Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கண்பார்வை இழந்தும் ஓவியராகவே இருந்த ஆஸ்கார் கிளாட் மோனட் | claude monet
பிரான்ஸ் நாட்டில் தொடங்கிய நவீன கால இம்ப்ரெசனிஸ்ட் ஓவியங்களுக்கு சொந்தக்காரர்தான் மோனட். இன்று அவருடைய ஓவியங்கள் பெரிய புகழ்பெற்ற இடங்களிளெல்லாம் தொங்கிக்கொண்டிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுத்து அவருடைய ஓவியங்களை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் இந்த ஓவியங்களைத் தொடங்கியபோது, புகழ்பெற்ற ஓவியர்களால்கூட புறந்தள்ளப்பட்டார், கேலி செய்யப்பட்டார். ஆனால் அவர் விட்டுவிடவில்லை, தொடந்து வரைந்துகொண்டே இருந்தார். நவீன கால ஓவியங்களில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த பெருமைக்குச் சொந்தக்காரராக இன்றும் திகழ்கின்றார்.
14 நவம்பர் 1840 இல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். சிறுவயதிலிருந்து ஓவியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவரை அவருடைய தாய் உற்சாகப்படுத்தினார். ஆனால் அவருடைய தந்தை அவர்களுடைய பலசரக்கு கடை வியாபாரத்தில் கருத்தாய் இருக்கும்படி வற்புறுத்தினார். 1857 இல் அவருடைய தாய் இறந்தபின்பு, அவருடைய தந்தையைவிட்டு பிரிந்து தன்னுடைய அத்தையின் வீட்டிலிருந்து ஓவியக்கலைப் படிக்க ஆரம்பித்தார். 1861 இல் இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அப்பொழுது அவருடைய தந்தை மோனட் கலையிலுள்ள ஆர்வத்தை விட்டுவிட்டால் அவரை பணம்செலுத்தி இராணுவத்திலிருந்து மீட்பதாக சொன்னார். ஆனால் மோனட் தன் தந்தையின் பரிந்துரையை நிராகரித்தார்.
பாரம்பரிய ஓவியங்களில் நாட்டம் இல்லாததால் இவர் புறந்தள்ளப்பட்டார். தொடர்ந்து தன்னுடைய ஓவியங்களைத் தீட்டிக்கொண்டே இருந்தார். நவம்பர் 1890 இல்
சொந்தமாக வீடுவாங்கினார். தன்னுடைய வருமானத்தையெல்லாம் அங்கு தோட்டம் அமைப்பதற்கும் அதை பராமரிப்பதற்கும் செலவிட்டார். அவருடைய தோட்டத்தில்தான் புகழ்பெற்ற வாட்டர் லில்லீஸ் ஓவியத்தை 1899 ஆம் ஆண்டு வரைந்தார்.
1908 ஆம் ஆண்டிலிருந்து அவருடைய பார்வை குறைய ஆரம்பித்தது. 1922 இல் அவருக்கு கண்பார்வை இல்லாமலே போனது. அப்பொழுதும் அவர் ஓவியங்கள் வரைந்தார். 1923 ஆம் ஆண்டு இரண்டு கண்களிலும் அறுவைசிகிச்சை மேற்கொண்டார். கண்கண்ணாடி பயன்படுத்திப் பார்க்க ஆரம்பித்தார். 5 டிசம்பர் 1926 ஆம் ஆண்டு மோனட் இறந்தார். 1966 ஆம் ஆண்டு மோனட்டின் மகன் இவருடைய வீடு, தோட்டம், வாட்டர்லில்லி குளம் ஆகியவற்றை பிரான்ஸ் நுண்கலை அகாடமிக்கு கொடுத்தார். இன்று அது ஓரு சுற்றுலாத்தலமாக இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ஏலத்தில் அவருடைய ஓவியம் 110.7 மில்லியன் டாலருக்கு விற்றது. அதை விற்றவர் 1986 ஆம் ஆண்டு 2.53 மில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தார். பிரெஞ்ச் உணர்வுவாதத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
Add new comment