அதே வேளையில் சிலர் மட்டும் தம்மையே இழந்து, பிறருக்காக வாழ்ந்து, இறையாட்சி விழுமியங்களை இம்மண்ணில் விதைக்க பல்வேறு அநீதியான சிலுவைகளையும், துன்பங்களையும் அனுபவித்து, இறந்துவிடுகிறார்கள். சில வேளைகளில் கொடுமையான சாவினைச் சந்திக்கிறார்கள். 

புனேவில் ஞான தீப வித்யபீத் இறையியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அருள்பணியாளர் ஜார்ஜ் சுவாரஸ் பிரபு அவர்கள் தன்னை துறந்து கிறிஸ்துவின் வழியில் வாழ்ந்தவர், பிறரையும் வாழத்தூண்டியவர். ஒருநாள் மாலையில் உடற்பயிற்சிக்காக சலை ஓரத்தில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது நான்கு சக்கர வாகனம் மோதி அனாதையாக இறந்தார். யாராலும் அவற்றை ஏற்றக்கொள்ளமுடியவில்லை. பாசமுள்ள அண்ணன் அருள்பணியாளர் சேவியர் ஜெயசிங் அன்னையின் திருத்தலத்தில் தன் மனஉந்துதலால் தன்னையே தயாரித்துதான் இறைவனடி சென்றிருக்கின்றார் என்று நாம் கூறினாலும், அது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் அவருடைய வாழ்வு பலரின் வாழ்வில் புதிய வாழ்விற்கான வழிமுறையாக உயிர்ப்பின் செய்தியாக இருந்திருக்கிறார். அவர் உடல் இறந்தாலும் அவர் பலரில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். 

இந்நிலையில்தான் ஏன் இவர்களைப் போன்றவர்கள் எல்லோரையும்போல தன்மையம் கொண்டு, வாழ்ந்து அனுபவித்து செல்லவேண்டியதுதானே, இப்படி ஒரு வாழ்க்கை வாழந்திருக்கவேண்டும், திடிரென இறக்கவேண்டும் என்ற கேள்விதான் நம்மை உருக்குகின்றது.

சிந்தித்துப் பார்த்தேன். நல்ல மனிதர்களாக வாழ்பவர்களுக்கு புதிய வாழ்வு உண்டு, இறைவனோடு உண்டு. ஏனெனில் நல்லது செய்வதற்காக அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு அர்த்தம் என்ன? இத்தனை துன்பங்களை அனுபவித்து ஏன் இறக்க வேண்டும்? என்னும் கேள்விகளுக்கொல்லாம் விடை: நல்லவர்களாக வாழ்ந்து இறப்பவர்களின் இறப்பு நமக்கு உயிர்ப்புக்கான அர்த்தத்தைக் கொடுக்கின்றது. அவர்களைப்போல வாழ்பவர்களுக்கும் புதிய வாழ்வையும் தொடர்ந்து பயணிக்க உந்து சக்தியைக் கொடுக்கின்றது. அதுவே உயிர்ப்பு. அதே வேளையில் நல்ல மனிதர்கள் மற்றவர்களின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்கின்றார்கள். இறந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்; மற்றவர்களையும் அவர்களைப்போல வாழத்தூண்டுகிறார்கள்.

வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்த்தோமென்றால் சிலர்தான் இவ்வுலகில் உணரப்படுகின்றார்கள். சிலருடைய இறப்பானது (மார்ட்டின் லூத்தர் கிங், நெல்சன் மண்டேலா, புனித அன்னை திரேசா) உலக சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகக் கருதப்படுகின்றது. அவர்களின் வாழ்வை சற்று அலசிப்பார்த்தோம் என்றால், எல்லோரிடமும் உள்ள ஒத்தமை - இந்த மனிதர்கள் சுயத்தை பிறருக்க தியாகம் செய்திருக்கின்றார்கள், அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை நிலைநாட்ட முயற்சிசெய்திருக்கின்றார்கள், உலகை மேம்படுத்தும் வழியில் பயணித்திருக்கிறார்கள். 

அதே வேளையில் அதனால் வருகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் ஏற்க தயாராகவே இருந்திருக்கின்றார்கள். எனவே அவர்கள் வாழ்வு மூலம் இந்த புவியைக் கடந்த ஒரு புதிய வாழ்வு உண்டு என்பதனை பிறருக்கு உணர்த்திருக்கின்றார்கள். அந்த புதிய வாழ்விற்கான அடித்தளத்தை இங்கேயே இப்போதே தொடங்குவதற்கான வாழ்வுமுறையையும் விட்டுச்சென்றிருக்கின்றார்கள்.
விவிலியத்தில் தோபித்துவின் வாழ்வை சற்று அலசிப்பார்த்தோம் என்றால், அவர் தம் வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்ததுமட்டுமல்ல அதே விழுமியங்களை தலைமுறைதோறும் பின்பற்ற, அதன்வழியாக தலைமுறைதோறும் அவர்களோடு அவர் வாழ வழிசெய்திருக்கிறார் (தோபி 2:8; 4:16-18). 

புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் அழகாக கூறுவார்: “கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்தெலுதலின் மகிமையையும் அறியவும், அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.” கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் மகிமையை அறியவேண்டுமென்றால், நாம் அவருடைய துன்பங்களில் பங்கெடுக்க வேண்டும், அவருடைய நம்முடைய இறப்பானது அவருடைய இறப்பை ஒத்திருக்கவேண்டும். அப்படியென்றால் நாம் நாம் கிறிஸ்துவைப் போல நம்முடைய வாழ்வு அமைந்திருக்கவேண்டும். கிறிஸ்துவின் மனநிலையில் நாம் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தோம் என்றால் நம்முடைய இறப்பானது இப்பூமியில் பெரிய இழப்பாக கருதப்படும். உயிர்ப்பின் அர்த்தத்தை பிறருக்கும் கொடுக்கும். நாம் தொடர்ந்து நம்முடைய வாழ்வு முறையால் பிறரில் ஒரு புதிய வாழ்வாக வாழ்வோம். நாம் வாழும் அர்த்தமுள்ள வாழ்வு, தலைமுறைதோறும் வாழ்வின் அர்த்ததைக் கொடுக்கும். 

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும்; செய்ய எனக்கு ஆற்றல் உண்டு (பிலி 4:13).
 

Add new comment

2 + 16 =