இந்த சிறப்பு குழந்தையின் வளர்ச்சியில் மருத்துவதைத் தாண்டி உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருந்தது?
இது ஒரு புறம் சென்று கொண்டே இருந்த நேரத்தில் அவனுடைய வளர்ச்சியை நான் கவனிக்க நேர்ந்தது. இந்த வலிப்பு வந்ததினால் என் மகனுக்கு அவனுடைய வளர்ச்சியிலே தாமதம் ஏற்பட்டது. வயதுக்கு ஏற்ற வளர்ச்சி குறைவுபட்டது. என் மகன் எழுந்து நிற்க ஆரம்பித்தான் ஆனால் நடை பயில முற்படவில்லை. அதற்குப் பின்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள், என் மகனுக்கு இதுபோன்ற செய்முறை இயக்கங்களை தரவேண்டும் என்று கூறினார்கள். எனக்கு இந்த சிறப்பு குழந்தைகளை பற்றி தெரியாது. அவர்களுடைய உலகத்தைப் பற்றியும் தெரியாது. எனக்கோ மனதளவில் இன்னும் ஆறு மாதங்கள் சென்றால் என் மகன் சரியாகி விடுவான், வளர்ச்சி வந்துவிடும் என்று ஒரு சாதாரண தாய்க்கே உண்டான அந்த எதிர்பார்ப்போடு என் மகனை இங்குமங்குமாக, அவனுக்கு உண்டான செய்முறை இயக்கங்களுக்கு அழைத்துச் செல்வதும் வருவதுமாக இருந்தேன். ஒரு தாயின் மனநிலையில் நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். நான் என் தாயார் வீட்டில் இருந்து கொண்டு தான் இப்பேர்பட்ட மருத்துவ உதவிகளை என் மகனுக்கு வழங்கிக் கொண்டிருந்தேன்.
நான் என் தாயார் வீட்டிற்கு அருகில் இருந்த அந்த மருத்துவமனைக்கு என் குழந்தையை கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது அதே மருத்துவமனையில் சிறப்பு பள்ளி இருந்ததனால் அங்கேயே என் மகனையும் சேர்த்து பயிற்சியையும் செய்முறை இயக்கத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டேகால் வயதிலிருந்து என் மகனை நான் அங்கு அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்.
என் கணவரும் கூட நீ அங்கேயே இரு, குழந்தைக்கு சரி ஆனால் அது மிகவும் சரியானதாக இருக்கும், பரவாயில்லை, என்று முழுமூச்சில் ஒத்துழைப்போடு இருந்தார். இதற்குப் பின்புதான் இந்த சிறப்பு குழந்தைகள் என்ற ஒன்று இருக்கின்றது. இவர்களுடைய உலகம் முற்றிலும் வேறு. இதில் பல பிரிவுகளில் குறைபாடு இருக்கின்ற குழந்தைகள் இருக்கிறார்கள் என்று இந்த உலகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற ஒரு பள்ளியும் பயிற்சியும் குழந்தைகளுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.
குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே போதுமானதாக இருக்காது. இதுபோன்று செய்முறை இயக்கங்களும் தொழில்முறை இயக்கங்களும் தேவைப்படும் என்பதை நான் அறிந்து கொண்டேன். பின்பு வாழ்நாள் முழுவதும் தாயார் வீட்டிலேயே நான் இருக்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டு என் கணவர் வீட்டுக்கு வந்துவிட்டு அதற்கு பின்பு அங்கிருந்து போய் வரக்கூடிய தூரத்தில் இருந்த மிகப் பெரிய மருத்துவமனைக்கு என் மகனை மாற்றி மருத்துவ உதவிகளையும் சிறப்பு கல்வியையும் இயன்முறை செய்முறை இயக்கங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தேன். இதற்கு மத்தியிலும் நான் இன்னும் பிற பள்ளிகளுக்கு என் மகனை அழைத்துச் செல்வேன். காலையில் பொழுது விடிய, வேண்டிய உணவை சமைத்து எடுத்துக் கொண்டு தண்ணீர் மற்றும் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு, என் மகனை அழைத்துக் கொண்டு இவ்வாறாக ஒவ்வொரு மருத்துவராக சுற்றிவிட்டு நான் மாலையில் வருகின்ற பொழுது, என் மகனுக்காக நான் ஓடுகிறேன், ஓடுகிறேன் என்ற ஒரு மனத் திருப்தி மட்டுமே இருந்தது. நான் சென்னையில் மையப் பகுதியில் தாண்டிய பகுதிகளுக்கும் ஒரே நாளில் சென்று பல்வேறு இடங்களில் பல்வேறு மருத்துவர்களை பார்த்து மீண்டும் சென்னையை தாண்டி இருக்கின்ற என்னுடைய கணவர் வீட்டுக்கு என்று கிட்டத்தட்ட ஒரு நாளிலேயே 50 60 கிலோ மீட்டர்களை என் மகனோடு எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சென்று வந்து கொண்டிருந்தேன். என் மகன் குணமானால் போதும் என்ற அந்தத் தாயின் மனதோடு.
