கலாமின் வழியில் காலம் கடந்த சேவை!


"எந்த சேவையும் செய்யவில்லை என்றால் வாழும் வாழ்க்கையில் அர்த்தமில்லை" -மணிகண்டன்.

சட்டை பாக்கெட்டில் கலாம் படம், மொபைல் ரிங்டோனில் கலாம் பெயர், மனதில் கலாமின் கொள்கைகள் என அவர் காட்டிய வழியில் வளம் வருகிறார், புதுச்சேரியை சேர்ந்த இந்த இளைஞர்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்ற நபர். இந்த ஆம்புலன்சில் குறிப்பாக கர்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களை கிராமப்புறங்களில் இருந்து நகரத்தின் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கிறார்.

இந்த ஊரடங்கு காலத்திலும் கர்பிணிப் பெண்கள் உட்பட 20 பேரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதுவரை இந்த ஆம்புலன்சில் பிரசவம், விபத்து என்று பல்வேறுபட்ட சூழலில் இருந்து 650 பேரை காலத்தோட மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷனில் டிப்ளோமா வைத்திருப்பவர், மணிகண்டன். எவ்வாறு இந்த சேவையை தொடங்க ஆர்வம் வந்தது என்று வினவியபோது, "கடந்த 2016 இல் பத்துக்கன்னு பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் எனது உடன் பிறந்த சகோதரர் உயிரிழந்தார். விபத்து நடந்து பல நேரம் ஆகியும்,ஆம்புலன்ஸ் வராததால் சகோதரன் எங்களை விட்டு பிரிய நேர்ந்தது. பத்துக்கன்னு பகுதியில் பல இடங்களில் வளைவான சாலைகள் என்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழும். ஆனால் தொடர்பு கொள்ளும் வகையில் அருகிலேயே ஆம்புலன்ஸ் சேவை கிடையாது. ஒருவேளை ஆம்புலன்ஸ் வர வேண்டும் என்றால், நகர புறத்தில் இருந்து தான் வர வேண்டும் என்ற நிலை இருந்தது. எனவே தான் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி அதை இலவசமாக மக்களுக்காக இயக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று தனது வாழ்வில் நடந்த துயரமான சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார், மணிகண்டன்.

கலாம் டிரஸ்ட் என்று பெயரிட்ட இவரது இரண்டு அம்புலன்ஸ்கள் கிராமப்புறங்களை விரைவாக அடைவதற்காக பத்துக்கன்னு சந்திப்பு மற்றும் வில்லியனூர் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோன நோயின் பரவலால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மணிகண்டன் ஆம்புலன்ஸில் தான் வசித்து வருகிறார். காலை, மதியம், இரவு என மூவேளையும், போலீசார் இவருக்கு உணவளித்து வருகிறார்கள். "நான் தவறாமல் மருத்துவமனைகளுக்கு செல்வதால், நான் என் வீட்டை விட்டு விலகி இருக்கிறேன். ஆம்புலன்ஸில் என்னிடம் ஆறு செட் ஆடைகள் உள்ளன. சாலையோர குழாயிலிருந்து குளித்த பிறகு நான் அவற்றை மாற்றிக்கொள்வேன்" என்று கூறுகிறார், மணிகண்டன்.

 ஆம்புலன்ஸ் சேவை மட்டுமின்றி, இறந்தவர்களை கொண்டு செல்லும் 'சொர்க்கரதம்' வாங்கணும் இவர் வைத்துள்ளார். இதுவும் கலாம் டிரஸ்டின் கீழ் செயல்படுகிறது.

இந்த ஆம்புலன்ஸ் மற்றும் சொர்க்கரதம் வாகனங்களுக்கான சேவைக்கு மாதம் குறைந்தது 45000 ரூபாய் செலவாகிறது. அவை அனைத்தும் மணிகண்டன் தனது சொந்த செலவில் தான் செய்து வருகிறார்.  இவரது குடும்பத்தினர் இன்னும் ராமநாதபுரத்தில் ஒரு குடிசையில் தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக மணிகண்டன் கூறுகிறார். "எந்த சேவையும் செய்யவில்லை என்றால் வாழும் வாழ்க்கையில் அர்த்தமில்லை" என்று தனது சேவைக்கான தாரக மந்திரத்தை முன் வைக்கிறார், மணிகண்டன் அவர்கள்.

அன்னை தெரசா கூறுவது போல, ஒருவருக்கு நாம் எவ்வளவு உதவி  செய்கிறோம் என்பதை விட, செய்யும் செயலில் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதே மிகுதியாய் காணப்படும். 'நம்மிடம் கேட்டு விட்டார்களே' என்ற முக சுழிவுடன் பிறருக்கு உதவாது, 'இனி இவர் யாரிடமும் எதுவும் கேட்க வேண்டிய தேவை வர கூடாது' என்ற நல்லெண்ணத்துடன்  பிறருக்கு கொடுக்க நாம் தயாரா?

Add new comment

15 + 3 =