ஏன் இவ்வாறு நிறைய மருத்துவமனைகளுக்கு பள்ளிகளுக்கு சென்று வந்தேன் என்றால் இவ்வாறாக என் மகனுக்கு சிறப்பான தகவல்களை மருத்துவ உதவிகளை அவனுக்கு கொடுத்தால் விரைவாக குணமாகிவிடும் என்று அந்த தாய் மனதோடு ஓடிக்கொண்டிருந்தேன். என் குழந்தையை நான் கொண்டு வரவேண்டும் என்று இருந்தேன்.
இதற்கு பின்பு நீங்கள் வேலைக்கு செல்ல விரும்பினீர்களா? உங்கள் கணவர் சம்மதித்தாரா?
இதற்கு மத்தியில் எனக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது. நான் அந்த வேலையில் ஆறு மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். தினமும் காலையில் என் மகனை என் தாயார் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து நான் ஏன் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் மகனுக்கு என்று ஒரு சிறப்பு கல்வி ஆசிரியரை நியமித்து நான் முன்பு எப்படி பயிற்சியை கொடுக்க வேண்டும் என்று இருந்தேனோ அந்த பயிற்சியை தொடர்ந்து என் மகனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் என் மகனுக்காக பொருளாதார உதவிகளுக்காக நான் வேலைக்கு செல்வதும் என் கணவர் வேலை செய்து சம்பாதிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எண்ணத்தை கருத்தில் கொண்டு நானும் என் கணவரும் தொடர்ந்து வேலையையும் வீட்டையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
வெள்ளிக்கிழமை மாலை என் குழந்தையை அழைத்துக்கொண்டு என் கணவர் வீட்டுக்கு வந்துவிடுவேன். வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் என் குழந்தை என்னோடு இருப்பான். திங்கள் காலையில் மீண்டும் அவனைக் கொண்டுபோய் என் அம்மா வீட்டில் விட்டுவிட்டு நான் வேலைக்கு போவேன். இவ்வாறாக நாட்கள் சென்றன.
ஆனால் நான் என் குழந்தையுடன் இருந்து கற்றுக் கொடுப்பதனால் ஏற்பட்ட வளர்ச்சி, நான் இல்லாத பொழுது வேறு ஒருவரின் வழியாக அது ஏற்படவில்லை. அந்த இலக்கை எட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் என் பிள்ளை முன்னேற்றம் அடைவதைவிட பின்னோக்கி செல்ல ஆரம்பித்தான். எனவே என் கணவர் நாம் சம்பாதிப்பதே நம் மகனுக்காகத்தான். அவனுக்கு நம் சம்பாதித்தால் எந்த பயனும் இல்லை மாறாக நம்முடன் இருந்தால் பயன் இருக்கிறது என்கின்ற பொழுது, நாம் ஏன் வேலைக்கு சென்று கொண்டிருக்க வேண்டும் நீ வேலையை விட்டுவிட்டு குழந்தையோடு இரு, அது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது என்று கூறினார். நானும் இது சரி என்று உணர்ந்து கொண்டேன். எனவே அரசாங்க வேலையை விட்டுவிட்டு என் பிள்ளைக்காக நான் ஒரு தாயாக தொடர வேண்டுமென்று முழுநேரமும் என் பிள்ளைக்காகவே செலவிட முற்பட்டேன்.
Add new comment